International Seminar on Religious Harmony and Cooperation for Social Justice

INVITATION TO ALL – அனைவரும் வருக !

Department of Buddhist Studies, Chennai University organised a International Seminar. Coming 19th & 20th, Thanthai Periyar Hall, Chennai University. My Paper is BAVUDDHATHIN NADAIMURAIYIL PALI MOZHI: PANDITHAR AYOTHIDASARAI MUNVAITHTHUபவுத்தத்தின் நடைமுறையில் பாலி மொழி: பண்டிதர் அயோத்திதாசரை முன்வைத்து.

Advertisements
Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஜல்லிக்கட்டை முற்றிலும் தடை செய்யக்கோரி கடிதம் அனுப்புங்கள்

ஜல்லிக்கட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசின் விலங்குகள் நல வாரியமும், தலித் எழுத்தாளர்களான ஜல்லிக்கட்டு ஒழிப்புக் குழுவினரை உள்ளடக்கியவர்களும்  இணைந்து 2000 -த்திலிருந்து இதனை எதிர்த்து வருகிறோம் என்பது அறிந்ததே.  2002 – ல் இத‌ற்கான வழக்கு தகுந்த ஆதாரங்களுடன் உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விளைவாக ஜல்லிக்கட்டு மறு சீரமைப்பு என்பதை உருவாக்கி சென்னை உயர் நீதி மன்றம் 2008 -இல் தடை விதித்தது. இதனை எதிர்த்து ஜல்லிக்கட்டு போராட்டக் குழு, வீரவிளையாட்டு பாதுகாப்பு பேரவை  உருவாக்கப்பட்டு, மத்திய அரசின் விலங்குகள் நல வாரியம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்யக்கோரி மீண்டும் உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதி மன்றமும் சில ஒழுங்கு முறைகளை விதித்து மீண்டும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் ஒப்படைத்தது. இதே கால கட்டத்தில் மத்திய அரசின் விலங்குகள் நல வாரியமும் வழக்கில் இணைந்து தன் தரப்பு வாதங்களை முன் வைத்து பிறகு உச்ச நீதிமன்றத்திலும்  வழக்கை பதிவு செய்தது. அதன் அடிப்படையில் சில விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த வழங்கிய அனுமதியை மாவட்ட நிர்வாகம் ஏற்று இந்த ஆண்டும் (2012) ஜல்லிக்கட்டு நடத்த ஆர்வம் காட்டியது. தற்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் திருமிகு. சகாயம் தனது தமிழ்ச்சாதி விசுவாசத்தின் நன்றிக்காக அளித்த அனுமதியை எதிர்த்து, மத்திய அரசு வழக்குரைஞர் ரவீந்திரன் கடந்த 3 ஆண்டுகளில் கொல்லப்பட்ட 43 பேரின் சாவு ஆதாரங்களை முன் வைத்து மீண்டும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொட‌ர்ந்து வாதாடினார். இதனை விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திருமிகு.சித்ரா வெங்கட்ராமன், கருப்பையா ஆகியோர் ஜல்லிக்கட்டு நடத்த ஒரு இடைக்கால அனுமதியை மதுரை கிளை உயர்நீதி மன்றத்திலிருந்து இன்று (12.1.2012) பிறப்பித்துள்ளனர்.

அதாவது மதுரை(அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு), சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஜனவரி 30 வரை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதுவரை நிகழும் ஜல்லிக்கட்டை வீடியோ படம் எடுத்து மதுரை உய‌ர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பின்னரே 30 -ஆம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

தை முதல் நாள் இனி தமிழர்களின் வருடப் பிறப்பு அல்ல, சித்திரை தான் தமிழ் ஆண்டு என அ.தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தவுடனே ஆணை பிறப்பித்து விட்டது. ஆனால் ஜல்லிக்கட்டை மட்டும் தமிழர் பண்பாடு என வாதிடும் அரசு வழக்கறிஞர் குருபழனிக்குமாரின் வாதம் கடும் கண்டண‌த்துக்குறியது. ஜல்லிக்கட்டு விளையாட்டை விலங்குகள் பாதுகாப்பு என்கிற பார்வையில் தலித்துகள் எதிர்க்கவில்லை. அது உள்ளூரில் எத்தகைய சாதிய வன்மத்தை தமிழ்ச்சாதிகளுடனும், தலித்துகளுக்கிடையேயும் உருவாக்கி கடந்த காலங்களில் சாதிய வன்கொடுமைகளை உருவாக்கியுள்ளது  என்பதை அலங்காநல்லூர், பாலமேடு  ஜல்லிக்கட்டை முன் வைத்து நாம் வலியுறுத்தி வருகிறோம்.

ஜல்லிக்கட்டில் தலித்துகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. சாவுக்குப் பறையடித்து இழவு செய்தி சொல்வதை நிறுத்தியது போல், ஜல்லிக்கட்டு காளை அழைத்து வர பறையடிப்ப‌தை நிறுத்த வேண்டும். கேவலம் ஒரு முழம் துண்டுக்காக முதல் மரியாதைக் குழுவில் இடம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். காளை அடக்குவதையும், வளர்ப்பதையும் கைவிட வேண்டும். நாட்டுப்புறவியல் என்று சொல்லிக் கொண்டு ஆய்வில் நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். விலங்குகளை வதைப்படுத்துவதற்கு எதிராகவும், உயிர்ப்பலிக்கு எதிராகவும் போராட வேண்டும் என்கிற நோக்கில் ஜல்லிக்கட்டு விளையாட்டை முற்றிலும் தடை செய்யக்கோறும் உங்களின் கடிதத்தை ஜனவரி 28 – ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

1) திருமிகு. சித்ரா வெங்கட்ராமன்/ திருமிகு. கருப்பையா
தலைமை நீதிபதிகள்
சென்னை உயர்நீதி மன்றம் (மதுரை கிளை)
எண்பதடி முதன்மைச்சாலை
உல‌கநேரி, மதுரை

2) மாவட்ட ஆட்சியர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மதுரை -1

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஆஷ் படுகொலை: மீளும் தலித் விசாரணை (எனது நூல்)

பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் திருநெல்வேலி பகுதியில் நிலவிய சமூகச்சூழலை அக்கறையோடு திரும்பிப்பார்க்கும்போது ஒடுக்கப்பட்ட தலித், சாணார் மக்களின் எழுச்சியை கூர் உடையச் செய்த அன்றைய சமூகம், அரசியல், மதம் இலக்கியம், பொருளாதாரம் போன்ற வரலாற்றின் மீது இதுவரை கொண்டிருந்த பார்வைகளில் நேர் – எதிர் மாற்றங்களை செய்ய வலியுறுத்தும் “திருநெல்வேலி சதி வழக்கு” பற்றிய ஒரு நூல் “ஆஷ் படுகொலை: மீளும் தலித் விசாரணை”. குறிப்பாக 1911 வருஷம் ஜூன் மீ 17 உ அன்று வாஞ்சிநாதனின் பக்த கேடிகளால் மணியாச்சியில் சுட்டுக்கொல்ல‌ப்பட்ட கலெக்டர் ஆஷின் படுகொலைக்கான காரணங்களையும், படுகொலையில் ஈடுபட்ட சராசரி பார்ப்பனர்களின் எடைக்கு எடை வேளாளர்களின் சாதிய சேட்டைகளையும், படுகொலைச் சதியில் ஈடுபட்டு தனது சர்வ தேசிய சகாக்களாலும், தமிழ்ச் சாதிய செல்வாக்களாலும் தப்பித்துக்கொண்ட, இரண்டாவதாக கப்பலோட்டியத் தமிழன்  வ.உ.சிதம்பரம் பிள்ளைமார்  போன்ற விடுபட்டக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நூறாண்டுக்குப் பின்னும் கிரிமினல் வழக்கில் பதிவு செய்ய வலியுறுத்தும் உண்மை கண்டறியும் தலித் விசாரணை.

35 -ஆவது சென்னை புத்தகக் காட்சி
இடம்: புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி (பச்சையப்பா கல்லூரி எதிரில்) சென்னை
நாள்: 2012 சனவரி 5 தொடங்கி 17 வரை

கிடைக்குமிடம்: புலம் வெளியீடு – கடை எண் – 447

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இப்போல்லாம் அவாள் மலைச்சாமியோட‌ மயான காண்டம் யூஸ் பண்றா !

ஒசக்க மத்தியானம் பன்னெண்டு மணி இருக்கும்.  தத்தனேரி சுடுகாடு அம்புட்டும் ஒரே பொகை.  அஞ்சு சுடலை கொட்டியிலும் பொணம் ஒன்னு விட்டு ஒன்னு பதமா எரிஞ்சிக்கிட்டிருக்க ஒத்த கொட்டி மத்தர‌ம் வெறகு, எருவாட்டியோட‌ வெறிச்சோடி கெடந்திச்சு. யாருக்காண்டியோ!

அங்கனயே கரண்ட்டு அடுப்புலயும் பொணம் பொசுக்குறாங்க. ஒரே நேரத்தில‌ ரெண்டு அடுப்புல பொணம் எரிக்கலாம்.  ஒத்த அடுப்புல பொணம் எரிஞ்சி, கூண்டு வழியாகப் பொகையை கக்க‌, எதிர்த்தக்கூடி இருந்த ரேடியா செட்ல ‘சமரசம் உலாவும் இடமே’ பாட்டு படிச்சிக்கிட்டிருந்திச்சு.  மனுசன் வாழ்ந்தாலும், பொழச்சாலும், செத்தாலும் அதுக்கேத்த ரகத்துல சினிமாப்பாட்டுங்களுக்கு ஒன்னும் இங்க கொறையிருக்காது.

டீ, காப்பி, சிகரட் அது-இதுகளுக்கின்னு கடை கண்ணி அங்கனயே இருக்கு. பாத்தா சுடுகாடு மாதிரி தெரியாது. ஊர் திருவிழா மாதிரியே கள கட்டும்.

வெட்டியாங்க அங்கயும், இங்கயும் அரக்க பறக்க ஓடிக்கிட்டிருந்தாய்ங்க.

ரேடியா செட்ல‌ பாட்டு சத்தம் நின்னதும் மலைச்சாமி கேசட்டைத் திருப்பிப் போட்டுட்டு ஆபீஸ்பக்கம் போனாரு.

இவுருதான் பூரா வெட்டியாங்க‌ளுக்கும் தலைவரு. இருபதெட்டு வருசமா பொணம் எரிக்கிறத‌ தொழில பாத்துக்கிட்டிருந்தாலும் பொறந்த அன்னைக்கே எறந்து போற கொழந்தைங்க, நெறமாசத்தவங்க‌ளுக்கு, கூலிவாங்காத கொழந்தை மனசு.

‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாட்டு ஓடிக்கிட்டிருக்க, ரவ பீடியைப் பத்த வச்சுக்கிட்டு அப்பத்தான் படிகட்ல வந்து உக்கார.

அஞ்சாறு பேரு சத்தமில்லாம‌ ஒரு பொணத்தைத் தூக்கிட்டு வரயில‌, கூடியே ஒரு பத்துப் பதினஞ்சு பேரு அரவமில்லாம உள்ள நொழஞ்சாங்க.  பத்தடி துரத்தில‌ தண்ணிக்குடம், சடங்கு சம்புரதாயத்துக்கு தேவையானதுகள ஒரு ஓரமா வக்கையில, படக்குனு மலைச்சாமி நிமிந்து பாடைய வாங்கி ஆகவேண்டியத . . .!

பூணூலு, கீப்பாச்சி, பட்டு கர வேட்டி கணக்கா வந்தவங்கள பாத்துட்டு,

தொரப்பாண்டி ஓடி வந்து,
‘ஏய் மலைச்சாமி, பார்ட்டி வேற இடம். ரேட்டை பாத்து சொல்லு’ ன்னு  காத கடிச்ச்சுட்டு மேடைக்கு ஓடினாரு.

கரண்டு அடுப்புல வக்கிறதுக்குன்னு தயாரா இருந்த மூங்கி பாடைக்கு பொணத்தை மாத்தி, அப்புடியே  அடுப்புக்கு வெளியக்கூடி இருந்த‌ சக்கரத்து படுக்கையில வெச்சிட்டு மலைச்சாமி வெலகிட்டாரு.

பொணம் தூக்க, சுத்தம்பண்ண, சாம்ப அள்ள அது வரைக்கும் தான் அவுரு வேல‌

கதவைத் தெறக்க‌, பொத்தான் அமுக்க‌, ஜென்ரேட்டர் கெளப்பன்னு கள்ளவூட்டுக்காரய்ங்கள மாநகராச்சி வெட்டியான் வேலைக்கி வச்சிருக்கு.  இவுங்களுக்கு அரசாங்க சம்பளம்.

மலைச்சாமிக்கு கூலி கெடச்சாத்தான்.

இயக்கத்தில‌ இருந்து பலமுறை போராட்டம் அது இதுன்னு செஞ்சு பாத்தாச்சு.  மாநகராச்சியும் ஒன்னுத்துக்கும் மசியல. அது ஒரு பக்கம் அப்புடியே போய்கிட்டிருக்குன்னு வய்யி.

வேப்ப மரத்தடியில‌ காத்துக்கிட்டிருந்தவங்க செத்துப்போன தேசிகர் பாட்டியோட ரெண்டு தலமொற அக்ரகார கதய பேசிக்கிட்டிருக்கயில,

மூனாவது மனுசாளா வந்திருந்தவய்ங்க‌ வெளிய‌ டீ கடையில நின்னு சிகரெட்டு பத்தவச்சிக்கிட்டு சொல்லாமக் கலையறதுல கவனமா இருந்தாய்ங்க.

சட்டப்போடாம உருட்டுப் பூணூலோட நின்னுக்கிட்டிருந்தவர் பக்கத்துல‌ இருந்த பெரிசுகிட்ட‌,

‘இப்பல்லாம் எருவாட்டி வச்சு எரிச்சுண்டு, எட்டு மணி நேரத்துக்கு யார் காத்திண்டிருக்கிறாங்கிறேள்!’

இதுன்னா செத்த‌ நேரத்துல முடிஞ்சுடும்’ னார்.

பதிலுக்கு பெரியவர், ‘நீர் என்னமோ சொல்லு, நம்ம ஊர் காவிரிக் கரையில சாஸ்திர சம்பிரதாயத்தோட ஆத்மார்த்தமா செய்ற வசதி இங்க வராதுங்கிறேன்’

பேசிக்கிட்டிருக்கும் போதே வேட்டுச் சத்தம் காதைப் பொளக்க, இன்னொரு கூட்டம் ஆட்டம் பாட்டமாக உள்ளே வந்திச்சுக.

நொழைஞ்ச வாசப்பக்கமா பாடை தெசை மாத்தும்போது

‘ச்சஞ் ச்சஞ் ச்சஞ்’
‘சனக்குனங்ககண சனக்குனக்கண சனக்குனக்கண’
‘ச்சஞ் ச்சஞ் ச்சஞ்’
‘சனக்குனங்ககண சனக்குனக்கண சனக்குனக்கண’
‘கஞ்சிக்கி செத்தான், கஞ்சிக்கி செத்தான்’
‘சனக்குனக்கண சனக்குனக்கண’
‘கஞ்சிக்கி செத்தான், கஞ்சிக்கி செத்தான்’
‘சனக்குனக்கண சனக்குனக்கண’

எரியிற அம்புட்டு பொணத்தையும் உசுப்புற மேனிக்கு தப்பு சத்தம் வானத்த பொளந்து தள்ளுச்ச்சி.

விசில் பறக்க குத்தாட்டத்தோட‌ வெறிச்சோடிக் கிடந்த  சொடலை கொட்டி பக்கமா நெருங்கின‌தும் பொணத்தை வாங்கி மலைச்சாமி வேலைய ஆரம்பிச்சாரு.  வந்திருந்ததுகள்ல  பெரிசுக சில தொழில் தெரிந்த மாதிரி ஒத்தாசைக்கு சேறு பூசுச்சிங்க.

மொய் பணம் பிரிக்கும்போது வழக்கம் போல அவேன் அவேன் ஆத்தாளையும், அம்மாவையும் வஞ்சி, வம்புக்கு இழுத்து, கட்டிப்பொரண்டு, சுவர் ஏறிக் குதிச்சி வடக்குப் பக்கமாக ஓடிப்போனாய்ங்க.

அலங்காநல்லுர் ஆறுமுகம் தப்பாட்டக்குழு வந்த வழியே வெளியேறிக்கிடிருக்கிறத பாத்துக்கிட்டிருந்த சட்டப்போடாம உருட்டுப் பூணூலோட நின்னுக்கிட்டிருந்தவரு அந்த பெரிசுகிட்ட‌,

‘இவாள் இன்னும் அப்படியேத்தான் இருக்கா.  காலத்துக்கும் மாற மாட்டேங்கிறாள்’

‘என்னதான் இருந்தாலும் இன்னைக்கி சனிக்கிழம‌யாச்சோ, ஒன்னுக்கு ஒன்னு சந்திச்சுக்கிறதும் ஷேமம்தான்’ னாரு.

நேரம் கடந்துக்கிட்டிருக்க பொணத்தை எரிக்கிறதுக்கான எந்த வேலையும் நடப்பதா தெரியல‌.
சட்டப்போடாம உருட்டுப் பூணூலோட நின்னுக்கிட்டிருந்தவர் வேகமாக ஆபீஸ் பக்கம் போய் அங்கிருந்தவருகிட்ட,

‘ஏன் லேட்டாகுதுன்னு’ கேட்டார்.

‘ஒன்னுமில்லே, சனி, ஞாயிறானா எலக்ட்ரிகல் பிராப்ளம், இப்ப சரியாயிடும்’

‘இல்லே, அஸ்தி கெடச்சாத்தான் சாஸ்திர சம்பிரதாயத்த முடிச்சிண்டு ஸ்நானம் பண்ண முடியும்’

‘நேரமும் கடந்திட்டுருக்கு’ ன்னு தழுதழுத்தாரு.

பொணம் இருந்த சக்கரப் படுக்கையை உள்ளே தள்ளிய தொரப்பாண்டி முணுமுணுத்துக் கொண்டே க‌தவை சாத்தி பொத்தானை அமுக்கி,  நிறுத்திட்டு பொறவும் அமுக்கினாரு.

அர‌ மணி நேரம் ஆச்சு.

‘இன்னும் அரைமணி நேரம் ஆகுமா’ ன்னு கேட்டாரு.

‘சொல்ல முடியாது, முன்ன பின்ன ஆனாலும் ஆவும்’

தொரப்பாண்டி குடுத்த கோட்டரை வாங்கிட்டு மலைச்சாமி உள்ள‌ போய் ஒரு மணிநேரம் ஆச்சு. ஒன்னும் சத்தத்த காணோம்.

‘செத்த முடிஞ்சுதான்னு பார்த்துச் சொல்லுங்கோ’ ன்னு பொறவும்.

மலைச்சாமி கீழ எறங்கிப் போய் திரும்புன வேகத்தோட‌ ஒரு சட்டியில் சூடான சாம்பலைக் கொண்டு வந்து கொடுத்தாரு.

மருவாதியா அஸ்தியை வாங்குன அவுரு மொகத்துல ஒரு பிரகாசம் இருந்திச்சு. எம்புட்டு நேரம் காத்துக்கிட்டிருந்தாரு. பின்ன இருக்காதா.

அங்கனக்கூடியே அந்த பைப் அடியில உக்காந்து சம்பிரதாய முறைப்படி சடங்கு நடந்திச்சு.

கொஞ்சம் சாம்பலை தனித்தனியா பொட்டலம் போட்டு பிரிச்சிக்கிட்டாய்ங்க.

மலைச்சாமி ரவ பீடிய பத்த வச்சிக்கிட்டு ஒன்னுக்கு வுடப்போவையில

சாப்பிடப் போன தொர‌ப்பாண்டி வந்து அபீஸ் பக்கமா பாத்து

‘அதுக்குள்ள‌ மலைச்சாமி எங்க போனான்?’
‘பன்னெண்டு மணியானா சிங்கிள் பேஸ்தான் கரண்ட் வருது’
‘வோல்டேஜ் பத்தாதுன்னு தெரியாதா அவனுக்கு’
காலையில உள்ள போட்ட ரெண்டும் கரிக்கட்டையா கெடக்கு’
‘இதுல இப்ப வந்ததும் உள்ள போட்டிருக்கு’

‘ஆள் இருக்கணுமா இல்லையா, ரொம்பவும் வெவரமில்லாமத்தான் செய்றாம்பா’ ன்னு
வஞ்சிக்கிட்டிருக்க, மலைச்சாமியும் வந்து வசவு வாங்கிக் கிட்டு கதவைத் தெறக்கயில‌,

‘எங்கடா போன?’
‘போடா, உள்ள போயி இத வெளிய‌ இழுத்து வச்சிட்டு அந்த கரிக்கெட்டை பாடிய கீழ தள்ளிவிடு’

எரிஞ்சும் எரியாமலும் இருந்த ஒரு பாடைய வெளிய‌ இழுத்ததும்  கொஞ்சம் கருகின பொணவாடை லேசா வீசுச்சி.

சடங்க முடிச்சுட்டு கெளம்புறதுக்கு தயாரா இருந்த சட்டப்போடாம உருட்டுப் பூணூலோட இருந்தவரு  வெளிய இழுத்துப் போட்ட பாடைய‌ பாத்ததும் தூக்கி வாரிப் போட்டுச்சு.

பாடையோட நாலு முக்கிலும் கட்டியிருந்த சிவப்பு பட்டுக் கம்பி எரியாம இருந்ததைப் பாத்த‌தும் தேசிகர் பாட்டிதானான்னு சந்தேகம்.

சந்தேகமென்ன. தேசிகர் பாட்டியே தான்.

பொறவும் சக்கரப்படுக்கையை உள்ள‌ தள்ளி கதவை சாத்திய மலைச்சாமி நிமிர்ந்ததும், சட்டப்போடாம உருட்டுப் பூணூலோட இருந்தவரு குடுத்த  ரெண்டு நூறு ரூவாவ வாங்கிட்டு போவயில‌..

ஆகட்டும்னாரு . . .

வெளிய‌ டீ கடையில நின்னு சிகரெட்டு பத்தவச்சிக்கிட்டு சொல்லாமக் கலையறதுல கவனமா இருந்த மூனாவது மனுசாளா வந்திருந்தவய்ங்க ஷேர் ஆட்டோவுல தாவி தொங்க, உள்ள நின்னிருந்த ஒன்னு ரெண்டு காரும் வெளிய போச்சு.

கடைசியா அந்தப் பெரிசு மத்தரம் ஓடிவந்து  சட்டப்போடாம உருட்டுப் பூணூலோட இருந்தவருகிட்ட‌

‘சொல்ல மறந்துட்டேன்’
‘எட்டாந்தேதி கும்பகோணத்துல திதி அனுஷ்டிக்கிறோம்’
‘ராகுல் அடுத்த மாசம் வந்ததும் அஸ்தி கலசத்த கங்கையில‌ சேக்கிறதுக்கு வேண்டிய ஏற்பாட்டை செய்யலாம்ணு இப்பத்தான் போன் பேசுனான்’
‘அப்பத்தான் அவாளுக்கு கோடி புண்ணியம் கிட்டும்’
‘மறக்காம பத்மாவையும் கூட்டிண்டு ஏழாந்தேதியே வந்துருங்கோ’ ன்னு பெரிசு கிளம்ப.

சட்டப்போடாம உருட்டுப் பூணூலோட நின்னுக்கிட்டிருந்தவர் அந்த சாம்பல் சட்டிய மொறச்சுப் பாத்துக்கிட்டே வெளியேற, அதே பாட்டு ‘சமரசம் உலாவும் இடமே’

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தலித் கிறித்துவர்களின் இட ஒதுக்கீட்டை ஒருக்காலும் திருச்சபைகள் அனுமதிக்காது!

தலித் கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமா, வேண்டாமா? என்பதற்கு பெரிய அளவில் எந்த பார்வையும் இன்றைக்கு தேவையில்லை. புதிதாக யாரும் அதில் நுழையவில்லை. அது இப்போதைய விவாதமும் இல்லை. காரணம் கடந்த ஆண்டுகளில் குண்டாங்குறையாக விமர்சித்த விமர்சனங்களே போதுமானது. அதில் காசு பார்த்து கல்லா கட்டியவர்களின் விபரம் எல்லாம் யு.என் வரைக்கும் போயாச்சு. ஆனால், இன்றைக்கு அந்த இட ஒதுக்கீட்டு நாடகம் என்னவாக இருக்கிறது? யார் கையில் நூலாடுகிறது? இதில் இந்தோலிக்க திருச்சபைகளின் புரட்சிகரம் என்ன? என்பதை மட்டும் வெட்டவெளிச்சமாக்கி அம்பலப்படுத்தினாலே இந்த இட ஒதுக்கீட்டுப் போராட்டம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும் என்பது என் கருத்து.

தலித் இயக்கங்கள் ஏன் இதற்காகக் குரல் கொடுத்து நேரத்தை செலவழிக்க‌ வேண்டும்? இதில் இந்து தலித்துகளின் நிலை என்ன? என்பதை கிறித்துவர்கள் இன்றைக்குத்தான் அறிந்து கொள்ள வேண்டும் என்பதல்ல. இந்த இட ஒதுக்கீட்டுப் பிரச்சனைக்காக பெரிய அள‌வில் கிறித்துவத்தில் புரட்சி தோன்றும் என்பதெல்லாம் என் போன்றோருக்கு ஒரு காலக்கனவு.

1950 -க்குப் பிறகு தலித் கிறித்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாததால் கல்வி, வேலை வாய்ப்புகள் பறிபோயின. தனித் தொகுதிகளில் தேர்தலில் போட்டியிடும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. தங்கள் மீது இழைக்கப்படும் சாதிய வன் கொடுமைகளுக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை (1989) பயன்படுத்தவே முடியாமல் போனது. குறிப்பாக, அரசியல் சட்டத்தின் விதிகள் 330, 332, 334, 335, 338, 341, 366(24) இன்படி, அனைத்துத் துறைகளிலும் பெற வேண்டிய உரிமைகள் எதிராளிக்கு போய்ச் சேர்ந்தன.

பவுத்த, சீக்கிய மதங்கள் அடிப்படையில் சாதியை தங்களின் சமயத் தளங்களில் அங்கீகரிப்பதில்லை; வழிபடுவதும் இல்லை. ஆனாலும், சீக்கியர்களும் (1956), பவுத்தர்களும் (1990) தாழ்த்தப்பட்டவர்களின் பட்டியலில் இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர். பல போராட்டங்களினாலும், நெருக்கடியினாலும், இழப்புகளினாலும் இவை சாத்தியமாயின. மதம் மாறிய கிறித்துவ பழங்குடியினர் கூட, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் (எஸ்.டி) சேர்க்கப்பட்டுள்ளனர். அதுபோலவே, தலித் கிறித்துவர்களுக்கும் இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே கடந்த 60 ஆண்டுகால கிறித்துவ திருச்சபைகளின் கோரிக்கையாம். இருந்திட்டுப் போகட்டும்.

உலகமயம், தனியார்மயம் ஒடுக்கப்படுகின்ற மக்கள் மீது நெருக்கடிகளை உருவாக்கி வரும் சூழலில், ஒடுக்கப்படுகின்ற மக்களின் வாழ்வாதார நம்பிக்கையை உறுதி செய்கிற சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு ஒருபுறம் இருந்தாலும், பல ஆண்டுகளாக தலித் கிறித்துவர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பெறுவதற்கு எந்த வகையிலும் சாத்தியக் கூறுகளே இல்லாத நிலையை 23.8.2005 அன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள விளக்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

“கிறித்துவ மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மீது சாதி தீண்டாமைக் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. இவர்கள் தலித் அல்லாத கிறித்துவர்களாலும், மற்ற ஆதிக்கச் சாதியினராலும் தீண்டாமைக் கொடுமைக்குள்ளாக்கப் படுகிறார்கள்” என்பதை மிகக் கூர்மையாக அம்பேத்கரும் சுட்டிக் காட்டியுள்ளார் (அம்பேத்கர் நூல் தொகுதி : 5, பக்கம் : 470). இதனைக் கருத்தில் கொண்டே 1948 -இல் அரசியல் சட்ட மறுவடிவை அவர் கொண்டு வந்தார். இந்த முயற்சியை கே.எம். முன்ஷி மறுத்து நிராகரித்த பிறகும் 1950 -இல் வெளியான “குடியரசுத் தலைவரின் இந்திய அரசியல் சட்ட ஆணை 1950′ (10.8.1950 பத்தி: 3, எஸ்.ஆர்.ஓ. 385 சி.ஓ. 19) இன்றுவரை முட்டுக்கட்டையாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது என்பது உண்மை தான் என்பதோடு மட்டும் நில்லாமல், இப்பிரச்சனையை வேறொரு மீள் விசாரணைக்குட்படுத்த வேண்டியுள்ளது.

இந்த ஆணையை மாற்றி புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்குப் பிரிவு 341(1), 341(2) இன்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட இன்று வரை வாய்ப்பில்லை அல்லது வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது சாதிக்கிறித்துவர்களின் வாதம். ஆனால், 60 ஆண்டுகளில் தலித் கிறித்துவர் இட ஒதுக்கீட்டுக்காக கிடைத்த ஆதாரங்கள் மட்டும் ஏராளமாக குவிந்து கிட‌க்கின்றன. இதற்காக கடந்த 20 ஆண்டுகளில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக, கத்தோலிக்கத் திருச்சபைகள் முணகி வருகின்ற‌ன. 1992 இல் “தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின், சார்பில் 200 உறுப்பினர்கள் ஒன்றுகூடி விவாதித்தும் விட்ட‌னர். தங்களின் முன் வரைவை அரசுக்கும் பரிந்துரை செய்தனர். அதே போல, 1996 இல் தேசிய எஸ்.சி./எஸ்.டி. ஆணையம் தனது சட்டத் திருத்த வரைவில் (12016/30/90 SCR (R cell 23.8.1996) தலித் கிறித்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியும் பரிந்துரை செய்துள்ளது.

மண்டல் ஆணையம், காகா கலேல்கர் ஆணையம், சிறுபான்மையினர் நல ஆணைய அறிக்கை 1981-1982, ஆந்திர மாநில பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையம், கேரளாவின் பிற்படுத்தப் பட்டோர் குறித்த குமாரபிள்ளை ஆணையம், இளைய பெருமாள் குழு அறிக்கை 1969, சிதம்பரம் ஆணையம், போன்ற பல குழுக்களின் அறிக்கைகள் தலித் கிறித்துவர்களின் பிரச்சனைகளை விவாதித்து அரசுக்கு கொடுத்துள்ளன. வழக்கம் போல ஒரு சில அரசியல் கட்சிகளும் தங்களின் அரசியல் அறிக்கையில், தலித் கிறித்துவர்களின் இடஒதுக்கீட்டு முழக்கங்களை 2011 தேர்தல் அறிக்கை வரையிலும் தயாராக வெளியிட்டிருக்கின்றன. இதுபோக, தலித் கிறித்துவர்கள் தீண்டாமைக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் வெளியான உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள், தலித் கிறித்துவர்களின் துயரங்களை கோடிட்டுக் காட்டியுள்ளன.

தலித் கிறித்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் பிரச்சனை எங்கு உள்ளது என்பதை தெளிவாகச் சொல்லுங்கள் என்று உச்ச நீதிமன்றத்தைக் கேட்டால், மத்திய அரசைக் கேளுங்கள் என்கிறது. நாடாளுமன்றத்தில் கேட்டால், உச்ச நீதிமன்றத்தின் குழு அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம் என்கிறது. 23.8.2005 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதி லகோத்தி தலைமையில் நடந்த விவாதம், இதே பார்ப்பனக் கூத்தை அரங்கேற்றியுள்ளது. மீண்டும் அடுத்தடுத்து ஒத்திவைத்திருக்கின்ற காத்திருப்பு அறிக்கைகள் கூட, தலித் கிறித்துவர்களுக்கு நம்பிக்கை அளிக்காது என்பதை இந்த திருச்சபைகள் மட்டும் விசுவாசித்து வருகின்றன. விசுவாசிக்கட்டும்.

தலித் கிறித்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்’ என்று போராடிய பலர் இன்று உயிரோடு இல்லை. இந்தியக் கிறித்துவர்களின் எண்ணிக்கையில் 75 சதவிகிதம் நிரம்பிக் கிடக்கின்ற தலித் கிறித்துவர்கள் மற்ற தலித்துகளைப் போல சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் இன்னமும் வேர் பறிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர். 1947 க்கு முன்பு என்ன நிலை இருந்ததோ அதுதான் இன்றைக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த விளக்கங்கள் மற்றும் வழக்கு ரீதியிலான அனைத்து விசயங்களும் தலித் கிறித்துவர்களுக்கும், தலித் அல்லாத கிறித்துவர்களுக்கும் ந‌ன்றாகவே தெரியும். நாடாளுமன்றத்தை நெறுக்கடிக்குட்படுத்தும் அளவுக்கு இங்கு எந்த  தலித் உறுப்பினரும் நிமிர்ந்தவர் இல்லை. தமிழ்நாட்டில் பீட்டர் அல்போன்சையும், அடைக்கலராஜையும் நம்பக்கூடிய அளவுக்கு உள் நோக்கம் கொண்டவர்கள் தமிழ்நாட்டு இந்தோலிக்கக் கிறித்துவர்கள். இப்படியான அரசியல் வரலாற்று விவகாரங்கள், விதண்டாவாதங்கள் எனக்கும், உங்களுக்கும் புரியலாம்.  ஆனால் உழைக்கும் தாழ்த்தப்பட்ட தலித் கிறித்துவர்களின் காத்திருப்போ அல்ல‌து புரிந்து கொள்ளுதலோ அப்படியில்லை. அவர்களுக்கு (ஏன் எனக்கும் கூட‌) ஒற்றை வரியில் பதில் சொல்லுங்கள்.

1. கிறித்துவர்கள் தலித்துகளின் (தங்களின்) பல பிரச்சனைகளை அவர்களாகவே முன் நின்று நடத்திய ஒரு அனுபவம் இருக்கிறது. டர்பன் போன்றவைகளை உதாரணமாகச் சொல்லலாம். தலித்துகளின் எல்லா பிரச்சனைகளையும் இந்து தலித்துகளையோ, இசுலாமிய தலித்துகளையோ, சீக்கிய தலித்துகளையோ அல்ல‌து பவுத்த தலித்துகளையோ கூடிப்பேசி விவாத்தித்துவிட்டு பிரச்சனைகளை எடுத்த அனுபவம் அவ்வளவாக இல்லை. அப்படியிருக்கும்போது தலித் கிறித்துவர்களின் இட ஒதுக்கீட்டுப் பிரச்சனைக்கு மட்டும் ஏன் ஏனைய தலித்துகள் போராட வரவில்லை என அழுது வடிய வேண்டும்?

2. இதை ஏன் இந்து தலித்துகளுக்கும், கிறித்துவ தலித்துகளுக்குமான பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்? தலித் கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்காதீர்கள் என இந்தியாவில் உள்ள ஏனைய தலித்துகள் ஒன்று கூடி போராடி வருகிறார்களா? இருவரையும் மோத விடுவதன் நோக்கம் என்ன?

3. தலித் கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதில் எங்கு தடை இருக்கின்றது? உச்ச நீதிமன்றத்திலா! நாடாளுமன்றத்திலா!

4. இந்திய அர‌சாங்கத்தின் கையில் தான் இருக்கிறது என்று ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டாலும் இந்த 60 ஆண்டுகளில் இதனை வென்றெடுக்க உண்ணா விரதம், தர்ணா, வழக்கு என்பதைத் தவிர வேறு என்ன கூர்மைப்படுத்தப்பட்ட போராட்ட முயற்சிகளை இந்திய கிறித்துவ திருச்சபைகள் எடுத்துள்ளன? எடுக்கப்போகின்றன?

5. மிக வெளிப்படையாக இதில் தலித் அல்லாத கிறித்துவர்களின், சர்வ தேச கத்தோலிக்கர்களின் அறிக்கை ரீதியிலான நிலைப்பாடுகளும், செயல்பாட்டு முயற்சிகளும்  என்ன?

6. டர்பனில் சாதியத்தை விவாதித்தது போன்று, வெளிநாடுகளில் இருந்து சுனாமி  நிதிக்காக இந்திய உள்துறையை நிர்ப்பந்தித்தது போன்று  இதனை சர்வதேசிய கிறித்துவ திருச்சபை நிறுவனங்களுடன் இணந்த அகில உலக விவாதம் ஆக்குவதில், இந்தியாவை அரசியல் தளத்தை நோக்கி நிர்ப்பந்திப்பதில்  திருச்சபைகளுக்கு என்ன தடை இருக்கிறது?

7. இன்னும் 50 ஆண்டுகள் கூட எடுத்துக் கொள்ளட்டும். அடுத்த தலை முறை தலித் கிறித்துவர்களுக்கு இது கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

8. தலித் கிறித்துவ‌ர்களின் இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையை குத்தகை எடுத்துள்ள இந்தோலிக்க திருச்சபைகளால் மட்டும் இதனை சாத்தியப்படுத்த முடியுமா?

இவ்வாறான கேள்விகள் முட்டுக்கட்டையாக இருக்கும் வெறும் திருச்சபைகளை மட்டுமே உள்ளடக்கியது. இதுபோக மத ரீதியிலான, சிறுபாண்மை ரீதியிலான, பொருளாதார ரீதியிலான கடந்தகால அனுபவப்பகிர்வுகளும், பங்கீடுகளும் பாக்கி இருக்கிறது. அது எந்த நேரத்திலும் தலித் இசுலாமியர்களிடமிருந்து, பவுத்தர்களிடமிருந்து அல்லது சீக்கிய தலித்துகளிடமிருந்து வெடிக்கலாம்.

இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் தலித் கிறித்துவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பதன் தொடக்கம் சரிதான். ஆனால் இன்று அது கிறித்துவ திருச்சபைகளின், சாதிக் கிறித்துவர்களின் செப்படி ஏமாற்று வேலை. கிறித்துவ நிறுவனங்களில் கோலோச்சும் தலித் அல்லாத கிறித்துவர்கள், சூடோ தலித் கிறித்துவர்கள் ஏகாதிபத்திய உலக முதலாளிகளுடன் கூட்டுசேர்ந்து பெறும் கூட்டுக் கொள்ளையையும் கடந்து இந்திய அரசின் எச்ச சொச்ச தலித் பிச்சையையும் பறித்துக்கொள்ள நடக்கும் இந்த ஏமாற்று வேலையில் ஏனைய தலித்துகள் சிக்கிக் கொள்ளாமல், நேரம் செலவிடுவதை தவிர்ப்பது நல்லது.

மீண்டும் சொல்கிறேன். வாரத்தில் ஒரே ஒரு நாள், ஞாயிற்றுக் கிழமையில், மூன்றாவது மணி ஒலித்ததும் ஆலயத்தின் உள்ளே நுழைந்து 2 மணி நேரத்தில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியேறுகிற உழைப்பை மட்டுமே நம்பி வாழும் தலித் கிறித்துவர்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் நீங்கள் என்ன? நான் என்ன? எவராலும் தடுக்க முடியாது.

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தலித் கிறித்துவர்களின் இட ஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை சாதிக்கிறித்துவர்களே!

நண்பர் அசோக் தமிழனின் தலித் கிறித்துவர்களின் இட ஒதுக்கீட்டுக்கான கால விரயத்தை தவிர்க்கிறேன். தலித் கிறித்துவர்களின் இட ஒதுக்கீட்டுக்கானபோராட்டம் கடந்த 60 ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எத்தனையோ வழக்குகள், எத்தனையோ கமிஷன்கள், ஆயிரக்கண‌க்கான வாய்தாக்கள், கோடிக்கணக்கான பண விரயம், நூற்றுக்கணக்கான போராட்டங்கள் ஒன்றிலும் காரியம் ஆகவில்லை. கடந்த 60 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான, பெண்களுக்கான, இசுலாமியர்களுக்கான, சீக்கியர்களுக்கான ஏன்? பவுத்தர்களுக்கான இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் பல பயனுள்ள வெற்றிகள் கிடைத்திருக்கும்போது தலித் கிறித்துவர்களுக்கான இட ஒதுக்கீடு மட்டும் கிடைப்பதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்பதை மாற்றுக்கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என தோழருக்கு அறிவுறுத்டுகிறேன்.

தலித்துகள் கிறித்துவர்களாகி விட்டால் இந்து தலித்துகள் எல்லாம் கிறித்துவர்களாகி விடுவார்கள் என்கிற பயம் இந்திய அரசுக்கு துளியும் இருப்பாதாகத் தெரியவில்லை. அப்படியிருந்திருந்தால் புரட்சியாளர் அம்பேத்கரால் கலகமிடப்பட்ட பவுத்தத்துக்கு கண் எதிரில் தலித் இட ஒதுக்கீடு கிடைத்ததைக் கண்டு இந்து தலித்துகள் எல்லாம் பவுத்தத்தை நோக்கி ஒடி வந்திருக்க வேண்டும். அப்படி ஒன்று ந‌டக்கவே இல்லை. பவுத்தத்தை விட இந்திய கிறித்துவம் அப்படி ஒன்றும் அறிவியல் பூர்வமான மதம் இல்லை. சொல்லப்போனால் வருண தர்ம, சாதிய படிநிலைகளில் நாரிப்போன ஒருவகையான செமி இந்து மதம் தான் இந்திய கிறித்துவம். இயேசுவும் புத்தரைப் போன்ற அல்லது கிறித்துவமும் பவுத்தத்தைப் போன்ற இந்து மதம் தான் என‌வே இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று கெஞ்சிப்பார்த்தாலும் இட ஒதுக்கீடு கிடைக்கப்போவதில்லை. காரணம் தலித்துகள் எல்லாம் கிறித்துவர்களாகி விடுவார்கள் என்கிற பயம் இதில் இல்லை. கிறித்துவர் எதிர் இந்து எதிர்ப்பு பார்வையிலிருந்து கொஞ்சம் விலகி கூடவே குந்தியிருக்கின்ற சகக்கூட்டாளியை சாதிக் கிறித்துவர்களை சந்தேகப்பட்டு பாருங்கள் விடை கிடைக்கும்.

கூடங்குளம் பிரச்சனைக்கு அமெரிக்காவும், கிறித்துவர்களும் தான் காரணம் என கட்டவிழ்த்துவிடப்படும் கதையை கேட்டு இந்தியாவே சற்று அச்சப்படும்போது 60 ஆண்டு காலம் கிடப்பில் கிடக்கிற தலித் கிறித்துவர்களின் இட ஒதுக்கீடு அகில உலக கிறித்துவத்துடன் தொடர்புடைய பிரச்சனையா, இல்லையா! அப்படி ஒரு பிரச்சனையை அகில உலக ஆதரவு திரட்டி கிளப்பிப் பாருங்களேன், பார்ப்போம். அப்படி ஒரு நிலை உருவாகுமேயானால் இந்தியாவில் உள்ள இந்துக்களும், சங்கரமடங்களும் அச்சப்படுகிறதோ இல்லையோ! முதலில் அச்சப்படுபவர்கள் கிறித்துவத்தில் மிகச்சிறுபாண்மையினராக குந்தியிருக்கின்ற சாதிக் கிறித்துவர்களுக்குத்தான் வயிற்றில் புளியைக் கரைக்கும். அவர்களுடைய த‌லைமை பீடமும், வேலை வாய்ப்பும், ஏகாதிபத்திய ஆண்டை அதிகாரமும் ஆட்டம் கண்டுவிடும். எந்த மதத்தில் சாதிக்காரர்கள் மிகச்சிறுபாண்மையினராகக் குந்திக்கொண்டு பெரும்பாண்மை தலித்துகளை ஆட்டு மந்தைகளாக மேய்க்க முடியும். இந்திய சாதிக்கிறித்துவத்தில் தான் அது சாத்தியம். இப்போது புரியும் என நினைக்கிறேன். தலித் கிறித்துவ இட ஒதுக்கீட்டுக்கு யார் தடையாக, குறுக்கீடாக, முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள் என்று.

நேரடியாகவே விசயத்துக்கு வருகிறேன். ஒருவேளை இந்த இந்திய அரசு சமூக, பொறுளாதார கட்டமைப்புகளில் முற்றிலும் பலவீனமாகி முடங்கும் நிலை ஏற்பட்டால் உடனே அதை தூக்கி நிறுத்தும் வல்லமை இந்தியாவின் இரண்டாவது பணக்காரனான கிறித்துவ திருச்சபை நிறுவனங்களுக்கு உண்டு என மார்தட்டும்போது, கேவலம் ஒரு 60 ஆண்டுகால‌ தலித் கிறித்துவ இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையை இந்திய கிறித்துவ திருச்சபைகளால் சாதிக்க முடியாதா? சிரோன்மனி பிரபிந்துவாராவைவிட பலவீனமானதா இந்திய கிறித்துவ திருச்சபை. யார் காதில் புண்ணாக்கு கிடிப்பது?

இத்தகைய இட ஒதுக்கீட்டு விவகாரத்தை இந்து தலித்துகளுக்கும், கிறித்துவ தலித்துகளுக்கும் இடையே மோதவிட்டு சாதிக்கிறித்துவ பார்ப்பனியர்கள் எவ்வாறு வேடிக்கைப் பார்க்கின்றார்கள் என்பதைக்கூடவா புரிந்து கொள்ள முடியாது. இதற்கு இந்தியாவின் இந்தோலிக்க (இந்து+கத்தோலிக்க) சாதிக்கிறித்துவர்கள் எந்த அளவுக்குத் தடையாக இருக்கிறார்கள் என்பதை டெல்லியில் கேட்டுப்பாருங்கள். இதற்கு சர்வ தேச கத்தோலிக்கம் எப்படி துணையாக இருக்கிறது என்பதும் மிக வெளிப்படையாக விளங்கும். ஆனால் தலித் கிறித்துவ இட ஒதுக்கீட்டுக்கு இந்தோலிக்கர்கள் (இந்து+கத்தோலிக்க) தான் அழுது வடிகிறார்கள் என்பது போன்ற மாயை தோன்றும். அது சுத்த கபடதாரி தலித் வேடம். அப்படியிருந்தால் இன்றைக்கு சிறுபாண்மையினர் என்று ஏகபோக நலன்களாக சிறுபாண்மையினர் ஆணையம், இன்னபிற அரசு கூடாரங்களில் சிறுபாண்மையினர் நலனை அனுபவித்து வரும் மைனாரிட்டி கத்தோலிக்க சாதிக் கிறித்துவர்கள் இதற்காக என்ன புடிங்கி கிழித்தார்கள்? தலித் கிறித்துவ இட ஒதுக்கீட்டுக்காக வெறும் 24 மணி நேரம் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்யச்சொல்லுங்கள் பார்ப்போம். அல்லது 72% பெறும்பாண்மையாக இருக்கிற தலித் கிறுத்துவர்களின் தலைமையில் ஒருவாரம் என்ன! ஒரு வருடத்துக்கு அனைத்து கிறித்துவ ஆலயங்களையும் இழுத்து மூடுங்கள் பார்ப்போம். தலித் கிறித்துவர்களுக்கு ஒன்னும் குடி முழுகிடாது. முடியுமா? நிச்சயம் அப்படி ஒரு பிரளயம் தலித் கிறித்துவர்களின் இட ஒதுக்கீட்டுக்காக திருச்சபைக்குள் நடக்க ஒருபோதும் சாதிக் கிறித்துவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். இதற்கு துருப்புச்சீட்டாக உள்ளுக்குள் குந்தியிருக்கின்ற சூடோ தலித் கிறித்துவர்களையே ஏரோதுகளாக்குவார்கள். அப்படி இருக்கும்போது கிறித்துவ ஓநாய்களின் தலித் கிறித்துவ இட ஒதுக்கீட்டு அழுகை ஒரு வேட்டிப்பேச்சு?

வாரத்தில் ஒரேஒரு நாள், ஞாயிற்றுக் கிழமையில், மூன்றாவது மணி ஒலித்ததும் ஆலயத்தின் உள்ளே நுழைந்து 2 மணி நேரத்தில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியேறுகிற உழைக்கும் தலித் கிறித்துவர்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் நீங்கள் என்ன? நான் என்ன? எவராலும் தடுக்க முடியாது. இரட்டை வாக்குரிமையே கிடைத்துவிடும். இந்திய கிறித்துவமே சாதிமயமாகிக் கிடக்கும்போது பாவம் தலித்துக‌ள் கிறித்துவ மதத்திற்குள் வந்து, இங்குள்ள சூடோ தலித்துகளிடமும், சாதிக்கிறித்துவர்களிடமும் மாட்டி என்ன சாதிக்கப்போகிறார்கள்?

இந்தோலிக்க (இந்து+கத்தோலிக்கம்) மதமும் ச‌ற்றேறக்குறைய சங்கரமடத்தின் சாபக்கேடு தான். புராட்டஸ்டன்ட் என்கிற எதிர்ப்புக் கிறித்துவர்களைப்பற்றி கேட்கவே வேண்டாம். குளிர்ச்சியான நீரில் போடப்பட்ட ஆமைக்கு கீழிருந்து நெருப்பு மூட்டினால் அது என்ன வகையான சாவுச் சுகம் காணுமோ அதுபோல புராட்டஸ்டன்ட் என்கிற எதிர்ப்புக் கிறித்துவம் சோரம் போய்க்கொண்டிருக்கின்றது.

வெட்கத்தோடு, கோபத்தோடு, ஆதங்கத்தோடு, அழுகையோடு சொல்கிறேன். இந்த கழிசடை கிறித்துவ சாதித்திருச்சபைகளால் தலித்துகளுக்கு விடுதலை எனில் அதற்கு பவுத்தமும் அல்ல‌து எந்த மதமும் இல்லாமல் சிதறிக்கிடக்கிற (இந்து) தலித்தாக இருப்பதே எவவளவோ மேல். கிறித்துவத்தை மதமாற்றத்துக்கான குறியீடாக பாவிக்காத புரட்சியாளர் அம்பேத்கர் இன்று உயிரோடிருந்து இந்திய கிறித்துவர்களின் சாதியச் சேட்டைகளை உற்றுக்கவனித்திருப்பாரேயானால் இந்த முடிவுக்குத்தான் வந்திருப்பார்.

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ச்சாதிகளின் கொலவெறி விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்!

இந்திய சாதியமைப்பின் தீர விளையாட்டாக கிரிக்கெட் சூதாட்டமும், தமிழ்ச்சாதிகளின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டும் இன்றைய இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தைச் சீரழித்து வருகிறது, கிரிக்கெட் சூதாட்டம் இடம் பெறாத நாளிதழும் இல்லை. ஜல்லிக்கட்டு சீறிப் பாயாத கொலவெறி பொங்கல் திருநாளும் இல்லை. அந்த அளவிற்கு இன்றைய பார்ப்பனிய அச்சு ஊடகங்கள், இதற்கு புது விளக்கம் கொடுத்து ஊக்கமளித்து வருகின்றன. பொதுவாகவே, இந்திய விளையாட்டுத்துறையின் கீழ் அறிமுகமாகும் அனைத்து விளையாட்டுக்களும் இந்து வருண தர்மத்தின் சாதிப் படிநிலைகளைக் கொண்டும், ஆணாதிக்கத்தை நிலைப்படுத்தும் குறியீடாகவும் அமைந்திருக்கும். ஆனால், ஜல்லிக்கட்டு என்பது சாதி, ஆணாதிக்கத்தை உள்வாங்கி தமிழ்ச்சாதிகளின் வீரம் என்கிற போர் மரபுப் பண்பாட்டையும் ஆயுதமேந்தும் வன்கொடுமையை நிலை நிறுத்தும் கொலவெறி விளையாட்டாகவும் உலா வந்து கொண்டிருப்பதை தமிழ்ச்சாதிகள் அடையாளம் காண்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் தலித்துகள் அதனைக் கண்டறிந்து தடை செய்யப் போராட வேண்டும்.
தை முதல் நாள் இனி தமிழர்களின் வருடப் பிறப்பு அல்ல, சித்திரை தான் தமிழ் ஆண்டு என அ.தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தவுடனே ஆணை பிறப்பித்து விட்டது. இதில் பார்ப்பனியத்துக்கு எந்த வகையான உள் நோக்கம் இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கூடவே அந்த பொங்கல் திருநாளில் நிகழும் ஜல்லிக்கட்டையும் தடை செய்ய வேண்டும் என்பதே இங்கு கோரிக்கை. எனவே தான் 2000 -இல் இருந்து இதனை எதிர்த்துப் போராட சாதி உணர்வற்ற அனைத்து தமிழரையும் தோழமைக்கு அழைக்கிறோம். இந்த எதிர்ப்பின் விளைவாக ஜல்லிக்கட்டு மறு சீரமைப்பு என்பதில் சென்னை உயர் நீதி மன்றம் 2008 -இல் தடை விதித்தது. இதனை எதிர்த்து ஜல்லிக்கட்டு போராட்டக் குழு உருவாக்கப்பட்டு மீண்டும் உயர் நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதி மன்றம் சில ஒழுங்கு முறைகளை விதித்து மீண்டும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் ஒப்படைத்தது. இந்த போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அதற்கு முன்பதாக இந்த தமிழ்ச்சாதிகளின் கொலவெறி விளையாட்டைப் பற்றி கொஞம் அறிந்து கொள்வது அவசியம்.
தமிழர்களின் பொங்கல் நாள் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் ஜல்லிக்கட்டு காளையை வைத்து ஏதோ காளைப் புரட்சி செய்யப் போவதாக தமிழ்ச் சாதிகள் புறநானூற்றைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். மயிலக்காளை, மச்சக்களை, காரிக்களை, மரையங்காளை, நாட்டுவெள்ளை என்கிற முரட்டுக் காளைகளைக் களத்தில் இறக்கி – தைத் திருநாளையும், உழைக்கும் வேளாண் பெருங்குடி மக்களையும், மருத நிலத்தின் மண் வரலாற்றையும் கொச்சைப்படுத்தி வருகின்றனர். வீரமும், காதலும் நிறைந்த தமிழர்களின் வீர விளையாட்டே ஜல்லிக்கட்டு என இலக்கியப் புளுகு சொல்லி வருகின்றனர். நாட்டுப்புறவியலின் பாரம்பரியம் என கற்பனைப் புதிர் விடுகின்றனர். தமிழ்ச் சாதி சங்க இலக்கியங்களையும் கடந்து, புராணக் கதைக்குள் முடிச்சுப் போட்டு சங்கராந்திப் பொங்கல் கொண்டாட‌ இந்துத்துவா கும்பல்களும் வெள்ளோட்டம் பார்க்கின்றன. இதற்கு இந்து அறநிலையத் துறையும், சுற்றுலாத் துறையும் வக்காலத்து வாங்கி, குத்தகைத் தொழிலாக்க முயன்று வருகின்றன. ஆனால், ஜல்லிக்கட்டுக்குள் புதைந்து கிடக்கின்ற துயர வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நம் நினைவுகளில் கொம்புகளும், குடல்களுமே சரிந்து கிடக்கும்.
மதுரை, திருச்சி, திண்டுக்கல். தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு உலக விளம்பரம் வாய்ந்தது. ஜல்லிக்கட்டு ஏன் மேற்கூறிய இடங்களில் மட்டும் நடக்கிறது? என்பது பார்வையாளர்களுக்கும் தெரியாது. ஜல்லிக்கட்டைப் பார்க்க ஏன் இவ்வளவு பேர் இந்த மாவட்டத்தில் கூடுகிறார்கள்? என்பது ஜல்லிக்கட்டு நிகழ்துகிறவர்களுக்கும் தெரியாது. இதுதான் ஜல்லிக்கட்டின் பலமும், பலவீனமும்.
ஜல்லிக்கட்டு எப்படி உருவானது என்பதைப்பற்றி பல புனைவுகள் வழக்கில் உள்ளன. ஜல்லி என்கிற யாதவ வீரன் காலத்தில் உருவானதே காளை விளையாட்டு என்றும், பெண்ணின் விருப்பம் இல்லாமல் ஒரு ஆண் தன்னுடைய ஆதிக்கத்தை வீரம் என்று சொல்லி பெண் திருடும்-ஏறு தழுவுதல், ஏறு பூட்டுதல் என்கிற சங்க இலக்கியத்தின் வழித் தோன்றலே ஜல்லிக்கட்டு என்கிற கதைகள் ஒருபுறம் இருந்தாலும், அடிப்படையில் இது உழைக்கும் மக்களின், விவசாயக் குடிகளின் குடும்ப விழாவில் இருந்து உருவப்பட்ட‌தாக மக்களிடம் பதிவாகி இருக்கிறது.
விளைச்சல் பூத்துக் குலுங்கும் தை திங்களில் விவசாயத்தில் ஈடுபட்ட கால்நடைகளை ஆளுக்கொன்றாக கையில் பிடித்துக் கொண்டு, குடும்பம் குடும்பமாக ஒருவரையொருவர் சந்திக்கிற முறைதான் மருத நிலத்தின் தொடக்கம். இதில் பெண்கள், சிறுவர்கள், கன்றுகளையும், பெரியவர்கள் ஏர் மாடுகளையும் பிடித்து வருவார்கள். அப்படி மாடுகளைப் பிடித்துச் செல்லும்போது மாட்டுக்கு ஏற்கனவே போட்டிருக்கின்ற மூக்கணாங்கயிற்றை அறுத்து எடுத்து விட்டு புளிய வளாரினாலும், ஆவாரம் வளாரினாலும் பின்னப்பட்ட கயிறில் சாயம் நனைத்து, கூரைப் பூ, வேப்பிலை, மாங்குலை கோர்த்த மாலை கட்டி “பட்டி பலுக, பால்பானை பொங்க, நோயும் பிணியும் தெருவோட‌ போக” என்று மாடு பிடித்துச் செல்வார்கள். மறுநாள் பாரிவேட்டை நடக்கும். இதுதான் மாடுகளுடன் விவசாயக் குடிகளான உழைக்கும் மக்கள் கொண்டாடுகிற பூர்வீகக் கொண்டாட்டம்.
காலப்போக்கில் நில உடைமைப் பண்ணையார் வீட்டுக் காளைகளின் கழுத்தில் வெள்ளி வளையம் போட்டு, அதில் காசு கட்டி, கம்பீரமாக வாத்தியக் கருவிகள் முழுங்க, சல் சல் என்று மிரட்டலாகப் பிடித்து வருவார்கள். மற்ற காளைகள் மிரண்டு ஓடும். சண்டியர் மாதிரியான ஆட்களால்தான் பண்ணையார் வீட்டுக் காளைகளைப் பிடிக்க முடியும். நம்ம காளைகள் சொங்கிக் காளைகள். அது பண்ணையார் வீட்டுக்காளை மாதிரி வாராது என்று சொல்லும்போது, நம்ம ஆள்களுக்குள்ளேயே ஒரு போட்டி வரும். அதை நாளடைவில் ஒரு பெரிய விழாவாக‌க் கொண்டாடுகின்றனர். என்று முதுபெரும் தலித் கலைஞர் அய்யா வடபழஞ்சி சந்தனம் (74) வாய் மொழியாக‌ப் பதிவு செய்திருக்கிறார்.
மாட்டு கழுத்தில் ஜல்லி பூட்டி குடும்பமாகப் பிடித்து செல்கிற மரபில் உருவான மஞ்சிவிரட்டு, வடமஞ்சி விரட்டு, மாட்டு வண்டியோட்டம் இவை எல்லாமே உழைப்பில் ஈடுபடும் மாடுகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுப் பிணைப்பின் வெளிப்பாடு. இதில் இருந்தே பொங்கல் என்பதும் வெகு சிறப்பாக உருவெடுத்திருக்க கூடும். காலப்போக்கில் நிலங்களைக் கைப்பற்றி நிலவுடைமைச் சமுகக் கட்டமைப்பை உருவாக்க இனக் குழுக்களிடையே மோதல் உருவானபோது வேளாண் உறவை வலியுறுத்தும் இக்குடும்ப விழா தகர்ந்து போனது. நில உச்சவரம்புக்கு எதிராக நிலங்களைக் கொள்ளையிட்ட நிலவுடைமைக் கிழாராக இருப்பவரே இந்த உறவையும், கொண்டாட்டத்தையும் தீர்மானிப்பவராக ஆதிக்கம் செய்துள்ளார். வேளாண் தொழிலை கொச்சைப் படுத்தி, நிலத்தைக் கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்தைத் தக்க வைக்கும் குறு நில‌ முயற்சிகள்-தமிழக வரலாற்றில் எங்கெல்லாம் நிகழ்ந்திருக்கின்றதோ, அங்கு மட்டுமே இந்த ஜல்லிக்கட்டு இன்று தமிழர்களின் வீர விளையாட்டாக மாற்றப்பட்டு நடந்து வருகிறது. ஆக, ஜல்லிக்கட்டாக உருமாறிய, உருமாற்றிய சித்துவேலை என்பது, தமிழர் வரலாற்றின் ஓர் இடைச்செருகல் என்பது மட்டும் தெளிவாகிறது. இந்த இடைச்செருகல், குறிப்பாக நாயக்கர்கள் காலத்தில் (16 – 17 ஆம் நுற்றாண்டு – விஜய நகரப்பேரரசு) உருவானதாக இருந்தாலும், இலக்கியங்களின் வழித் தோன்றலாக இருந்தாலும் இடையில் வந்ததை இடையிலேயே தகர்ப்போம்.
மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டைக் குறித்து அலங்காநல்லுரைச் சேர்ந்த பறையாட்டக் கலைஞர் ராமையா (63) அவர்கள் கூறும்போது “நம்ம ஊர்ல மாடு புடிக்கிற இந்த வௌயாட்டு-அஞ்சு தலைமொறையா இருந்து வருது. ஆனா, நம்மள பறை அடிக்க மாத்திரம் கூப்புடுவாங்க. நாம பறை அடிச்சாதான் காளைக வாடிவாசல்ல இருந்து சீறி வரும். இன்னைக்கி இதுகள்ல நெறய மாத்தம் வந்திருக்கு. நம்ம ஊர்ல காளியம்மனுக்கும். முனியாண்டிக்கும் பொங்க வைக்கும்போது நாம மாத்திரம் என்ன செய்றது? இப்ப இளவட்டம் அதுகளும் மாடு புடிக்கிறாங்க. காளையும் வச்சிருக்காங்க” என்கிறார்.
எது எப்ப‌டி இருந்தாலும், தமிழ்ச்சாதிகளின் கொலவெறி விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டு இன்றைக்கு நமக்கு எதை உணர்த்துகிறது என்பதே நம் கேள்வி. தலித்துகளுக்கும், தலித் அல்லாதவர்களின் உறவுப் பிணைப்புக்கும், தமிழர்களின் ஒற்றுமைக்கும், பெண் விடுதலைக்கும், இன்றைய சமுக மாற்றத்துக்கும் எந்த வகையில் விடுதலையளிக்கக் கூடியதாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு பச்சைத் தமிழனும், காய்ஞ்சு போன தமிழனும்-தமிழர் திருநாளான பொங்கல் கொண்டாட்டத்தில் உரசிப் பார்க்க வேண்டும். அவ்வாறு உரசிப்பார்த்தால், நம் சிந்தனையில் எழுகின்ற சில கேள்விகளுக்கு நாம் தீர்வு சொல்லியே ஆக வேண்டும்.
1. ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டா? அப்படியென்றால் ஏன் தமிழ்நாடு முழுவதும் உள்ள சாதிபேதமற்றவர்கள் என சொல்லிக்கொள்ளும் அனைத்துத் தமிழர்களும் இன்று ஜல்லிக்கட்டு விளையாடுவதில்லை? தென் ஆப்பிரிக்கா, மலேசியா, பினாங்கு, மொரிஷியஸ், இலங்கை ஏனைய‌ வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழர்கள் இதை நினைத்து கூட பார்ப்பதில்லை? அங்கெல்லாம் மாடுகளே இல்லையா?
2. ஜல்லிக்கட்டு காளையை அடக்குகின்ற ஆண்களுக்குத்தான் வீரம் இருக்கிறது என்றால், பெண்களுக்கு வீரம் இல்லையா? அல்லது பெண்களுக்கும், ஜல்லிக்கட்டுக்கும் தொடர்பு இல்லையா? அப்படியே வேடிக்கை பார்க்கிற அளவுக்காவது பெண்களுக்கு அனுமதி இருக்கிறதென்றால் முரட்டுக் காளைகள் தங்கள் மகன்களையோ, கணவர்களையோ, உடன் பிறப்புக்களையோ ரத்தம் சொட்ட, குத்தி எறிவதைப் பார்த்து ரசிப்பார்களா? உயிர் உற்பத்தி செய்யும் பெண்கள், விளையாட்டுக்காவது உயிரைக் கொல்ல அனுமதிப்பார்களா?
3. மண்ணையும், மாட்டையும், உழைப்பையும் நம்பி வாழும் வேளாண் பெருங்குடி மண்ணின் மக்கள், கிடைமாட்டு ஆண் கன்றைத் தெரிவு செய்து மூக்கணாங்கயிறு போடாமல் வளர்த்து, எலுமிச்சம் பழத்தைக் குத்தித் தூக்குகிற பயிற்சியைக் கொடுத்து, கொம்பு சீவி, மிதிலைக் கசக்கி, சாராயம் ஊற்றி, மிளகாய்த் தூள் துவி, வாலை மடக்கிக் கடித்து, கோபக்குறியை உண்டாக்கி, வதைப்படுத்தி விளையாடுவார்களா? இப்படி விளையாடுவதுதான் நம் தமிழர்களின் அல்லது தமிழ்ச்சாதிகளின் பண்பாடா? விவசாயத்திற்கு மாடுகளை உற்பத்தி செய்யும் காளையை நேசிப்பவர், அந்த‌ காளைக்குச் செய்யும் குறைந்தபட்ச நன்றி இதுதானா?
4. ஜல்லிக்கட்டு விளையாட்டில் இன்று முன்னிலையில் இருந்து முதல் மரியாதை பெறும், வரி வசூல் கட்டும் முக்குலத்தோர்களும், நாயக்கர்களும், இதற்கு சவுண்டு குடுக்கும் ஏனைய தமிழ்ச்சாதிகளும் தான் தமிழ் நாட்டின் வீரர்களா?
5. காளையை அடக்குபவர் வீராதி வீரர் என்றால், அந்தக் காளையால் படுகொலை செய்யப்படும் ஒரு வீரர் உயிரின் அதிகபட்ச மதிப்பு, சுவர்க்கடிகாரமும், சைக்கிளின் விலையும் தானா? அல்லது எந்தப் பரிசுமே கிடைக்காமல் வேடிக்கைப் பார்த்து கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கைதான் உயர்ந்த பரிசா?
6. உழைக்கும் மக்களின் நம்பிக்கைக்குரிய குலசாமி பெயரில் கேவலம் ஒரு காளையை வைத்து ஊரறிய பட்டப்பகலில் வீரம் என்று சொல்லி இளைஞர்களைப் படுகொலை செய்தும், படுகாயமடையச் செய்தும் வரும் காளையையும், காளையின் உரிமையாளரான கொலையாளியையும் ஏன் 302 -ன் சட்டப் பிரிவில் கைது செய்து தண்டிக்கவில்லை? இதனை அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும், பொதுமக்களும் எப்படி வேடிக்கை பார்க்கின்றனர்?
இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதனால் பயன்பெறப் போவது யார் என்றால், நுழைவுச்சீட்டு குத்தகைதாரரும், கிராம நிர்வாக அதிகாரிகளும், காவல்துறையும், நாட்டாமை என பிழைப்பு நடத்தும் தமிழ்ச்சாதி நிலக்கிழார்களும், முதல் மரியாதை பெறும் ஆதிக்க சாதி தர்மகர்த்தாக்களும், கந்துவட்டி விருமாண்டிகளும், கள்ளச்சாரய சண்டியர்களும்தான் அமோகமாக வாழ்ந்து வருகிறார்கள். மற்றபடி காளையை அடகுபவரை விட, வேடிக்கை பார்த்தவர்களே இதுவரை கணிசமாகக் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.
மண்ணின் உழைக்கும் மக்கள் பண்பாட்டுக்கு முரணாண, பெண் விடுதலைக்கு எதிரான சுற்றுச்சூழலுக்கு சீர்கேடான, மனித நேய – விலங்கு நேய உறவுக்குப் புறம்பான ஒன்று எதுவாக இருந்தாலும், அது இந்த மண்ணில் இருந்து வேரோடு களையப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு என்பது, தலித்துக்களுக்கும், தலித் அல்லாதவர்களின் உறவுக்கும், விடுதலைக்கும் எதிரான ஒரு விளையாட்டு. வீரம் என்கிற பெயரிலும், தமிழர்கள் என்கிற திணவிலும் கிராமங்களில் உள்ள தலித்துகளை ஒடுக்குவதற்கும், பகைமை உணர்வை வளர்ப்பதற்கும் விளையாடப்படும் விளையாட்டு. எனவேதான், தலித்துகள் அதிகமாக இருக்கின்ற பகுதிகளில் இதை விறுவிறுப்பாக நிகழ்த்துகிறார்கள். (வீரத்தை வேறு யாரிடம் காட்ட முடியும்). குறிப்பாக நாயக்கர்களின் காலத்தில் இதை அப்படியே ஏற்றுக் கொண்டவர்கள் கள்ளர்களும், மறவர்களும்தான். இவர்களின் மூர்க்கத்தனத்தையும், கோபக் குறியீடுகளையம் கடந்த காலங்களில் நாயக்கர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள். ஆனால், இன்று முக்குலத்தோர்கள் தலித்துகளை வம்பிழுக்கிறார்கள். போதாததுக்கு சோழவந்தான், திண்டுக்கல், பழநி, உடுமலைப்பேட்டை போன்ற பகுதிகளில் தேவேந்திரர்களையும் – பறையர்களையும் மோதவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள். ஆனால் வரலாற்றில் தலித்துகள் ஒருபோதும் இதற்குள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
ஒரு பார்ப்பன கமலஹாசனால் விருமாண்டியை ஜல்லிக்கட்டு சண்டியராகத்தான் பார்க்க முடியுமே தவிர, ஒரு விடுதலையாளராகப் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்திருந்தால், 1994-ல் வெளியான தேவர்மகன் படம் தென் மாவட்ட சாதிக் கலவரத்திற்கு எந்த அளவிற்கு தலித்துகளுக்கும், முக்குலத்தோருக்கும் இடையே வன்கொடுமை புரிந்தது என்பதை உணர்ந்திருப்பர். விருமாண்டிகளும் தங்களின் லிலங்காண்டித்தன வரலாற்றைப் பார்ப்பனியத்தின காலில் வைத்து, இப்படித்தான் வழிபடுவார்கள் என்பதற்கு சாதிவெறி பிடித்த விருமாண்டி ஒரு சான்று. இன்னொரு பக்கம் பார்த்தால் இவர்களின் விலங்காண்டி பண்பாட்டு வரலாற்றை கமலஹாசன் மிக நாசூக்காக படம் பிடித்து, உலகத்துக்கே எடுத்துக்காட்டிய பிறகும் கூட “ஜல்லிக்கட்டுப் போராட்டக் குழுவை” உருவாக்கி ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்றால் எப்படி அனுமதிக்க முடியும்?
ஏனெனில், இது போன்ற கண்மூடித்தனமான சமுகப் பகுப்பாய்வற்ற, போலி தமிழ்க் கலாச்சாரத்தில் நம்பிக்கை கொணட‌ வீரர்களாக இருப்பவர்களே, இந்துத்துவாவை ஆதரித்து தலித்துகளை ஒடுக்க தங்க‌ளின் ஒடுக்கப்பட்ட வரலாற்றை ரத்தம் சொட்டச் சொட்ட அறிமுகப்படுத்துகிறார்கள். ஆனாலும் ஜல்லிக்கட்டில் தலித்துகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. சாவுக்குப் பறையடித்து இழவு செய்தி சொல்வதை நிறுத்தியது போல், ஜல்லிக்கட்டு காளை அழைத்து வர பறையடிப்ப‌தை நிறுத்த வேண்டும். கேவலம் ஒரு முழம் துண்டுக்காக முதல் மரியாதைக் குழுவில் இடம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். காளை அடக்குவதையும், வளர்ப்பதையும் கைவிட வேண்டும். நாட்டுப்புறவியல் என்று சொல்லிக் கொண்டு ஆய்வில் நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். விலங்குகளை வதைப்படுத்துவதற்கு எதிராகவும், உயிர்ப்பலிக்கு எதிராகவும் போராட வேண்டும்.
தலித்துகளுக்கும், தலித் அல்லாத தமிழ்ச்சாதிகளுக்கும் உள்ள உறவு ஜல்லிக்கட்டில் தொடர வேண்டாம். கிராமங்களில் கொண்டாடப்படும் பொதுவான விழாக்களிலும், கொண்டாட்டங்களிலும் அது தொடரட்டும். கண்டதேவி போன்று காலம் காலமாக தலித்துகள் பெற்றிருக்கின்ற கோயில் வழிபாட்டு உரிமையை மதித்து, கிராம பொதுச் சொத்துக்களில் கோறும் உரிமையைக் கொடுத்து, கலப்புத் திருமணங்களை ஆதரித்து, சாதி-தீண்டாமையை வேரறுக்க நடத்துகின்ற செயல்பாடுகளில் இருவருக்குமான உறவு வளரட்டும்.
இத்தகைய‌ இணைப்பும், பிணைப்பும் உருவாக கிராமங்களில் புதைந்து கிடக்கின்ற தலித் கலைகளையும், மக்கள் கலைகளையும் மீட்டெடுத்து நடத்தும் மக்கள் சமய விழாக்களில் இருவரின் உறவு சாத்தியமாகும். இதை வளர்ப்பதற்கான‌ வேலையை ஜல்லிக்கட்டு தமிழ்ச்சாதி வீரர்கள் தொடங்க வேண்டும். அப்போதுதான் சமுக மாற்றத்திற்கான சமத்துவ சமுதாயத்தை வென்றெடுக்க முடியும். அப்போதுதான் விருமாண்டிகளை விடுதலைப் போராளிகளாக மதிப்பார்கள். இல்லையேல் சண்டியர் என ரத்தம் சொட்டச் சொட்ட தலித்துகளை மிரட்டி ஒடுக்குகின்ற விருமாண்டிகளின் வரலாற்றில் குடல்களும், கொம்புகளுமே எஞ்சியிருக்கும் என்பதை உணர்ந்து ஜல்லிக்கட்டு எதிர்ப்புப் போராட்டத்தில் அணியமாகி, அதனை தடை செய்யப் போராட வேண்டும். இப்போராட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவர்கள் ஒரு அஞ்சல் அட்டையில் தங்களின் எதிர்ப்புக் கருத்தைப் பதிவு செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
மாவட்ட ஆட்சியர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மதுரை -1
Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஆற்காடு லுத்தரன் எதிர்ப்புக் கிறித்துவத்தின் கலகக்கார ஆளுமை கலைமாமணி தங்கராசன்

காலனிய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட கைரேகைப் பதிவுச்சட்டம் பிரிக்கப்படாத தென் ஆற்காடு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நடைமுறையில் இருந்து வந்தது. திருச்சி-சென்னை 45 -ஆவது தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, கூத்தக்குடி, கள்ளக்குறிச்சி பகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில், காலையும், மாலையும் குறிப்பிட்ட சில பகுதி ஆண்கள் கையெழுத்திட வேண்டும்.  மாலை, இரவு நேரங்களில் திருட வெளியூர் செல்லக்கூடாது என்பதற்காக அன்றைக்கு அச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
சின்னசேலம்-வேப்பூர்-உளுந்துர்பேட்டை என்கிற முக்கோண பூகோள எல்லையில் சிக்குண்டு கிடக்கும் இவர்கள் கள்ளர்கள் என்றும், நெய்வேலி-இடார்சி வேலைக்குப் போனவர்கள் அஜீஸ்நகர் மக்கள் என்றும், சென்னையில் பம்மல், பல்லாவரம், ஓட்டேரி,  மற்றும் இதர நகரங்களில் குடியேறிய இவர்கள் செட்டில்மென்ட் ஜனம் என்றும் அழைக்கப்பட்டாலும், தேசிங்குராஜன் காலத்தில் அன்றைக்கு போர்ச்சேகவகர்களாக இருந்தோம் என்கிற ஒரு வரலாற்று முடிச்சும் உண்டு.  வறுமையும், பஞ்சத்தையும் எதிர் கொள்ள வழிப்பறி ஒன்றையே மூலதனமாகக் கொண்ட இவர்களின் வாழ்வில் சரியாக நூறாண்டுக்கு முன்பு புரட்சக‌ர மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு திருச்சபை ஆற்காடு லுத்தரன் திருச்சபை. மாளிகைமேடு, கொங்கராய பாளையம், சேதுவராயன்குப்பம், காட்டுமயிலுர் போன்ற கிராமங்களில் நுழைந்து வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே எங்களிடம் வாருங்கள் என்கிற மாபெரும் அறைகூவலை விடுத்த ஆக்ஸ் மிஷினெரியின் அற்புதமானக் கட்டமைப்பில் உருவான‌ திருச்சபை.  வேலையற்ற, நிலமற்ற ஒடுக்கப்பட்வர்களே உங்களுக்குக் கல்வியைத் தருகிறோம். வாருங்கள் என அறிவாயுதத்தை தந்த திருச்சபை.  இன்றைக்கு அந்தத் திருச்சபை முட்டுச் சந்தில் கேட்பாரற்றுக் கிடத்தப்பட்டிருப்பது கிறித்துவப் புரோகிதத்தின் சந்தர்ப்பவாதம் என்பதை ஆங்காங்கே கண்டுணர முடியும். அத்தகைய ஒரு  திருச்சபையில் இருந்து  கண்டெடுத்த மாளிகைமேடு கிராமத்தின் பூர்வகுடி ஆளுமைதான் கலைமணி தங்கராசன்.
கருப்பஞ்சருகு வேயப்பட்ட மாளிகைமேடு கிராமத்தில் 1931 -ஆம் ஆண்டு நவம்பர் 11 -ஆம் நாள் இரத்தினம் வாத்தியாருக்கும், தனபாக்கியம் அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.  பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள் என்பதால் மகனையும் அறிவுக் கூர்மையோடு வளர்த்தெடுத்தார்கள்.  முதல் உலகப் போரின் முடிவிலும், இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்திலும் திருச்சபைகளுக்குக் கிடைத்த சி-சி மாவையும், உடைத்த கோதுமையையும் உணவாகக் கொண்டே பெரும்பாண்மை சேரிக்குழந்தைகள் வளர்த்தெடுக்கப்பட்டன.   கலைமணியாரும் அப்படி வளர்ந்தவர்தான்.  நான்கு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உட்பட இவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர்.  திருவண்ணமலை சாரோனில் தனது தொடக்கக் கல்வியையும், விருத்தாசலத்தில் உயர்நிலைக் கல்வியையும் முடித்தார்.  ஒரு சராசரி கிறித்துவனாக தன் வாழ்வைத் தொடங்கியிருந்தாலும் திருச்சபை என்கிற அமைப்பு முறைக்குட்பட்டு, அதன் ஒழுங்குநெறிகளில் தன்னை கூர்மைப்படுத்திக் கொண்டார். இளமையில் அவரிடம் என்னென்ன திறமைகள் இருந்ததோ அவற்றை தன் ஆளுமைக்கு நிகராக வளர்த்தெடுத்துக் கொண்டார்.  பிறகு தரங்கம்பாடியில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தனது ஆசிரியப்பயிற்சியை முடித்து (1945-1956) நெல்லிக்குப்பம் டி.எம். உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.  ஆசிரியரான போது அவர் வாழ்வில் பல மாற்றங்களும், முன்னேற்றங்களும் வளம் பெற்றன. தனது பெற்றோருக்கு இணையாக தன்னை பக்குவப்படுத்திக் கொண்டார்.
திருச்சபைகளின் உறவும், இளைஞர்களின் நட்பும் அவரை இல்வாழ்க்கை நோக்கி இழுத்தது. 1967 -ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் ரூத் வசந்தகுமாரியை தனது இல்வாழ்வு இயக்கத்தின் தலைவராக்கினார்.  இச்சமுகத்தில் நிலைகொண்டு விட்ட குடும்பஅமைப்புகளின் நடுத்தர மேலாண்மையைத் துளியும் ஏற்காமல், திறந்து வைக்கப்பட்ட திருச்சபையாக தனது குடும்பத்தை அமைப்பாக்கினர். திருமணத்திற்குப் பின் பரிணமித்த 44 ஆண்டு கால கலைமணியார் என்கிற ஆளுமைக்கு வலு சேர்க்கும் விதத்தில் அவருடைய குடும்பம் அமைந்தது. அதற்கேற்றார் போல் அவருடைய மகள்கள் பொன்மதி வசந்தி, தங்கமதி வசந்தி, வெண்மதி வசந்தி, நிறைமதி, மகன் பாக்யராஜ் ஆகியோரின் கூட்டு உடன்படிக்கைகள் கலைமணியார் ஆளுமைக்கு பலமாக அமைந்தன.  கலைமணி தங்கராசனின் பேச்சு, எழுத்து, செயல்பாடு என்கிற கருத்தியலை மக்களிடம் பரப்ப ஊக்கமளித்தவர்கள் இவர்கள்தான்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி வெறுமனே வேலை வாய்ப்பு என்பதற்கக மட்டுமல்லாமல் ஒரு சமுக மாற்றத்திற்கான கருவியாகவும் அது வசியப்பட்டது. வாத்தியார்களாக இருந்தவர்கள் நாட்டு வக்கீலாகவும், எப்போதும் சமுகத்தைக் குறித்து சிந்திப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். கலைமணியாரும் அப்படித்தான் 1956 -இல் நெல்லிக்குப்பத்தில் தொடங்கிய தனது ஆசிரியப் பணி மணலூர்ப்பேட்டை, தேவரடியார் குப்பம், சென்ன சமுத்திரம், இறையூர், ஆதமங்களம், பாசார், தாண்டவன்குப்பம் என தொடர்ந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் அவர் மேற்கொண்ட ஆசிரியப்பணியும். கிராம மக்களுடன் அவர் கொண்டிருந்த நல்லுறவும் திருச்சபை வளர்ச்சிக்கு பெரிதும் உதவின.
திருச்சபையால் தான் வளர்க்கப்பட்டதால், தான் செல்லும் இடங்களில் திருச்சைபையை வளர்க்க வேண்டும் என்கிற எண்ண‌ம் அவருக்குள் இருந்தது. செல்லும் இடங்களில் பள்ளிகளையும், திருச்சபைகளையும் உருவாக்கினார். மாலை, இரவு நேரங்களில் ஒரு மிஷனரியாக கிறித்துவ நற்செய்திப் பரப்பிலும் ஈடுபட்டார். 30.11.1989 இல் ஓய்வு பெற்ற பிறகு நெய்வேலி தாண்டவன்குப்பம் திருச்சபையை நிறுவ காரணமானவர்களில் ஒருவராக இருந்தார்.
தமிழில் ஆன்ற புலமை கொண்டவர். மிகவும் நன்றாகப் பேசக்கூடிய மேடைப் பேச்சாளர். கணீர் என விழும் கட்டைக் குர‌லுக்குச் சொந்தக்காரர்.  கவிதை புனைவதிலும், பாடல் எழுதுவதிலும், அபாரத்திறன் கொண்டவர்.  பெரிய வெள்ளி, கிறிதுதுமஸ் நாள்களில் சிறப்பாக பாடல் எழுதி, தானே இசையமைத்து, தன் பிள்ளைகளுடன குடும்பமாகப் பாடுவார்.  அதை ஒரு மரபாகவே கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல இயல்பாகவே அவர் ஒரு கலைஞன். எனவே, நடிகனாகவும், நாடகம் எழுதுபவராகவும், இயக்குபவராகவும் இருந்துள்ளார். தொண்டன், சபதம், அரசியல்வாதியே திரும்பிப்பார், சவக்குழியில் காதலர்கள், காதல் விளையாட்டல்ல, நேசக்கரங்கள், என்றைக்கு, சீகன்பால்கு, கன்னியின் மைந்தன், மன்னிப்பின் கேள்விக்குறி, சிவப்பு நிழல்கள், ஆல்பர்ட் சுவைட்சர், மார்ட்டின் லூதர், பராபஸ், இது எங்கள் சிலுவை போன்ற கிறித்துவ விமர்சன நாடகங்களையும், சமுக விடுதலை நாடகங்களையும் இயற்றி இயக்கியுள்ளார்.
சாதி-தீண்டாமைக் கொடுமைகளால் சிறைபிடிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். வேதமாணிக்கம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) எல். இளையபெருமாள் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) பாலி வரதராஜன் போன்றோருடன் இணைந்து ஆதி திராவிடப் பள்ளிகளையும், விடுதிகளையும் உருவாக்குவதில் தன்முனைப்பு காட்டினார். க‌லைமணியார் தன்னுடைய அகடவிகட சாதுர்யத்தினால் எல்லோரையும் கட்டிப் போடக்கூடியவர். திருச்சபை அரசியல் ஜாம்பவான்களின் தேர்தல் வெற்றி விபரங்களை முன்கூட்டியே தீர்மானித்துச் சொல்லும்  தீர்க்கதரிசி. எனக்கு எதிரிகளே இல்லை என பெருமையாகப் பேசுவார்.  ஆசிரியர். பாடகர், எழுத்தாளர், நடிகர், இயக்குனர் மிகச்சிறந்த சிறந்த சமையல் கலைஞர். சித்த மருத்துவர், உபதேசியார் என்கிற பன்முக ஆளுமைக்குரிய தனித்துவம் வாய்ந்தவர்.  அடிமைக் காயங்களாலும், அனுபவத் தழும்புளாலும், ஒடுக்கப்பட்ட அனுபவங்க‌ளாலும் தன்னில் தானே ஈர்ப்பு விசையைப் பாய்ச்சிய கலைமணியார் 2010 சூலை -25 ஆம் நாள் தன் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். ஆற்காடு லூதரன் திருச்சபை வரலாற்றில் நினைவு கொள்ள வேண்டிய புதிய அதிகாரத்தையும், புரட்சிகர அலைகளையும் உருவாக்கி தனிமனித வரலாற்றில் பன்முகப் பண்பாடாக வாழ்ந்த கலைமணியார் நிகழ்கால நிரல்களில் வந்து கொண்டேயிருப்பார். அதற்கு திருச்சபைகளும், அடுத்தத் தலைமுறையும் தயாராக வேண்டும்.
Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சமுகத் தலைவர் ஜான்பாண்டியன்

பிரிட்டிஷ் ஆட்சியில் இங்கு கொட்டப்பட்ட ஏகாதிபத்தியத்தின் பல கழிவுகள் இந்த நாட்டில் இன்னமும் துர்நாற்றமாக வீசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் விட்டுச் சென்ற போலீசும். அத்தகைய முடைநாற்றங்களில் ஒன்று. கதையைக் கேளுங்கள். காலனிய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது யாரோ ஒரு இளவரசி சென்னை மாகாணத்தை வலம் வந்து கொண்டிருந்தாளாம். அப்போது கூம்பு வடிவ சிவப்புத் தொப்பியும், கஞ்சி போட்ட அரைக்கால் சட்டையும், கையில் துப்பாக்கி சகிதம் காக்கி உடையணிந்த ஒரு போலீஸ்கார‌ரை சாலையில் சந்தித்திருக்கிறாள். இளவரசி தன்னைப் பார்த்த‌தும் உடனே அந்த போலீஸ் மரியாதை கலந்த வணக்கத்தை அம்மணிக்கு சாத்தியிருக்கிறார். அந்த சமயத்தில் போலீசின் கால் சட்டைக்குள்ளிருந்த ஆண்குறி விரைப்பெடுத்து நெம்பி ஆடுவதை இளவரசி கவனித்து விட்டாளாம். இப்படியான ஒருவித கசப்பும், இனிப்பும் கலந்த சமாச்சாரத்தை மனதில் வைத்துக் கொண்டு, இந்த‌ சென்னை ராஜதானியில் இனி இது போன்று ஆண்குறி ஆட்டம் காணும் அரைக்கால் சட்டை போலீசுக்கு சீருடையாக இருக்கக்கூடாது என்றும், ஒழுங்கா டைட்டான பேண்ட் சட்டைதான் போடவேண்டும் என தன் இளவரசனுக்கு ஆணையிட்டதாக ஒரு குறி சொல்லும் கதையை எப்போதோ கேள்விப்பட்ட ஞாபகம். வெள்ளை இளவரசிகளையும், நம்ம ஊர்ப் பெண்களைப் பார்த்தவுடன் போலீசுக்கு ஆண்குறி விரைப்பெடுப்பது ஒன்றும் புதிதல்ல.
கடந்த காலங்களில் பெண்கள் மீதான காவல்துறையின் பாலியல் அட்டுழியங்களே இதற்கு தக்கச்சான்று. அந்த வகையில் அத்தகையை ஆட்டத்தை அடக்க பிரிட்டிஷ் இளவரசி உத்தரவிட்டதும் ஒரு வகையில் நியாயமும் கூட. ஆனால் அந்த ஆண்குறிக்குப் பக்கத்திலேயே காலங்காலமாக தொங்கிக் கொண்டிருக்கும் துப்பாக்கி என்கிற ஒற்றைக்குழல் பிஸ்டல் இரும்புக்குறியானது தலித்துகளைக் கண்டவுடனேயே அவர்களை சுட்டுத்தள்ள விரைத்துக் கொள்கிறதே, அதை தடுத்து நிறுத்த நம்ம ஊரில் எந்த இளவரசிகளும் வலம் வரமாட்டேங்கிறார்கள் என்பது வேதனையான விஷயம்.
2011 செப்டம்பர் 11-ல் மாவீரர் இமானுவேல் சேகரனின் நினைவுநாள் குருபூசையின் போது நம்ம ஊர்ப் போலீசுகளின் துப்பாக்கி ஜாமான் விரைப்பெடுத்து, பரமக்குடியில் ஆறு பேரின் உயிரைக்குடித்த கொடுரக்காட்சியை தொலைக்காட்சிகளில் நாடே கண்டிருக்க முடியும். அடையாறு காவல் துணை ஆணையர் செந்தில்வேலனும், பரமக்குடி டி.எஸ்.பி. கணேசனும், காவல் ஆய்வாளர் சிவகுமாரும் ஒரு ஆங்கிலத் திரைப்படத்தின் சண்டைக்காட்சிக்கு இணையாக கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். விலங்கு, பறவைகளிடம் கூட அப்படி கொடூரமாக நடந்து கொள்ள இன்று எவருக்கும் அனுமதி இல்லை. உரிமையும் இல்லை. இதே போன்று இளையான்குடியில் சிவகங்கை டி.எஸ்.பி. இளங்கோவனும், மதுரை சிந்தாமணியில் அவனியாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் கஜேந்திரனும் ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டை நடத்தி தங்கள் திட்டமிடுதல் நாடகத்தை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளனர். விடுதலை நோக்கி வீறுகொள்ளும் தேவேந்திரர்கள் மீது விலங்காண்டித்தனமாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட பல துப்பாக்கிச் சூடுகளில் இதுவும் ஒன்று. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு யார் காரணமென அரசு தரப்பும், ஆதிக்க சமுகங்களும் பல பொய்களை இட்டுக்கட்டிய போதிலும் அதில் பிரதானமாகச் சொல்லப்படும் பொய் என்னவென்றால் இதற்கு காரணம் ஜான்பாண்டியனும், அவரது ஆதரவாளர்களும் என்பது. ஜான்பாண்டியனப் பற்றிய நேர்மறையான விச‌யங்களை போலீசும், நமது தலித் சமுகங்களும் அவ்வளவாகத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதால் இப்படியான அவதூறை ஊடகங்களாலும் போலீசாலும் மிக எளிதாக பரப்ப முடிகிறது.
சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற த‌லித் தலைவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஆளுமை கொண்ட தலைவர் ஜான்பாண்டியன். தனது 17 -ஆவது வயதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் இறங்கியவர். அவரிடம் வெளிப்படுகின்ற தலித் போர்க்குணமானது இமானுவேல் சேகரனைப் போல, ஒரு மேலக்கால் வீரபத்திரனைப் போல, உத்தப்புரம் பொன்னையாவைப் போல அவரது தந்தையின் இராணுவ மிடுக்கிலிருந்து உருவானது.
இளங்கலைப்பட்டம் பெற்றவராக‌ இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் அன்றாடப் பிரச்சனைகளில் அபாரமான பட்டறிவு கொண்டவர். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது சிலேட், புத்தகத்துக்காக எஸ்.சி. மாணவர்கள் எல்லாம் பெஞ்ச் மேல் ஏறி நில்லுங்க என்று அவமானப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு தீண்டாமைக் கொடுமைகளை சிறு பருவத்திலேயே அனுபவித்தவர். கிறித்துவ திருச்சபையின் ஒழுக்கங்களுக்கு உட்பட்டும் வளர்க்கப்பட்டவர். மது அருந்துவதோ, புகை பிடிப்பவரோ கூட அல்ல. அத்தகைய பலவீனம் தான் தலித்துகளை எளிதாக வீழ்த்தக் கூடியது என சக தோழர்களையும் நல்வழிக்கு அறிவுறுத்தக் கூடியவர். தனது சகோதரனையும் அவ்வாறு இழந்த அனுபவம் உடைய‌வர்.
1974 -ல் தேவேந்திர குல வேளாளர் முன்னேற்றச் சங்கத்தின் இளைஞரணித் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து 1990 வரையிலும் அச்சஙக்த்தின் ஒருங்கிணைக்கும் பணியை துடிப்புடன் செய்து வந்தார். 1979 -ல் நடந்த யூனியன் தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு சமுக அரசியலில் களமிறங்கினார். குறைந்தபட்சம் தென்மாவட்ட தேவேந்திரர்களையாவது ஒருங்கிணைப்போம் என முயற்சித்து 1981 -ல் தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் முதல் மாநாட்டைக் கூட்டினார். இந்த‌ மாநாட்டுக்குப்பின் அவருடைய அசுரத்தனமான கள ஈடுபாட்டைக் கண்டு வியந்த தேவேந்திரர்கள் தங்களின் பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தையும் ஜான்பாண்டியன் தலைமையில் நிகழ்த்த வீறுகொண்டனர். அவரும் மக்கள் பிரச்சனைக்கு முன்னுரிமை அளித்து தனது வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணித்து, கிராமங்களை நோக்கி தனது சுற்றுப்பயணத்தைத் தீவிரமாக்கினார். இவரது அசாத்திய நடவடிக்கைகளைக் கவனித்து வந்த அன்றைய முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன், ஜான்பாண்டியனின் பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் வழங்கி, அவரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். (1995 வரை அந்த‌ துப்பாக்கியை ஜான்பாண்டியன் பயன்படுத்தாத போதிலும் அ.தி.மு.க. அரசு 1995 -ல் ஆட்சிக்கு வந்தவுடன் எந்தவித காரணமும் சொல்லாமல் துப்பாக்கி லைசென்சை ரத்து செய்த‌து ஒரு வேடிக்கையான சம்பவம்). அப்படியான ஒரு களப்பணியின் போது 1989 -ல் போடியில் தேவேந்திரர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட சாதிக் கலவரத்தை அடக்க அவர் தலைமையேற்றார். மத நல்லிணக்கத்தோடு திருமணம் என்றால் அனைவரும் அனைத்துச் சாதியினரையும் மணந்து கொண்டால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அதிக அளவில் வன்கொடுமைகள் எதுவும் நிகழாது என ஒரு மேடையில் பேசினார் என்பதற்காக அன்றைய‌ அ.தி.மு.க. அரசு ஒரு பெரிய கலவரத்தை ஏற்ப‌டுத்தி 18 பேரை உயிர்ப் பலி வாங்கியது. வால்ட்டர் தேவாரம் வாலாட்டிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் முதன்முதலாக ஒடுக்கப்பட்ட தேவேந்திரர்க‌ளிடம் இருந்து தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என முக்குலத்தோர் அனைவரும் தமிழக அரசிடம் முறையிட வைத்த போராட்டக் காலம் அது. ஜான்பாண்டியனுக்கு எங்கிருந்து அப்ப‌டியொரு போர்க்குண வீரியம் பிறந்த‌து என்று எவராலும் அனுமானிக்க முடியாமல் திணறினர்.
இன்றைக்கு நிகழ்ந்த‌து போலவே 1992 -ல் ஜான்பாண்டியன் பரமக்குடியில் நுழைந்த போது இதே அய்ந்து முக்குரோட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று பேரைச் சுட்டுக் கொன்றது காவல்துறை. அந்த சம்பவத்துடன் இதனை ஒப்பிட்டுப் பார்த்தால் இருபது ஆண்டுகளுக்கு முன்பே ஜான்பாண்டியன் மீதும், தேவேந்திர‌ர்கள் மீதும் போலீசுக்கு ஏற்பட்ட ஆதிக்கப் புத்தியைக் கண்டுணர முடியும். இப்படியான இயக்க எழுச்சியில் பல இடங்களில் அவர் பெயரில் மன்றங்களும், பேரவைகளும், சங்கங்களும் கொடி தோரணையுடன் கால்கோல் இடப்பட்டன. 1996 -ல் பழனி முருகன் கோயிலில் 1500 ஆண்டுகளாக தேவேந்திரர்களுக்குப் பாத்தியப்பட்ட மண்டகப்படி உரிமையைக் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு, வெற்றியும் கண்டார். போடி கலவரத்துக்குப் பின் பல தலித் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் ஜான்பாண்டியனை சந்தித்து அவருடன் அரசியல் பண்ண ஆர்வம் கொண்டனர். எல். இளையபெருமாள், வை. பாலசுந்தரம், சக்திதாசன், தலித் ஞானசேகரன் போன்றோர் 1988 -ல் கன்ஷிராம் முன்னிலையில் உருவாக்கிய ஷெட்யூல்டு இன விடுதலை இயக்கம் (Scheduled Cast Liberation Movement – SCALM) ஜான்பாண்டியனை சந்தித்து தனது தோழமையை வளர்த்துக் கொணட‌து. வன்னியர் சங்கத்தின் சார்பில் டாக்டர். இராமதாசும், ஜான்பாண்டியனைக் கண்டு தேவேந்திரர்களுடனும் – வன்னியர்களுடனும் இணைந்து செயல்படுவோம் என பாட்டாளி மக்கள் கட்சியை தென்மாவட்டங்களில் விரிவுபடுத்தினார். இதே காலக்கட்டத்தில் மதுரையில் முகாமிட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனும், ஜான்பாண்டியனும் ஒன்றிணைந்து விட்டார்கள் என்கிற செய்தியும் ஆங்காங்கே பரவி காவல்துறை வட்டாரத்தில் சற்று புளியைக் கரைத்தது. இத்தகைய அனுபவங்களைக் கடந்து ஒரு கட்டத்துக்குப் பிறகு தேவேந்திரர்களை ஓர் அரசியல் குடையின் கீழ் கொணடு வரத் தீர்மானித்து 2000 -ல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற அரசியல் கட்சியை உருவாக்கினார். அதன் பிறகு அக்கட்சி இன்றைய அ.தி.மு.க., தி.மு.க. என்கிற நீர்த்துப் போன திராவிடப் பார்ப்பனியத்துக்கு எதிராக எவ்வாறு எதிர்நீச்சல் போட்டு வருகிறது என்பதை நன்கறிவோம்.
ஜான்பாண்டியனையும், அவர் சார்ந்த தேவேந்திர குலத்து எழுச்சியையும் எப்படியாவது ஒடுக்க முற்பட்ட போலீசு அன்றையிலிருந்து இன்று வரையிலும் அவர் மீது பல பொய் வழக்குப் போடும் படலத்தை நிகழ்த்தி வருகிறது. திண்டுக்கல்லில் நடந்த ஒரு சம்பவத்தில் 7 பேர் பலியானதைக் கேள்விப்பட்டு துக்கம் விசாரிக்கச் சென்றார். அங்கு ஒரு வீட்டில் காவல்துறைக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார் என்று அவர் மீது பொய்வழக்குப் போட்டனர். அண்மையில் நிரபராதி என விடுவிக்கப்பட்ட‌, கோயம்புத்தூர் படுகொலைப் பிரச்சனையிலும் பொய்வழக்குப் போட்டனர். கோயம்புத்தூரில் நடந்த ஒரு படுகொலைக்கு திருநெல்வேலியில் இருந்து ஆள் அனுப்பினார் என்று பொய்க்குற்றம் சுமத்தி, திணிக்கப்பட்ட புட்-அப் வழக்கு போட்டு ஒரு தேவர் நீதிபதியை நியமித்து, சாட்சிகளே விசாரிக்கப்படாமல் துரித வேகத்தில் (Fastrack), 125 -ன் பிரிவின் கீழ், 2003 –ஆம் ஆண்டு இதே அ.தி.மு.க. அரசுதான் ஆயுள் தண்டனை வழங்கியது. மதுரையைச் சேர்ந்த சடையாண்டி என்ற நீதிபதிக்கு நன்றாகத் தெரியும், ஜான்பாண்டியன் குற்றமற்ற நிரபராதி என்று. ஆனால் அந்த நீதிபதியின் போதாத காலம் பலவீனங்களாலும், சுய சாதி விசுவாசத்தாலும் இறுதி வரையிலும் நீதியான தீர்ப்பு வழங்காமல் மவுனம் சாதித்தார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்ற போது அங்கிருந்த நீதிபதிகளான பாலசுப்ரமணியம், தணிகாசலம் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள அனைது அரசு வழக்குரைஞர்களையும் திரட்டி, போலீஸ் பட்டாலியனில் இருந்து 250 -க்கும் மேற்பட்ட காவலர்களைக் கொண்டு வந்து நிறுத்தி, சாட்சி சொன்ன டி.எஸ்.பி -யை ஜான்பாண்டியன் மிரட்டினார் என்றும், சாட்சிகளைக் கலைத்தார் என்றும் இரண்டு பொய் வழக்குகள் போட்டனர். உச்ச நீதிமன்றத்தில் இருந்து ராவ் என்ற அரசு வழக்குரைஞரை அழைத்து வந்தும் வாதிட வைத்தனர். அவர் ஜான்பாண்டியனின் எல்லா வழக்கு ஆவணங்களையும் ஆராய்ந்து பார்த்து இவர் மீது தண்டனை வழங்கும் அளவுக்கு வழக்குகள் இல்லை எனக் கூறி சென்றுவிட்டார். இதைப் பொறுத்துக் கொள்ளாத அரசு இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என 104 நாட்கள் கழித்து தீர்ப்பு வழங்கியது. செய்யாத குற்றத்திற்காக 8 ஆண்டுகள் வரை சிறையில் தள்ளப்பட்டார். சிறையில் எந்த பிரச்சனையிலும் ஈடுபடாத போதே அவரை 4 முறை வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றி உளவியல் ரீதியாக சித்ரவதை செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் 4 வருடங்கள் வழக்கு நடந்த‌து. ஜான்பாண்டியன் தனது 17 -ஆவது வயதிலிருந்து இன்று வரையிலும் இவ்வாறு இட்டுக்கட்டி ஜோடிக்கப்பட்டதில் 65 -க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளன. 11 முறை சிறை சென்றுள்ளார். இவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானதே தவிர அவருடைய சுயநலன் சார்ந்தவை எதுவும் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்றைக்கு அவர் மீது ஒரு வழக்கும் இல்லை என்ற போதிலும் இனி போலீசின் அடுத்த கட்ட சாதியப்பழி நடவடிக்கையில் எதுவும் உத்தரவாத‌மில்லை.
உண்மையில் அங்கு நடந்த‌து என்னவென்றால் 2011 செப்டம்பர் 9 -ஆம் தேதி இரவு 12.30 மணியளவில் மண்டல மாணிக்கத்தில், பச்சேரியைச் சேர்ந்த பழனிக்குமார் என்கிற பதினோராம் வகுப்பு படிக்கும் தேவேந்திர மாணவனை முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த தேவர்கள் படுகொலை செய்து விட்டனர் என்பதை அறிந்து அடுத்த நாள் 10 -ஆம் தேதி பழனிக்குமாரின் இறுதிச் சடங்கிற்குச் செல்ல ஜான்பாண்டியன் ஆயத்தமானார். இதைக் கேள்விப்பட்ட இராமநாதபுரம் எஸ்.பி. ஜான்பாண்டியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பழனிக்குமார் இறுதிச் சடங்கிற்கு வரவேண்டாம், அப்படி வந்தால் நிறைய பிரச்சனைகள் உருவாகும். எனவே, நீங்கள் வர வேண்டாம் என வலிந்து கேட்டுக் கொண்டார். அதன் பிறகு திருநெல்வேலி கமிஷனர் வரதராஜனும், ஜான்பாண்டியனைத் தொடர்பு கொண்டு பழனிக்குமார் அடக்கத்துக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். செப்டம்பர் 11 -ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை நிகழ்ச்சி இருப்பதால், எந்த பிரச்சனையும் தன்னால் உருவாகி விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பழனிக்குமாரின் இறுதிச் சடங்குக்கு செல்வதை ஜான்பாண்டியன் தவிர்த்து விட்டார். தனது கட்சி ஆதரவாளர்களையும், பொறுப்பாளர்களை மட்டும் அனுப்பி இறுதிச் சடங்கில் பங்கேற்கவும் அடக்கத்தை அமைதியாக நிகழ்த்தும்படி கேட்டுக் கொண்டார். அதனை ஏற்று 10 -ஆம் தேதி இரவு பழனிக்குமாரை மன இறுக்கத்துடன் கூடிய அமைதியோடு அடக்கம் செய்தனர்.
அடுத்த நாள் 11.09.2011 அன்று தியாகி இமானுவேல் சேகரனின் குருபூஜையில் பங்கேற்று, மாவீரனுக்கு அஞ்சலி செலுத்த ஜான்பாண்டியனுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மாலை 3 மணியில் இருந்து 5 மணிவரையிலும் அஞ்சலி செலுத்த நிகழ்ச்சி நிரலிலும், பந்தோபஸ்திலும் முன்கூட்டியே திட்டமிட்டு அவருக்கு நேரம் வழங்கியிருந்தனர். அதனை ஏற்று தனது அமைப்புத் தோழர்களுடன் புறப்பட ஆயத்தமானார். இதற்கிடையில் அன்று காலை ஒன்பது மணிக்கு அமைப்புத் தோழர் சந்திரகாந்த் மகளின் பூப்புனித நீராட்டுவிழாவில் பங்கேற்று விட்டு, தூத்துக்குடியில் ஜான்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஒரு திருமணத்தையும் முடித்துக் கொண்டு வரும் போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் காவல்துறை அவரை வல்லநாட்டில் வைத்துக் கைது செய்தது. ஏன், என்னை கைது செய்கிறீர்கள்? என கேட்ட போது இமநாதபுரத்துக்குள் செல்ல உங்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றனர். சரி இராமநாதபுரத்தில்தான் 144 தடையுத்தரவு, அதற்கு ஏன் திருநெல்வேலியில் கைது செய்கிறீர்கள்? என்னை வீட்டிற்கு செல்லவாவது அனுமதியுங்கள் என கேட்டபோது காவல் அதிகாரிகள் மறுத்தனர். அவரைக் கைது செய்து துப்பாக்கிச் சுடும் பயிற்சிக் களத்தில் சிறை வைத்தது அவருக்கு பலத்த சந்தேகத்தைக் கிளப்பியது. ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் தியாகி இமானுவேல் பேரவை பொதுச்செயலாளரும், குருபூஜை கமிட்டி விழா பொறுப்பாளர்களில் ஒருவருமான பூ. சந்திரபோசு காலை 11 மணியளவில் உடனடியாக பரமக்குடி காவல் நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்த இராமநாதபுரம் மாவட்ட டி.அய்.ஜி. சந்தீப்மித்தலை சந்தித்து குருபூஜை நாளில் ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டது இங்கத்திய சூழலில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் எனவே அவரை குருபூஜையில் பங்கேற்க ஏற்பாடு செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார். அதற்கு இராமநாதபுரம் மாவட்ட டி.அய்.ஜி. சந்தீப்மித்தல் ஜான்பாண்டியனை நாங்கள் கைது செய்யவில்லை, திருநெல்வேலி போலீசு தான் கைது செய்தது என்றார். சரி நீங்களாவது தன்கண்டல அய்.ஜி -யிடம் பேசி அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள் என கேட்டும் அவர் செவி சாய்க்கவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என பதில் அளித்தார். அப்போது பாம்பூரில் இருந்து தோழர்க‌ள் வல்லநாட்டில் சிறை வைக்கப்பட்ட ஜான்பாண்டியனை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அதனை அவர் முற்றிலுமாகத் தவிர்த்து விட்டார். ஏனென்றால் ஜான்பாண்டியன் போன் மூலமாக கலவரத்தைத் துண்டினார் என்று பொய் வழக்கு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதால் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். அதன் பிறகு பரமக்குடியில் என்ன நடந்த‌து என்பதை அவரால் மிக, மிக தாமதமாகத்தான் அறிந்து கொள்ள முடிந்த‌து. அப்படி இருக்கும்போது ஜான்பாண்டியனை துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்களத்தில் தங்கள் கட்டுப்பாட்டில் சிறை வைத்துக் கொண்டு இராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவையும் பிறப்பித்து விட்டு, பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு ஜான்பாண்டியன்தான் காரணம் என போலீசாரால், மாவட்ட நிர்வாக அதிகாரிகளால் எப்படி சொல்ல முடியும்? இதை எப்படி ஊடகங்கள் நம்புகின்றன?
பரமக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து மக்கள் கண்காணிப்பகமும், பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்புக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பொது விசாரணை 2011 அக்டோபர் 7, 8 ஆகிய தேதிகளில் பரமக்குடியிலும், மதுரையிலும் நடந்த‌து. 8 -ஆம் தேதி மதுரை மக்கள் கண்காணிப்பகத்தில் நிகழ்ந்த பொது விசாரணையில் தலைவர் ஜான்பாண்டியன் துப்பாக்கிச் சூடுக்கான காரணத்தையும், தமிழகக் காவல்துறையின் பொய் முகத்தையும் தோலுரித்துக் காட்டிய வாக்குமுலம் என்னவெனில்,
இந்த‌ துப்பாக்கிச் சூடு போலீசாரால் வேண்டுமென்றே ஏவிவிடப்பட்ட ஒரு சதித்திட்டம். கடந்த 38 ஆண்டுகளாக பல லட்ச‌ம் மக்கள் கூடுகின்ற இந்த‌ 54 -ஆவது குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க‌க் கேட்டு வருகிறோம். 2010 குருபூஜை விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இவ்விழாவை அரசு விழாவாக அறிவிப்போம் என வாக்குறுதி அளித்தார். மத்திய அரசும் எங்களது கோரிக்கையை ஏற்று தியாகி இமானுவேல் சேகரனை மரியாதை செய்ய கடந்த 09.10.2010 அன்று அவருக்கு ஒரு தபால்தலை வெளியிட்டு கவுரவித்த‌து. ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிற இவ்விழாவில் தேவேந்திர சமுகத்தைச் சாராத மக்களும் பெருந்திரளாக பங்கேற்கின்றனர். ஒரு கலாச்சார விழாவாக மாறி வருவகைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்கச் சமுகங்களும், போலீசும் இவ்விழா இனி அரசு விழாவாக மாறிவிடக் கூடாது என்கிற கெட்ட எண்ணத்தில் சதிச்செயல் செய்து துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திதான் ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தால் அவர்கள் முன்கூட்டியே அறிவித்திருக்கலாம். அல்லது லத்திசார்ஜ் செய்திருக்கலாம். இதில் எதையுமே போலீசு செய்யவில்லை. ஆயிரக்கணக்காக ம‌க்கள் கூடி பொதுச் சொத்தை சேதம் செய்ததாகக் கூறுகிறார்கள். எது பொதுச் சொத்து என்பது தெரியவில்லை. அனைவரும் ரோட்டில் நிற்கிறார்கள். ரோடுதான் அங்கு பொதுச் சொத்தாக இருந்த‌து. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள் என அவர்களாக பொய்யான தகவலைக் கூறி கலவரத்தைத் தூண்ட துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கிறார்கள்.
இந்த பொது விசாரணையில் தென் மண்டல அய்.ஜி. ராஜேஷ்தாசைப் பற்றி நான் இங்கு நீதிபதிகளிடம் கூற வேண்டும். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த போது தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ -வான இராஜமன்னார் என்பவரின் வீட்டைச் சூறையாடி கொள்ளையடித்தவர். அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாவதாக பெரியகுளத்தில் அம்பேத்க‌ர் சிலையை நிறுவும்போது தலித்துகளை அடித்துத் துன்புறுத்தி பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார். முன்றவதாக இவரும் இவரின் துணைவியாரும் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவர் இவரின் மனைவியைத் திரும்பிப் பார்த்தார் என்பதாகக் கூறி அந்த கான்ஸ்டபிளை நடுரோட்டில் வைத்து அடித்து காயப்படுத்தினார். இதன் காரணமாக அங்குள்ள காவலர்கள் போராட்டம் செய்து பிரச்சனையில் ஈடுபடவே அவரை அங்கிருந்து சென்னைக்கு பணிமாற்றம் செய்தனர். சென்னையிலும் அவர் ஒழுங்காக இல்லை. ஒரு பெண் காவலரிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்பதால் அன்றைய தி.மு.க. அரசால் 4 வருடம் பணிநீக்கம் செய்யப்பட்ட அயோக்கிய அதிகாரிதான் இந்த தென்மண்டல அய்.ஜி. ராஜேஷ்தாஸ். இந்த ஆட்சி வந்தவுடன் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் கலவரத்துக்காக தென்மண்டல அய்.ஜி. –யாகப் பணிமாற்றம் செய்துள்ளார்கள். இவரின் தலைமையில்தான் உயர்மட்ட அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து, இதை சீர்குலைக்க வேண்டும் என்றும், இதனை அரசு விழாவாக அறிவித்து விடக்கூடாது என்றும் துப்பாக்கிச் சூடு பிரயோகம் செய்திருக்கின்றனர். இவர்களுக்கு டைனமைட் பிஸ்டலில் சுட அதிகாரம் அளித்த்து யார்? நான் மருத்துவமனையில் பார்த்த போது யாருக்கும் காலுக்குக் கீழே குண்டு பாயவில்லை. அனைவருக்கும் தலை, மார்பு, நெஞ்சு பகுதியில்தான் குண்டு பாய்ந்திருந்தது.
இதில் பரிதாபமான நிலை அடித்துக் கொல்லப்பட்டவர்கள் 3 பேர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 3 பேர். கொலை செய்யப்பட்டவர் 1. ஆக மொத்தம் 7 பேர்களின் உயிர் மாண்டுபோன நிலையிலும் கூட இராமநாதபுரத்தில் 144 தடையுத்தரவு போட்டு, நான் அங்கு போக அனுமதி வழங்கப்படவில்லை. உடனே உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி கேட்ட போது நீங்கள் அங்கு போக உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொய் சொல்கிறார்கள். பிறகு நானும், அமைப்பைச் சார்ந்த நெல்லைவர்மனும், 24 -ஆம் தேதி இராமநாதபுரம் சென்று மக்களைப் பார்க்க அனுமதி கேட்டும் ஏமாற்றுவதில் குறியாக இருந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்ற காவல் அதிகாரிகள் மீது 302 பிரிவின் கீழ் ஏன் கிரிமினல் வழக்கு பதியக்கூடாது? அவ்வாறு பதிந்தால் அது ஒரு முன்மாதிரியாக இருக்குமல்லவா? டி.ஆர்.ஓ -தான் துப்பாக்கியால் சுட உத்தரவு கொடுத்தார் என்று பத்திரிக்கையில் செய்தி வந்திருக்கிறது. எவ்வளவு கேவலமான பதில்? டி.ஆர்.ஓ. என்ன அய்.ஏ.எஸ். அதிகாரியா? அய்.பி.எஸ். அதிகாரியா- சுட உத்தரவு கொடுப்பதற்கு. பரமக்குடியில் அந்த இடத்தில் 500-1000 பேர் இருந்திருக்கலாம். காவல்துறையோ 2000 பேர். என்ன செய்ய முடியும்? எப்படி இதை மக்கள் செய்தார்கள் என்று சொல்கிறார்கள்? முழுக்க, முழுக்க மேலிட காவல் அதிகாரிகள் திட்டமிட்ட செயல் இது.
தமிழ்நாட்டுப் போலீசைப் பற்றியும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். திருநெல்வேலி மற்றும் மணிமுத்தாறு ஏ.ஆர். ரிசர்வர்டு போலீஸ் படையிலும், ஸ்பெஷல் பார்ட்டி பிரிவிலும் தேவர் போலீஸ், தேவர் அல்லாத போலீஸ், நாடார் போலீஸ் என மூன்று பிரிவுகள் இப்பவும் உள்ளன. இந்த மூன்று பிரிவுகளை அரசு ஆண்டாண்டு காலமாக நியமித்து செயல்படுத்தி வருகிறது. எஸ்.சி. சமுகத்தினர் ஒன்றாக்க கூடும் இடங்களில் அவர்கள் பகுதியில் கோயில் திருவிழா, திருமணம், காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவர் போலீசை அனுப்புவார்கள். தேவர் மத்தியில் பிரச்சனை என்றல் எஸ்.சி. போலீசை அனுப்புவார்கள். இந்த நடைமுறை கடந்த 15 ஆண்டுகளாக திருநெல்வேலியில் இருக்கிறது. காவல் குடியிருப்புகளைக் கூட தேவர், தேவர் அல்லாதவர், நாடார் என பிரித்து வைத்திருக்கிறார்கள். சிறைச்சாலையிலும் 4 -ஆம் பிளாக் எல்லாம் எஸ்.சி. கைதிகள், 6 -ஆம் பிளாக் எல்லாம் தேவர் கைதிகள் என இருக்கும். அந்தந்த கைதிகளுக்கு அந்தந்த சமுகங்களைச் சேர்ந்த காவல்துறையினரை நியமிப்பார்கள். தேவர் கைதிகளை அடிக்க எஸ்.சி. கைதிகளையும், எஸ்.சி, கைதிகளை அடிக்க தேவர் கைதிகளையும் அனுப்புவார்கள். இந்த நோய் இப்போது திருச்சிக்கும் பரவி வருகிறது. இதே நிலைதான் இராமநாதபுரத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் காவல் அதிகாரிகாளல் துணிச்சலாக இப்படியொரு துப்பாக்கிச் சூடு நடத்த முடிகிறது. எனவே, இது குறித்து விசாரிக்க ஒருநபர் கமிஷனை நியமிக்காமல் முழுமையான சி.பி.சி.அய்.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
ஜான்பாண்டியனின் மேற்கண்ட வாக்குமூலம் தமிழக போலீசின் சாதியாதிக்க உண்மை நிலையை சுடச்சுட வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. பிரிட்டிஷ் விட்டுச்சென்ற முடைநாற்றக் காவல்துறை சாதிமயமாகிப் போனது ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பில் ஏற்பட்ட ஒரு துயரம்தான். ஆகவே. தான் இநதிய மற்றும் தமிழக காவல்துறையைப் பற்றிய மதிப்பீட்டுச் சீராய்வு தேவை என தற்போது சர்வதேச அளவில் விவாதங்கள் எழுந்து வருகின்றன. குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் தமிழக போலீஸ் என சொல்லிக் கொண்டாலும், மனித உரிமைகளை மதிப்பதில் ஜனநாயக வழியில் ஒரு சமுகத்தை வழிநடத்துவதில் மிகவும் பிற்போக்கானவர்கள் என்ப‌து பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நிருபணமாகி உள்ளது. காமன்வெல்த் நாடுகளின் மனித உரிமை முயற்சிக் குழுவானது (Commonwealth Human Rights Initiative – CHRI) மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கிய காவல்துறை நடவடிக்கைகள், திட்டங்கள், புதிய அணுகுமுறைகள், சட்ட அமலாக்கங்கள், நிதி ஒதுக்கீடுகள், மக்களுட‌ன் இணைந்த‌ மாதிரி காவல் நிலையங்கள்-2006 (Model Police Act – 2006) போன்ற மறுசீரமைப்பு நடைமுறைகள் எதுவும் தமிழ்நாட்டின் காவல்துறைக்குள் பேச்சளவில் கூட இல்லை. 2008-ல் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தமிழ்நாடு காவல் மசோதா அறிக்கையில் (Tamilnadu Police Bill,2008) இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலில் மனித உரிமை அணுகுமுறையை 2008 சூலை 22-ல் ஆய்வு செய்து வி.பி. சாரதி வெளியிட்ட காவல் சீர்திருத்தம், அதன் மனித உரிமை நடவடிக்கைகள் (Tamilnadu’s New Initiatives on Police Reforms – A Commaner’s Perspective: Exercises in Subterfuge) மற்றும் 1979-ல் தேசிய காவல் ஆணையம் (National Police Commission) கொண்டு வந்த ஏழடுக்கு காவல் சீர்திருத்தம் (Seven Steps to Police Reform), உச்ச நீதிமன்ற நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் விமர்சித்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நிலையான மனித உரிமை அணுகுமுறை (Standards and Procedure for Crowd Control) இவை எதையும் தமிழ்நாட்டு போலீஸ் ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை.
சாதி-ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் தமிழக போலீசுக்கு மேற்கண்ட சட்டம்-ஓழுங்குகள் ஒருபோதும் பொருந்தாதோ என்னவோ! எனவேதான் பரமக்குடியில் இந்த நூற்றாண்டிலும் இப்படியொரு கேவலமான காட்டுமிராண்டிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் பரமக்குடி துப்பாக்கிச்சூடு கலவரத்துக்கும் ஜான்பாண்டியனுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என நம்மால் நன்கறிய முடிகின்றது. அவருடைய ஆளுமை வளர்ச்சியையும், இயக்க எழுச்சியையும் தலைமைத்துவப் பணபுகளையும் ஜீரணித்துக் கொள்ள முடியாத போலீசும், ஆதிக்கச் சாதியினரும் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கிச்சூடு இது என்று வெளிப்படையாகத் தெரிகிறது. எதற்காக இவற்றைச் சொல்ல வேண்டியுள்ளது என்றால், ஒடுக்கப்பட்ட மக்களிட‌ம் களப்பணியாற்றும் எந்த ஒரு தலித் தலைவரும் மணல், ஜல்லி ஏவார‌ம் செய்து, குவாரி நடத்தி, சாதியைச் சொல்லி மீசை முறுக்கி, ஆண்ட பரம்பரை என அடியாள் பலத்தோடு அடாவடி செய்து, கந்துவட்டி வசூலித்து, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு சமுக அரசியலுக்குள் களமிறங்கவில்லை. ஆதிக்க சாதிகள் அப்படி உருவாகிதான் தங்கள் சுயநலப் பாதுகாப்புக்காக கடைசியில் அரசியலில் நுழைந்து சமுகத் தலைவர்க‌ளாக பாவனை செய்கிறார்கள். ஆனால் தலித் தலைவர்கள் எல்லாம் சம நீதிக்கான ஜனநாயகத்துக்கான கருத்தியல் புரிதலோடு களமிறங்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமுகத் தலைவராக பரிணமித்து, போலீசாலும், ஆதிக்க சாதியாலும், ஊடகங்களாலும் இறுதியில் ரவுடிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதுதான் வேடிக்கை. அவிழ்த்துப் போட்டு கண்டிக்க வேண்டிய கொடுமையல்லவா இது!
ஒவ்வொரு தலித் தலைவருக்கும் அவர் சார்ந்த சமுகத்தின் மீதான ஈடுபாடும், சாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான கோபமும், கிளர்ச்சியும்தான் அவர்களை அச்சமுகத்தின் தலைவர்களாக எழுச்சி பெறச் செய்துள்ளது. ஜான்பாண்டியன் அப்படியான சமூக நெறிமுறைகளில் பக்குவப்பட்டு வளர்ந்தவர் என்பதை ஆதிக்கச் சமூகங்களும், ஊடகங்களும், போலீசும் உணராத காரணத்தினால்தான் ஒரு மாபெரும் மாவீரனின் குருபூஜை நாளன்று, இமானுவேல் சேகரனையும் இழிவுபடுத்தி, ஜான்பாண்டியனை ரவுடியாகச் சித்தரித்து, அவரின் எழுச்சியையும் நசுக்கப் பார்க்கிறது தமிழக போலீசு. மதுரை டவுன் ஹால்ரோட்டில் ஜான்பாண்டியன் செருப்பு வாங்கப்போனால் அவரின் அழகான, ஆஜானுபாகுவான மிடுக்கைக் காண இனம் கலந்த ஒரு ரசிகப்பட்டாளமே அணி திரளும். யாராக இருந்தாலும் ஜான்பாண்டியனைத்தான் நிமிர்ந்து பார்க்க வேண்டும். அவர் யாரையும் நிமிர்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. மற்றவருக்கு எரிச்சலை ஏற்படுத்தும அப்படியொரு வசீகரத் தோற்றம் கொண்டவர். அவர் சாப்பிடுவதை யாராவது நோயாளிகள் சுற்றி நின்று வேடிக்கைப்பார்த்தாலே போதும். நாமும் இது போல் நொறுங்கச் சாப்பிட்டு, தெம்பாக நூறாண்டு வாழ‌ வேண்டும் என்கிற‌ தன்னம்பிக்கை பிறக்கும்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் களப்பணியாற்ற தன் வாழ்வை அர்ப்பணித்த ஜான்பாண்டியன் என்கிற ஒரு சராசரி தனி மனிதனின் இளமைக்காலமும், சாதி ஒழிப்பைத் தூக்கி நிறுத்திய இல்வாழ்க்கையும் போலீசு, பொய்வழக்கு, சிறைச்சாலை, நீதிமன்றம் ஆகிய கொடுங்கோல் உக்கிரத்தால் அலைக்கழிக்கப்பட்டு, போராட வேண்டிய காலங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன‌. இத்தகைய உளவியல், பொருளாதார இழப்பீட்டுக்கு போலீசும், அரசும் என்ன விலை கொடுக்க முடியும்? தேவைப்பட்டால் அவரை எந்த நேரத்திலும் என்கவுண்டரில் கொல்ல போலீசும், இந்த‌ அரசும் தயங்காது என்பது மட்டும் நிச்சயம். மாவீரன் இமானுவேல் சேகரனின் ரத்தத்தில் உருவான ஜான்பாண்டியனுக்கு உயிர் ஒரு போதும் வெல்லம் அல்ல. என்றைக்கோ அந்த உயிரைத் துறந்துவிட்டுதான் இந்த‌ சமுகத்திற்கு பணியாற்றக் களத்தில் இறங்கியுள்ளார். கண் முன்னே நமக்கு நல்ல பல தலைவர்கள் கிடைத்த போதும், அவர்களைத் தலைவர்களாகப் பாவிக்காமல் தவறவிட்டு தவித்த நினைவேந்தல் கொடுமைதான் இங்கே தலித் வரலாறாகிக் கிடக்கிறது. அந்த நிலையை மாற்ற வேண்டுமெனில் நமக்குக் கிடைத்தத் தலவர்களை தலைவர்களாகப் பாவிப்பதும், அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் பங்கேற்பதும், இயக்கங்களில் இணைவதும் காலக்கட்டாயமாகும். இந்த‌ உண்மையை ஆதிக்க சமுகங்களும். ஊடகங்களும், போலீசும் உணர மறுத்தாலும், ஒடுக்கப்பட்ட சமுகங்கள் உணர வேண்டும். ஜான்பாண்டியன் நம் சமூகத் தலைவர் என்று அவர் பெயரை உங்கள் நெற்றியிலும், மார்பிலும் எழுதி வையுங்கள். அடுத்த‌ தலைமுறையாவது இயக்கங்களை அடையாளம் காணட்டும்.
Posted in Uncategorized | 5 பின்னூட்டங்கள்

பாலஸ்தீன இயேசுவும், பரமக்குடி இம்மானுவேல் சேகரனும்

பல தரப்பு மக்களையும். மத நிறுவனக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு கிறித்துவம் எடுத்துக் கொண்ட வினையூக்கிகள் அதிகம்,  ஒடுக்கப்பட்ட மக்களுக்கான
மதமாக தன்னை முன்னிறுத்தி, அவர்களையே தனது ஆதரவுக் களமாகவும் தேர்ந்தெடுத்து, அதுகளுக்கான‌ நோக்கங்களில் கிறித்துவம் ஓரளவு தன் நிறைவையும் கண்டுள்ளது. எம்.ஏ. ஷெரிங்கின் வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்தியாவில் விவிலிய (பைபிள்) சமயத்தைப் பரப்பச் செய்வது ஒரு நோக்கமாக இருந்தாலும், அது அம்மக்களுக்கு சமுக வளர்ச்சியையும். நாகரீகத்தையும் கொடுத்திருக்கிறது என்பதை எளிதாக மறுத்துவிடவும் முடியாது. (M.A. Sherring, The History of Protestant Mission in India, Beneras: 19874, p.5). இப்படிச்
சொல்வதால் இந்தியாவில் நுழைந்த கிறித்துவம் இந்திய சாதிய அமைப்பை ஏற்றுக் கொண்டதையும், அதற்கான நியாயப்பாட்டை இந்து மனோபாவத்துடன் கற்பித்ததையும். அத்தகைய கொடுஞ்செயலுக்கு டி நொபிலி போன்ற மிஷினெரிகளே விளக்குப் புடிச்ச‌தையும் வரலாற்றில் இருந்து மறந்துவிடவோ, மறைத்துவிடவோ முடியாது.ஒரு மதத்தின் இத்யாதிகளில் இருந்து ஒடுக்கப்பட்ட  மக்கள் ஒரு சில பயன்பாட்டைப் பெற்றுக் கொண்டாலும், அந்த மதத்தின் இத்யாதிகளை விவாதிக்கும் சுய விமர்சனம் தலித்துகளுக்கு எப்போதும் இருந்தது உண்டு. மற்ற மதங்களை விமர்சிப்பதை விட கிறித்துவத்தின் மீதான விமர்சனங்களுக்கு எதிர்வினை மிகவும் குறைவு என்ற போதிலும் அதனை குண்டாங்குறையாக விமர்சிக்க முடியும்.  நார்மன் மெய்லர், பெர்ட்ரன் ரஸ்ஸல், டேவிட் பிரௌன், பிலிப் புல்மான், பால் சக்கரியா
, தியான்சந்த் கார், செகுந்தோ, ஓஷோ போன்றோர் ஜனநாயகப் போக்கில் அவ்வாறு விமர்சனக் கண்ணோட்டத்துடன அணுகி இருக்கிறார்கள்.ஒரு மதத்தையோ, அதன் புனித இலக்கியங்களையோ, அதில் சொல்லப்படும் கதாபாத்திரங்களையோ எந்த மக்களாயினும், அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எப்படி வேண்டுமானாலும் உருவகித்துப் பாத்தியம் கொள்ளலாம்.  அல்லது தார்மீக எல்லைகளைக் கடந்தும் விமர்சிக்கலாம்
என்கிற நியதியை கிறித்துவ மதம் தன்னுள் ஏற்றுக் கொண்டுள்ளது. அவ்வாறு ஏற்றுக் கொண்டதனாலேயே ஒடுக்கப்பட்ட மக்களிடம் அதனால் வசியப்படவும் முடிகின்றது.  சமுக அறிவியலையும். மதச் சார்பற்ற ஆன்மீகத்தையும் முரண்பாட்டு மறையாகப் பகுப்பாய்வு செய்கிற யுக்தி பார்ப்பனிய மதங்களுக்கு எதிரான பிறவிக் குணமாகக் கொண்டதால் தலித்துகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அதனை விமர்சிக்காமல் இருக்க மாட்டார்கள்.  அவர்களின் சமுக நோக்குடைய விமர்சனங்களை உள் வாங்கியதனாலேயே அந்த மதமும் தன்னில் தானே தன்னுள் செழுமையடைந்திருக்கின்றது எனலாம்.  உலகம் முழுவதிலும் நீதிக்காக கூக்குரல் எழுப்புகிற எல்லா சமுகங்களும் இப்படித்தான் நடந்து கொள்கின்றன,  கிறித்வத்தில் அதற்கான சிறு இடைவெளி இருப்பதால் தலித்துகள் அதனை தற்போது விடுதலை நோக்கிப் பூர்த்தி செய்து வருகின்றார்கள்.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களிடம் கிறித்துவம் எவ்வாறு ஊடாடியது என்பது ஒரு சுவாரஸ்யமான வரலாறு.  அதிலும் தேவேந்திரர்களை உள்ளடக்கிய தென் தமிழகத்தின் கிறித்துவ எழுச்சியானது மாறுபட்ட குணாம்சங்களைக் கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகக் களமிறங்கிய தேவேந்திரர்களில் சிலர் கிறித்துவர்.  இமானுவேல் சேகரன் உட்பட தேவநேயப் பாவாணர், பெருமாள் பீட்டர், பாலசுந்தராசு, தேவாசிர்வாதம், ஜான் பாண்டியன் போன்றோர் சிறு வயதிலிருந்து திருச்சபைகளின் நிகழ்ச்ச் நிரல்களுக்கு உட்பட்வர்களாக வளர்ந்துள்ளார்கள். இன்னொரு பக்கம் இவர்கள் திருச்சபை என்கிற அடையாளத்தைத் தகர்த்தெறிந்து சாதிய ஒடுக்குதல்களுக்கு எதிராகப் போராடி, சமுக அரசியல் இயக்கத்தையும் கட்ட முயற்சித்துள்ளார்கள்.  நடைமுறைப் பண்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து அல்லது தான் ஒரு சமுகம் என்கிற உணர்வில் இருந்து கொஞ்சமும் மாறுபடாமல் தங்களின் போர்க்குணத்தை அப்படியே திருச்சபையிலும் பதித்துக் காட்டியுள்ளார்கள்.
மாவீரன் இமானுவேல் சேகரன் படுகொலைக்குப் பிறகு தேவேந்திரர்களின் போர்க்குண வீரியம், தட்பவெப்பம் குறையமல் திருச்சபைகளுக்குள்ளும் – வெளியிலும் சரியான எதிர் வினையாற்றி இருக்கிறது.  உதாரணத்திற்கு திருநெல்வேலி. மதுரை. இராமநாதபுரம், விருதுநகர், துத்துக்குடி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் கடந்த கால தலித் நடவடிக்கைளைச் சொல்லலாம். முதுகுளத்தூருக்குப் பக்கத்தில் இருக்கிற வீரம்பல் கிராமத்தில் குண்டு துளைக்கப்பட்ட தேவாலயச் சுவர்கள் போர்க் குணப்பண்பாட்டின் இன்னொரு அடையாளமாக இன்றுவரையிலும் எழுந்து நிற்பதைக் காணலாம்.  மன்னிப்பு, அன்பு, சகோதரத்துவம், சமாதானம் என்கிற ஆன்மீக வளையத்துக்குள் இருந்து கொண்டே ஆயுதம் ஏந்திய எதிர்த் தாக்குதலிலும் நம்பிக்கை கொண்டிருந்த அற்புதத்தை இங்குதான் காணமுடியும்.
மூளைச்சலவைச் செய்யும் திருச்சபைகளின் ஆட்டு மந்தை இறையியல் கோட்பாட்டுக்குள் தங்களை உட்படுத்திக் கொள்ளாமல் வீரியம் மிக்கப் போர்க்குணத்தின் இயக்க மனப்பான்மையை கிறித்துவ தேவேந்திரர்களிடம் இன்றளவும் காணமுடியும்.  2001-ல் பரளச்சி கிராமத்துக்கு அருகில் உள்ள தெற்கு நத்தத்தில் போதக அய்யரே இந்த மஞ்சப் பைபை பீடத்துல வச்சு குடுங்க என்று அரிவளை ஆசிர்வாதம் பெற்றுச் சென்று போராட்ட களத்தில் இறங்கிய அனுபவம் அவர்க‌ளுக்கு உண்டு. இது போக சமுகத்தில் எழுகிற பிரச்சனைகளில் ஈடுபட்ட தேவேந்தரிர்களின் குடும்பப் பாதுகாப்பிற்கும், வழக்குச் செலவுகளுக்கும் திருச்சபை சமுகத்தில் இருந்து நிதி திரட்டும் மரபை சில திருச்சபைகளில் இன்றும் பின்பற்றுகின்றனர். தீண்டாமை அனுபவத்தைச் சுமந்த தேவேந்திரர்களுக்கு திருச்சபைகளுக்குள்ளும் இப்படியொரு போர்க்குணம் இருப்பது ஒட்டுமொத்த திருச்சபை மறை மாவட்ட ஆதிக்கக் கிறித்துவர்களுக்கும் எரிச்சலை உண்டு பண்ணக்கூடியது,  அதனாலேயே அதிகாரத்தை நோக்கிய திசைகளில் பல இழப்புகளையும் கிறித்துவ தேவேந்திரர்கள் சந்தித்தார்கள்.  ஒருவகையில் திருச்சபையும். சமுகமும் தேவேந்திரர்களுக்கு ஒரே நேர்க்கோடுதான் என்கிற தோற்றத்தைக் கொடுப்பது போல் தெரிந்தாலும். கிறித்துவத்தை தங்களின் விடுதலைக் குறியீடாகப் பாவித்து. கும்பல் கும்பலாக திருச்சபைகளை நோக்கி தேவேந்திரர்கள் அணி திரண்டதில்லை என்கிற வமிர்சனமும் திருச்சபை மட்டத்தில் உள்ளது. அதற்கு காரணம் ஒரு தலித் கிறித்துவராக மதம் மாறினால் சற்றேரக் குறைய அவர் ஒரு கிறித்துவ காந்தியவாதியாக மாற்றப்பட்டு விடுகிறார். தேவேந்திரர்கள் இயல்பாகவே போர்க்குண்ம் கொண்டவர்கள். கிறித்துவம் இன்று நச்சு விதையாகத் தூவி வரும் கருத்தியலான நாமெல்லாம் பாவிகள், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு, இந்த உலகாத்தாஈக் குறித்துக் கவலைப் படாமல் பரலோகத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், உங்கள் துன்பம் எதுவானாலும் ஜெபம் பண்ணுங்கள்,  கிளர்ச்சி, போராட்டம் ஆகிய தீயப் பழக்கங்களில் ஈடுபடாதீர்கள் போன்ற பிற்போக்குத்தன இறையியலில் தேவேந்திரர்களுக்கு நாட்டம் இல்லாமல் இருக்கலாம். ஆகையால் தான் இந்து மதக் கொடுமைகளுக்கு எதிராகப் போராட்டக் குணத்தையும், எதிர்ப்புக் குறியீட்டையும் வலியுறுத்தும் இஸ்லாம் நோக்கி மதம் மாறுகிறார்கள்.  இது குறித்து விவாதிக்க கடந்த நூறாண்டுகளில் கிறித்துவ தமிழ்த் திருச்சபைகளில் தேவேந்திரர்களின் நிலை குறித்து விரிவான ஆய்வு ஒன்றும் தேவைப்படுகிறது.
தலித்துகள் மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு, எவ்வாறு கிறித்துவர்களானார்கள்? என்கிற நிறுவனமயமாக்கப்பட்ட சிந்தனையின் அடிப்படையிலேயே இந்தியத் திருச்சபை வரலாறுகளும். தலித் இறையியல் கோட்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.  ஆனால் தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட தலித்துகளை நோக்கித் திரண்டு சென்ற மதங்களை தலித்துகள் உளவியல் ரீதியாக எவ்வாறு அணுகினார்கள்? அதனருகில் அவர்கள் சென்றதற்கான விடுதலைக்காரணிகள் என்ன? என்பது திருச்சபைகளுக்குள் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டதில்லை. அப்படி பேசினால் ஒரு மதத்தை மட்டுமல்ல, அதைச் சார்ந்தவர்களையும் அவர்களது வரலாற்று முரண்களையும் பேச வேண்டியிருக்கும்,  எனவே, தமிழ்க் கிறித்துவ மேலாளர்களாக இருந்தவர்கள் திட்டமிட்டே தலித் கிறித்துவ கோட்பாட்டு முரண்களைத் தவிர்த்துக் கொண்டார்கள்.  உதாரணமாக, விவிலிய வரலாற்றையும், அதில் பேசப்படும் கதாபாத்திரங்களையும் ஏன்? மரியாள், இயேசு மற்றும் இவர்களின் பன்னிரு சீடர்களின் போராட்ட அனுபவங்களையும் குழந்தைப் பருவத்திலிருந்தே ஞாயிறு பள்ளிகளில், கதை கதையாகச் சொல்லி வரும் திருச்சபை, அந்த கதையைக் கேட்கும் குழந்தையின் மூதாதையர்களுடைய வரலாற்றையும், சமுகத்தில் அவர்களுக்கன பாத்திரத்தையும், சந்தித்த போராட்டங்களையும், ஏன் சொல்லித் தருவதில்லை? அவ்வாறு சொல்லித்தராமல் போனதாலேயே ஒரு சமுகத்தின் வரலாறு கிறித்துவ மத ரீதியான வரலாற்று விச‌யங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு நிற்கிறது என்பதுதானே அர்த்தம்.  அதையும் விட அந்த மதத்தின் இத்யாதிகளுக்கு அவர்கள் செய்த பங்களிப்பும் முற்றிலும் மறைக்கப்பட்டிருக்கிறது.  அவ்வாறு மறைக்கப்பட்ட இந்திய திருச்சபை வரலாற்றில் இருந்து கிடைத்த மாபெரும் கலகக்கார ஆளுமைதான் மாவீரன் இமானுவேல் சேகரன்.
மாவீரன் இமானுவேல் சேகரன், இயேசுவைப் போல் வாழ்ந்து மடிந்த இந்தியாவின் முதல் கிறித்துவ களப்போராளி.  (இப்படி சொல்வதால் இம்மானுவேல் சேகரனை கிறித்துவம் என்கிற ஒற்றைச் சிமிழுக்குள் அடைத்து விட முடியாது என்பதை தேவேந்திரர்களின் குருபூஜை வரலாறு நமக்கு நன்றாகவே உணர்த்தியுள்ளது). இவர் தமிழ சுவிசேஷ லுத்திரன் திருச்சபையைச் (டி.இ.எல்.சி) சார்ந்தவர்.  பரமக்குடி அருகேயுள்ள செல்லுர் சேரியில் 1924 அக்டோபர் 9-ல் பெரியவர் வேதநாயகம் வாத்தியாருக்கும், ஞானசவுந்தரி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்,  தொடக்கக்கல்வியை டி.இ.எல்.சி. பள்ளியிலும், உயர் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்சு உயர்நிலைப் பள்ளியிலும் கற்றார். மரணத்தின் போது அவர் கிறித்துவர் இல்லை என சொல்லிக் கொண்டாலும், குழந்தைப்பருவம் முதல் தொடங்கிய இளமைக் கால அனுபவங்கள் அனைத்தும் ஒரு சாராசரி கிறித்துவருக்கே உரிய திருச்சபை அடையாளங்களோடு எழுச்சி பெற்றன.
படிக்கும்போது தனது 18-ஆவது வயதில் இந்த நாட்டின் விடுதலைக்காக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் (1942) பங்கேற்று, முன்று மாதங்கள் சிறை தமண்டனையை அனுபவித்தார்,  சிறை வாழ்க்கைக்குப் பிறகு பள்ளியில்  அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது,  பிறகு மீண்டும் அவர் பள்ளியில் சேர்க்கப்பட்டு 1945-ல் இராணுவத்திற்குப் புறப்பட்டார்.  பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் மூன்று ஆண்டுகளும், சுதந்திர இந்திய இராணுவத்தில் அய்ந்து ஆண்டுகளும் பணியாற்றினார்.  1857-ல் தொடங்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற முதல் சுதந்திரப் போரில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கிறித்துவர்கள் எழுப்பிய குரல் எவ்வாறு புலப்படாமல் போயிற்றோ, அது போல 1947-ல் பெறப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற சுதந்திரப்போரில் காலனிய கும்பலுக்கு எதிராகப் போராடிய தலித்துகளின் வரலாறும், கிறித்துவர்களின் பங்கேற்பும் ஒரு சேரத் தவிர்க்கப்பட்டுள்ளன,
ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் இராணுவத்தின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்ககது. யாரெல்லாம் சேரியில் இருந்து இராணுவத்திற்குச் சென்றார்களோ, அவர்கள் மீணடும் சேரிக்குள் சுய மரியாதை உணர்வுடன் திரும்புவதற்கு இராணுவ அனுபவமும், அதன் மிலிட்டிரி உடையும், துப்பாக்கியும், என்பீல்டு போன்ற மோட்டார் சைக்கிளும் மிக முக்கியமான பாதுகாப்பை வழங்கியது.  புரட்சியாளர் அம்பேத்கர் தொடங்கி வைத்த ஷெட்யூல்டு இனப் பேரவையை தென் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய தென் மணட்லப் பொறுப்பாளர், மேலக்கால் வீரபத்திரன் (முகமது பிலால்) சோழவந்தான் பகுதியில் ஒற்றை இராணுவமாக நின்று எதிர் வினையாற்ற முடிந்ததற்கு காரணம் இராணுவ அனுபவம்தான்.
அவ்வாறான அனுபவத்தைக் கொண்டு 1952-ல் தனது அவில்தார் பணியைத் துறந்த‌ இமானுவேல் சேகரன் ஊர் திரும்பினார்.  அப்போது நடந்து கொண்டிருந்த பொதுத் தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் கவனிக்கத்தக்கது.  இந்த நாட்டின் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்வகள் எல்லாம் களத்தில் அன்றைய இளம் வேட்பாளர்கள்.  காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்த இராஜாஜி குல‌க்கல்வியைக் கொண்டு வந்த போது அதற்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்தியவர் இம்மானுவேல் சேகரன்.  அதுமட்டுமல்ல, தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது என சாக்கு சொல்லி, அதனை ஈடுகட்ட கிராமங்களில் உள்ள பள்ளிகளை மூடுகிறோம் என இராஜாஜி எடுத்த முடிவை மிக வன்மையாகக் கண்டித்தார். கிறித்துவ நிறுவனங்களுக்குச் சொந்தமான பள்ளிகளுக்கு எதிராகப் பார்ப்பனர்கள் போர்க் கொடி பிடித்த போது ஒடுக்கப்பட்ட சமுகத்தின் குழந்தைகளே பள்ளிகளை நோக்கிப் புறப்படுங்கள் என பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் வட்டாரங்களில் பிரச்சாரம் செய்தார். கிறித்துவ திருச்சபைகளுக்கு சொந்தமான பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்ற‌ளவும் இயங்க முடிகிறதென்றால் அன்றைக்கு மாவீரன் முழக்கிய போர் முரசு என்பதே.
1952-ல் நிகழ்ந்த பொதுத்தேர்தல் இம்மானுவேல் சேகரனை கிறித்துவ வட்டாரத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து மாபெரும் சமுகப் போராளியாக்கியது.  அந்த தேர்தலில் உ. முத்துராமலிங்கம் என்பவரை எதிர்த்து களத்தில் போட்டியிட்டார்.  இச்செய்தி அப்பகுதிகளில் காட்டுத்தீ  போல பரவியது.  தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமையை மீட்க அய்ந்து ஆண்டுகள் போராடினார்.  அது மட்டுமல்ல இரண்டொரு மாவட்டங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய‌ உ. முத்துராமலிங்கம் என்பவரின் சாதியச் சேட்டைகளை சமூகத்திற்குப பட்டியலிட்டுக் காட்டினார்.  இதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமல்ல பாதிப்புக்குள்ளான பிற்படுத்தப்பட்டவர்களையும் போராட்டக்களத்தை  நோக்கி அணி திரள அழைப்பு விடுத்தார்.  உ. முத்துராமலிங்கம் என்பவரின் சொந்த சமுகத்தைச் சேர்ந்தவர்களே இம்மானுவேல் சேகரனின் விடுதலைக்கான போர்க்குணத்தை வரவேற்றனர்.  இன்றைய தினகரன் நாளிதழை தோற்றுவித்த அதன் ஆசிரியரான தினகரன், இம்மானுவேல் சேகரனுக்கு ஆதரவாகவும்,  உ. முத்துராமலிங்கத்துக்கு எதிராகவும் தனது தினகரன் பத்திரிக்கையில் எழுதினார் என்பதற்காக தன் சொந்த சாதிய சகாக்களால் படுகொலையும் செய்யப்பட்டார்.
ஒரு தலித் கிறித்துவ களப்போராளி தொடங்கி வைத்தப் போராட்டம் தென் மாவட்டங்களில் மட்டுமல்ல, தமிழகம் கடந்து ஓயாத அலைகளாகப் பேரோசை எழுப்பியது.  1957-ல் பத்ரகாளிக்குப் பலி கொடுப்பதற்காக காடமங்குளம் கிராமத்தில் இருந்து ஒன்பது தலித்துகளை உ. முத்துராமலிங்கத்தின் சகாக்கள் தூக்கிப்போனார்கள் என்ற நிகழ்வும், அதன் மீதான வழக்கு விசாரணையும் அன்றைய அரசியலில் சலசலப்பை உருவாக்கியது.  இந்த பிரச்சனையை இராமநாதபுரம் ஆட்சித்தலைவர் வரைக்கும் இம்மானுவேல் சேகரன் கொண்டு சென்றார். மறுநாள் பண்ணந்தலை கிராமத்தில் தேவேந்திரர்கள் ஒன்று கூடி உ. முத்துராமலிங்கத்தை பஞ்சாயத்து வரை இழுத்துச் சென்று மாபெரும் குற்றவாளியாக நிற்க வைத்து, கையெழுத்திட வைத்த நிகழ்வுதான் இமானுவேல் சேகரன் நேரிடையாகப் பங்கேற்ற கடைசிப் போராட்டம்.  அதன் பின்னர் களப்போராளி இயேசுவின் வாழ்வில் ஏற்பட்ட எல்லா வன்கொடுமைகளையும் இம்மானுவேல் சேகரன் எதிர்கொண்டார். ஒரு குற்றமும் அறியாத அவரை சமுக விரோதியாகப் பாவித்து அவரை கொல்ல உ. முத்துராமலிங்கத்தின் ஆதிக்கச் சமுகங்களால் சதித்திட்டம் தீட்டப்பட்டது.  சமாதானக் கூட்டம் நடந்த மறுநாள், அதாவது 11.09.1957 அன்று மாலை எமனேஸ்வரம் கிராமத்தில் நடந்த பாரதி விழாவிற்குச் சென்று சிறப்புரையாற்றி விட்டு இரவு 8.30 மணியளவில் பரமக்குடியில் இருந்து தனது இல்லத்திற்கு திரும்பினார்.  அவரது வீடு பரமக்குடி வளைவு அருகில், காந்தி சிலை வீதியில் மேற்புறத்தில் கிழக்கு நோக்கி அமைந்திருந்தது.  இரவு உணவை முடித்து விட்டு வளைவுக்கு கிழக்கே 50 அடி தொலைவில் உள்ள ஒரு பெட்டிக் கடைக்குப் போன இம்மானுவேல் சேகரன் எதிர்பாராத நிலையில் கொடிய ஆயுதங்களால் பதுங்கி இருந்த ஆதிக்கச் சாதி ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.  அவர் கொலையுண்ட செய்தி தமிழத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய‌து.  இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வீடுகளும், கடைகளும் மூடப்பட்டு நடமாட்டம் அருகிக் காணப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஆயுதமேந்திய காவல் துறையினரும். இராணுவத்தினரும் மாவட்டம் முழுக்கக் குவிக்கப்பட்டனர்.  அன்று குவிக்கப்பட்ட ஆதிக்க சமுகங்களுக்கான காவல் பாதுகாப்பு இன்றுவரை விலக்கிக் கொள்ளப்படவில்லை. தங்கள் தலைவரை, வழிகாட்டியை, வீரத்தளபதியை இழந்து தவித்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஆதிக்கச் சமுகங்களுகும் இடையே மோதல் வெடித்தது.  தாக்குதல்கள் தொடர்ந்தன.  அது முதுகுளத்தூர் கலவரமாக வெடிக்கத் தொடங்கியது.
களப்போராளி இம்மானுவேல் சேகரனின் கொடூரமான இப்படுகொலை வரலாற்றை வாசித்து முடிக்கிற எந்த ஒரு கிறித்துவருக்கும், களப்போராளி இயேசுவின் படுகொலைக் காட்சிகளும் நிச்சயம் கண் முன் வந்து நிற்கவேண்டும்.  அல்லது பெரிய வெள்ளி (Good Friday) என்கிற நாளில் இயேசுவின் படுகொலையை நினைவுகூறும் ஒவ்வொரு கிறித்துவருக்கும் இம்மானுவேல் சேகரனின் படுகொலை நினைவுகளும் ஊடாடிப்போகும்.  அப்படி ஒரு அனுபவத்தைக் கூறாமல் இருக்க முடியாது.  ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப்[ போராடிய இயேசுவுக்கு நிகழ்ந்த வன்கொடுமையை நினைவூட்டி வரலாறு பேசிவரும் கிறித்துவ திருச்சபைகள், 50 ஆண்டுகளுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்ட இம்மானுவேல் சேகரனின் வீரவணக்கத்தைத் துளி கூடி திருச்சபைகளுக்குள் நினைவு கூறுவதில்லை என்பதை எதைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. அத்தகைய படுபாதகத்தை இறையியல் பேசி மன்னிக்கவும் முடியாது.  நூறாண்டுகளுக்கு முன் ஜார்க்கண்ட் மாநில ஆதிவாசி மக்களுக்குக் கல்வியையும், நிலத்தையும் பெற்றுத் தருவதற்காகப் போராடி கிறிஸ்மஸ் என்கிற பண்டிகையையே அவர்களது வாழ்வில் இருந்து வேரறுத்து, சாகும்வரை பட்டினி கிடந்து செத்துப்போன இருபத்தேழு வயதுப் போராளி பிர்சா முண்டாவை வட இந்திய திருச்சபைகள் (சி.என்.அய்) எப்படி இருட்டடிப்பு செய்ததோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் இங்கே தென்னிந்திய திருச்சபைகளும் (சி.எஸ்.அய்) தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபைகளும்., ஏனைய பிற திருச்சபைகளும் அவர்களது திருச்சபை வரலாற்றுப் பக்கங்களில் இருந்து இம்மானுவேல் சேகரன் என்கிற மாபெரும் களப்போராளியை முற்றிலும் மறைத்துவிட்டது, மறந்தும் விட்டது. ஆகையால் தான் ஒரு மாபெரும் தலைவரின் குருபூஜை நாளில் நிகழும் வன்கொடுமைகளையும், படுகொலையையும், துப்பாக்கிச் சூட்டையும் வேடிக்கைப் பார்க்கின்றது. இதெல்லாம் திருச்சபைகளுக்கு அநீதியாகத் தெரிவதில்லை. அவர்கள் விசுவாசிக்கும் ஐரோப்பிய, அமெரிக்க கலவரம் நடந்தால் மெழுகுதிரி பிடித்து துக்கம் அநுசரிப்பார்கள். இது தான் இன்றைய போராட்ட இறையியல். இதை எப்படி தேவேந்திரர்கள் ஏற்பார்கள். அதனால் தான் அவர்களின் பிரச்சனைகளில் திருச்சபைகள் மவுனம் காக்கின்றன.
இயேசுவுக்கும், இமானுவேல் சேகரனுக்கும் நிகழ்ந்த படுகொலை அனுபவமும், வன்கொடுமை வரலாறும் அடிப்படையில் ஒன்றுதான்.  இருவரும் பேராதிக்கங்களுக்கு எதிராகப் போராடியவர்கள்.  நீதிக்கானப் போராட்டத்தில்  தன்முனைப்புக் காட்டியவர்கள்.  அப்படி போராடும்போது தங்களுக்கு சாவு வரும் என்பதை முன்னரே அறிந்து. துளியும் பொருட்படுத்தாமல் எதிர்கொண்டு, எதிராளிகளால் படுகொலையும் செய்யப்பட்டார்கள்.  இயேசுவில் தொடங்கிய இக்களப் போராளிகளின் அணிவகுப்பு இன்று இமானுவேல் சேகரன் வரை நீடித்து, எருசேலமிலும், பரமக்குடியிலும் விடுதலை நெருப்பை மூட்டி வருகிறது. பாலஸ்தீனத்தில் நிகழும் குண்டுவெடிப்புக்கும்,  பரமக்குடியில் கட்டவிழ்த்துவிடப்படும் துப்பாக்கிச் சூட்டுக்கும் அர்த்தம் ஒன்று தான். புவியியல் எல்லை தான் மாரறுபட்டிருக்கின்றது.
இப்படியான கிறித்துவ விவிலிய கோட்பாட்டுச் சிந்தனையை. கிறித்துவ‌த் திருச்சபைகளுக்குள் உசுப்பிவிடும் போது அல்லது ஒடுக்கப்பட்டவர்களின் அனுபவங்களை தலித் இறையியலாக்கமாக அர்த்தப்படுத்தும்போது அடிப்படைவாதக் கிறித்துவர்களுக்கு பல முரண்பாடுகள் எழும். அவ்வாறான சந்தேகங்களைத் தீர்க்க நினைப்பவர்கள் ஆலன் டன்டீஸ் என்கிற பெர்க்கிலி இறையியல் அறிஞர் மோசேயைப் பற்றியும், எலியாவைப் பற்றியும் ஒப்புமைப்படுத்தி எழுதியுள்ள களப்போராட்ட ஆளுமைகளை வாசித்துப் பார்க்க வேண்டும்.  அதில் அவர் இயேசுவையும் அவரின் களப்போராட்ட தலைமைத்துவத்தையும் மிக அழகாக எடுத்துரைப்பார். இத்தகையான கருத்தாக்கத்தை தலித் அல்லாத சாதிக் கிறித்துவர்கள் விமர்சிக்கிறார்களோ இல்லையோ, நமது கனம் சூடோ தலித் கிறித்துவர்கள் வரிந்து கட்டி வாய் பேசுவதில் கில்லாடிகள். இயேசுவும், இமானுவேல் சேகரனும் ஒன்றா! இயேசு ஒடுக்கப்பட்ட மக்களுக்காவே அடிப்பதற்குரிய ஆட்டுக்குட்டியாக‌ கடவுளால் அனுப்பப்பட்டவர். அதுமட்டுமல்ல இயேசு உலகம் தழுவிய ஒரு மாபெரும் தலைவர்.  ஆனால் இம்மானுவேல் சேகரன் அப்படியில்லையே.  அவர் ஒரு பகுதிக்குட்பட்ட தலைவராயிற்றே.  இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவர்.  இம்மானுவேல் சேகரன் எங்கே உயிரோடு எழுச்சி அடைந்தார்?  இயேசுவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கும் வல்லமை வாய்ந்தது. ஆனால் இம்மானுவேல் சேகரன் சிந்திய ரத்தம் தொடக்கூடாத தீட்டாயிற்றே, என்று பேசும் மத அடிப்டைவாதிகள் கிறித்துவ மதத்திற்குள்ளும் இருந்து கேள்வி எழுப்பக்கூடும். இன்னும் ஒரு படி மேலே போய் இப்படி எழுதுகிறவர்களை சாத்தானின் அந்திக் கிறித்துவர்கள் என்றும் முத்திரையிடக்கூடும்.
பெருமளவு தலித்துகளைப் பிடித்து வைத்திருக்கின்ற கிறித்துவ திருச்சபைகளில் இப்படியொரு கேள்வியை எழுப்ப எவருக்கும் அனுமதியும், அறுகதையும் இல்லை என்பதை எடுத்த எடுப்பிலேயே சொல்லி விட வேண்டும்.  வேலை வாய்ப்புக்காக மட்டுமே குத்தகையில் ஈடுபட்டு, குந்தியிருக்கின்ற கிறித்துவ சாதிய மேலாளர்கள் வேண்டுமானால் முக்க-முக்க முணகலாம். ஆனால் பரமக்குடியில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பாலஸ்ததீனத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே உள்ள ஒடுக்கப்படுதல் என்கிற அனுபவங்கள் அடிப்ப‌டையில் இரு சமுகங்களுக்கும் ஒன்றுதான என்பதை உணர வேண்டும்.  அதனை அங்கே இயேசு உரத்துப் பேசினார்.  இங்கே இம்மானுவேல் சேகரன் ஆர்த்தெழுந்து முழக்கினர்.  அவ்வளவுதான்.
இயேசு மரணத்தை நோக்கிச் சென்று எதிர்கொண்டார்.
ஆனால் மரணம் இம்மானுவேல் சேகரனை நோக்கிச் சூழ்ந்தது.
இயேசுவின் முன் ஒரேயொரு குற்றவாளி முன் நிறுத்தப்பட்டார்.
இம்மானுவேல் சேகரனைக் கொல்ல ஒரு சமுகமே குற்றவாளிக் கூண்டில்.
நகரம் முழுவதையும் தம் காவல் கட்டுப்பட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பகலில் அனைவர் முன்னிலையிலும் இயேசுவின் படுகொலை நிகழ்ந்தது.
இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் பதுங்கி இருந்து இம்மானுவேல் சேகரனை படுகொலை செய்து விட்டு பின்னர் மக்களை தங்க‌ளின் கட்டுப்பட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
சொந்த சமூகத்தைச் சோந்தவர்களே எதிரிகளாக இருந்து இயேசுவைக் கொலை செய்தனர்.
ஆனால் இம்மானுவேல் சேகரன்    ஆதிக்கச் சமுகத்தைச் சேர்ந்த எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
இயேசுவிடம் தவறு எதுவும் இல்லாததால் அவர் மீது பொய்யான குற்றம் சுமத்தினர்.   
ஆனால் இம்மானுவேல் சேகரனோ ஒரு தவறும் செய்யவில்லை.
அவர் மீது குற்றமும் சுமத்த முடியவில்லை.
இருவருக்குமான பொதுமைகள்
•    இருவரிடத்திலும் ஒரே நோக்கத்தைக் கொண்ட தன்னம்பிக்கை குடி கொண்டிருந்தது.
•    மரணம் வரும் என்பதை அறிந்திருந்தும், அதிலிருந்து தங்களைக் காப்பபாற்றிக் கொள்ள‌ எந்த சுயநலப்    பாதுகாப்பையும் தேடவில்லை.  மரணத்தைக் கண்டும் அச்சப்படவில்லை.
•    சிலுவையின் வலியையும், வேதனையையும், அருவாளின் கொடூரத்தையும் நன்கு அறிந்தவர்கள்.
•    படுகொலை நிகழ்வதற்கு முன் இருவரும் மக்கள் முன் உரையாற்றிய களப்பேச்சாளர்கள்.
•    திருப்பித் தாக்குவதில் அதி வலிமை கொண்ட போர்க்குணம் படைத்தவர்களாக இருந்த போதிலும் வன்முறையை விரும்பியவர்கள் அல்ல.
•    குறிப்பிட்ட பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தாலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்ப‌ட்ட விடுதலை வீரர்கள்.
•    இருவரின் வயதும் சற்றேறக் குறைய 34-35-க்கு இடைப்பட்ட இரத்தத் துடிப்பான, அடங்க மறுக்கின்ற அனுபவம் கொண்ட காலம்.
•    உடலில் இருந்து பிரியும் உயிருக்கு மீண்டும் அபார எழுச்சி உண்டு என நம்பியவர்கள்.
•    இருவரின் நினைவிடங்களிலும் வீரவணக்க அஞ்சலியான குட்பிரைடேவும், குருபூஜையும் இன்று வரை பதற்றம் கூடிய நிகழ்வாகவே வரலாறாகிறது.
இயேசுவின் படுகொலைக்குப் பிறகு அவருடைய சீடர்கள் திரைமறைவு வாழ்வில் பல இன்னல்களை எதிர்கொண்டு தீவிரமாகச் செயல்பட்டார்கள்.  அவருடைய மறைவுக்குப் பின் ஒரு மக்கள் கூட்டமும். பேரியக்கமுமம் உருவாகி. உலகின் எல்லா இடங்களிலும் கேலோச்சிய ரோம ஏகாதிபத்தியத்தை உலுக்கியெடுத்தது.  இம்மானுவேல் சேகரனின் மறைவுக்குப் பின் தேவேந்திரர் ச‌முகம் மட்டுமல்ல,  ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களும் அவர் பெயரில் இயக்கமாக எழுந்து நிற்கிறார்கள்.  களப்பணியாற்றி கொல்லப்படும் தலைவர்கள் இயேசுவைப்போல் உயிர்த்தெழுவார்கள். நீண்ட நெடுநாள் வாழ்ந்த தலைவர்கள் எல்லாம் மக்களால் மறக்கப்ப‌ட்டிருக்கிறர்கள்.  சில காலம் வாழ்ந்து மடிந்தவர்கள் மக்களின் குலசாமிகளாக வீற்றிருக்கிறார்கள். வெள்ளையடிக்கப்பட்ட கல்லரைகளே, அகில உலக திருச்சபையோரே இமானுவேல் சேகரனின் குருபூசையும். இயேசுவின் ஈஸ்டர் திருநாளும் உங்களுக்கும் எனக்குமானது என்பதை இனியாவது உரக்கச் சொல்லுங்கள். உங்களை நோக்கி உலகமே அணிதிரளும்.
Posted in Uncategorized | 3 பின்னூட்டங்கள்

Hello world!

Welcome to WordPress.com. After you read this, you should delete and write your own post, with a new title above. Or hit Add New on the left (of the admin dashboard) to start a fresh post.

Here are some suggestions for your first post.

  1. You can find new ideas for what to blog about by reading the Daily Post.
  2. Add PressThis to your browser. It creates a new blog post for you about any interesting  page you read on the web.
  3. Make some changes to this page, and then hit preview on the right. You can always preview any post or edit it before you share it to the world.
Posted in Uncategorized | 1 பின்னூட்டம்