நேர்காணல் : அய்யா சி. சாமுவேல் பறையர்


Sam - 1தமிழகத்தின் தலித் போராட்டக் களத்தில் நன்கு அறிமுகமானவர் அய்யா சி. சாமுவேல் பறையர். விருதுநகர் மாவட்டம் சோமையாபுரத்தைச் சார்ந்தவர். இளமைக்கல்வியை தனது கிராமத்தில் முடித்து விட்டு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தனது பட்டப்படைப்பைத் தொடர்ந்தார். சிறந்த புத்தக வாசிப்பாளர். இந்திய சுதந்தரத்துக்குப் பின் தன் பெயருக்குப் பின்னால் “பறையர்” என்கிற அடைமொழியை ஒடுக்கப்பட்ட மக்களின் போர்வாளாகப் பிரயோகித்து, அவர்களின் சமூக – அரசியல் நடவடிக்கைகளில் தனித்த அடையாளத்தை நிறுவியர் இவராகத்தான் இருக்க முடியும். கிறித்துவராக இருந்தாலும் மதம் என்கிற கருதுகோலின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, ஆதிகுடிகளின் வரலாற்றில் நின்று பயணிப்பவர். தமிழ்நாடு பறையர் பேரவையின் தலைவர். பறையர் குரல் என்கிற பத்திரிக்கையின் ஆசிரியர்.
மதுரை தலித் ஆதார மய்யத்தின் சார்பில் 2002 -ல் தமிழகத்தில் உள்ள சில‌ தலித் தலைவர்களுடன் ஓர் உரையாடலைத் தொடங்கிய‌போது, 2002 ஆகஸ்டு மாதம் சென்னையில் முல்லை அச்சகத்தில், அய்யா சாமுவேல் பறையர் அவர்களுடனும் ஒரு உரையாடல் நிகழ்ந்தது. விறுவிறுப்பான, சுவராஸ்யமான உரையாடலாக இருந்தாலும் அவருக்கே உரித்தான விமர்சனப்பார்வையில் இது அமைந்தது. சூழல் சார்ந்து அன்றைக்கு “தமுக்கு” ஆங்கில இதழில் வெளியிடப்படாத இந்த நேர்காணலை அவரின் நினைவேந்தலுக்காக வெளியிடுவது காலத்திற்கு மிகவும் பொருத்தமானது.
கேள்வி : அய்யா வணக்கம். தலித் ஆதார மய்யத்தின் சார்பில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எப்படி இருக்கிங்க?
பதில். அது கிடக்கட்டும். அது என்னா தலித்து. எவன்டா இத கண்டு புடிச்சது. இருக்கிற பறையன எல்லாம் கூப்பிட்டு மதுரையில தலித்து, தலித்துன்னு கூட்டம் போட்டுக்கிட்டு. இதுல தலித்து கலை விழாவாக்கும். வெளிநாட்டு பணத்தை வாங்கி உயிர்பொழைக்கிறதுக்கு எங்கள ஏன் அடகு வக்கிறீங்க. இதுல என் ஊர்கார பயலுவல்லாம் கூட்டம் சேத்துக்கிறீங்க. (நேர்காணலை தொடரலாமா – வேண்டாமா என எனக்குள் தயக்கம். நண்பர் யாக்கனை பார்த்தேன். அவர் ஒரு பரிதாபப் புன்முறுவலோடு அச்சகத்திலிருந்து வெளியேறினார். சரி என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போமே என உரையாடலைத் தொடர்தேன்).
இப்போ தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா தலித் தலைவர்களோடேயும் ஒரு உரையாடல் நடத்தி வருகிறோம். உங்களையும் இச்சமூகத்தின் முன்னோடியாகக் கருதி தான் இந்த உஅரையாடல் நடத்த விரும்புகிறோம்.
இது வரைக்கும் யார் யாரை சந்தித்து உரையாடல் நடத்தியிருக்கீங்க? (நான் சிலரின் பெயர்களை குறிப்பிட்டேன்). ஹூம், பறைய‌னா பொறந்து தலித்து தலித்துன்னு சொல்லிக்கிட்டு திரியிர இந்த தெருப்புழுதியெல்லாம் உங்களுக்கு த‌லைவனா தெரியுறானுங்க. ஏங்க இவனுங்கல்லாம் என்ன செய்யப்போறானுங்கன்னு நெனைக்கிறீங்க? இதுல வேற தலித்து கலை விழாவுக்கெல்லாம் கூப்பிட்டு அந்த தெருப்புழுதிகளுக்கு மாலை மரியாதை செய்றீங்க‌. என்னத்த சொல்ல.
இல்லீங்கய்ய உங்களையும் நிச்சயமா விழாவுக்கு கூப்பிடுவோம்.
எதுக்கு? நான் தான் பறையானாச்சேப்பா. என்னை கூப்புடறது இருக்கட்டும். நான் வரனுமில்ல. அதுவும் ஒரு பறையானா, பறையங்கிற அடையாளத்தோட, அதுவும் ஒரு பறையர் விழா மேடையாக இருந்தா வருவேன்.
அம்பேத்கர் சொன்னது போல நாம சாதி ஒழிப்பை மையமாக வைத்து தான் இயங்க வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும்போது பறையர் என்கிற அடையாளம் ஒரு குறிப்பிட்ட சாதியின் அடையாளமாக இருக்குமே. அது நம்முடைய நோக்கத்துக்கும், விடுதலைக்கும் எதிரானதாக இருக்காதா?
Sam - 3ஒனக்கு அம்பேத்கர் சொன்னது இருக்கட்டும். எனக்கு எங்க தாத்தன் ரெட்டமலை சீனிவாசனும், அயோத்திதாசப் பண்டிதரும் சொன்னத நான் பின்பற்றனுமா – வேணாமா? வரலாற்றில் “பறையர்” என்கிற இனம் எப்படி இருந்திச்சின்னே இன்னைக்கு நிறைய பறையர்களுக்கு தெரியாது. பறையர்களுக்கே தெரியாத போது ஒங்க தலித்துகளுக்கு எங்க தெரியபோவுது. அதுக்கு காரணம் வரலாற்றை ஆரம்பத்துல இருந்து படிக்காம, நுனிப்புல் மேய்ஞ்சிட்டு படிச்சா அது ஒரு சாதியாகத்தான் தெரியும். அது ஒரு சாதியில்ல, தமிழக தொல்குடி வரலாற்றில் மூத்த குடியினம் பறையர் சமூகம் தான். இத நான் சொன்னா சாமுவேலு பறையர் பேரவை வச்சிருக்கான், பறையர் குரல் பத்திரிக்கை நடத்துறான் அதனால தான் சொன்னான்னு சொல்லுவானுங்க. நீங்களும் கூட சொல்லுவீங்க. எம்பாட்டன் வள்ளுவன் சொல்லியிருக்கான். சித்தப்பன் தொல்காப்பியன் சொல்லியிருக்கான். அவனுங்க சொன்னத எல்லா பயலும் வரலாறு, இலக்கியம்னு இங்க படிக்கிறான். அத இந்த சாமுவேலு பறையன் சொன்னா சாதியா தெரியுதா? .
வரலாறு, இலக்கியம் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னைக்கி நடைமுறையில் பறையர் என்பது ஒரு சாதி தானே?
நீ என்ன தம்பி திரும்ப திரும்ப இதையே சொல்ற. ஆயிரக்கணக்கான ஆண்டுகளா ஒரு சமூகம் எப்படி ஒரு அடையாளத்தை பாதுகாத்து வந்திருக்கும்? என்பத புரிஞ்சா தான் அது சாதியா இல்ல ஒரு சமூகமா இல்ல ஒரு இனமான்னு கண்டுபிடிக்க முடியும். அதுக்கு ஆதாரமா இருப்பது எதுன்னா அந்த சமூகம் செய்து வந்த தொழில், அதைச்சார்ந்த பண்பாடு, அதன் மீது அது கட்டியெழுப்பியிருக்கிற வரலாறு. அப்படி பார்த்தா இந்த தமிழ்நாட்டுல “பறையர்” தவிர்த்து வேறு எந்த இனத்தையும் சொல்ல முடியாது. மற்றவை எல்லாம் பறையர் என்கிற ஒரு இனத்துக்கு எதிரா உருவானது தான் இன்னைக்கு நம்ம கண்ணு முன்னாடி தெரியுற சாதிகள், பிராமணியம், அது இதுன்னு.
அப்படி இருக்கும்போது பறையர்கள ஏன் இன்னைக்கு தீண்டப்படாதவரா கருதனும்?
நீங்க சொல்லலையா தலித்துன்னு. அந்த மாதிரி வரலாறு தெரியாத பல பல பட்டறைங்க சொல்லுது. விவசாயத்தையும், மறை ஓதுவதையும் கொண்டிருந்த ஒரு சமூகத்தை எப்படி தீண்டப்படாதவனாக்க முடியும்? இந்த சமூகத்துல விவசாயம் செய்வதையும், மறை ஓதுவதையும் யார் செய்ய முடியும்னா எல்லா மக்களையும் நேசிக்கிற, சமத்துவமா நடத்துற, வேறுபாடு காட்டாம பழகுகிற குறிப்பா வரலாறு கட்டத்தெரிந்த அறிவு சமூகம் தான் செய்ய முடியும். இலேன்னா இந்த நாட்டுல, இந்த மண்ணுல திருவள்ளுவன் எப்படி மூத்தகுடி தலைவனா இருந்திருக்க முடியும். அவுனுக்கு எங்க இந்த தீண்டாமை இருந்திச்சு. அவுனுக்கு இல்லாத ஒரு கொடுமை எனக்கு ஏன் பணிக்கப்பட்டது. ஏன்னா நான் அநீதிய ஏத்து போகல, விவசாயத்தை தவிர வேற எதையும் உருவாக்கி யாரையும் அடிமைப்படுத்தல, சைன்ஸ் எங்கிட்ட இருந்திச்சு, வான சாஸ்திரத்துல நான் கெட்டிக்காரன், நாட்டு நடப்ப கணிக்கத் தெரிஞ்சவன், ஒரு சேதிய சொல்லத் தெரிஞ்சவன். இந்த குணம் மத்தவங்களுக்கு ஏற்றுப்போகனும்னா அவர்களும் என்னை மாதிரியே நடந்துக்கனும். அதுக்கு எந்த சமூகம் சாத்தியம் இல்லையோ அது என் தொழிலை, என் பிறப்பை, என் பண்பாட்டை அசிங்கப்படுத்தி என்னையும் அசிங்கப்படுத்துது. இதுக்காக வரலாற்றையே திரிக்கும் வேலையை செய்து நான் பூர்வகாலமா தீண்டப்படாதவனா சொல்வது நுனிப்புல் மேயிறவன் பேசறது. அந்த நுனிப்புல் வரலாறு நமக்கு வேண்டாம். உண்மையான வரலாற்றை பேசுவோம்.
Sam - 2அப்போ இன்னைக்கி இருக்கிற சாதிகள எப்படித்தான் ஒழிக்கிறது?
சாதிய பறையனாகிய நான் உருவாக்கல. எனக்கு எதிரா உருவாக்கப்பட்டது தான் சாதி. அந்த சாதியின் எல்லா விஷமத்தனங்களையும் பறையர்கள் ஏற்றுப்போகாத‌தால் அவர்கள் மீதே கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. நான் பள்ளிப்படிப்பை முடிக்கும் போது எங்க பகுதியில தேவர்கள் எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் பண்ணுவாங்க. அதுக்கு காரணம் நிலம் இல்ல, பொழைப்பு இல்ல, உழைப்பு ஒன்னு தான் மூலதனம். அதனால அவன சார்ந்து நான் வாழவேண்டியிருக்கு. இல்லேன்னா ரோடு போடற வேலைக்கு போக வேண்டியிருக்கு. அவன் மட்டுமா அடிக்கிறான். பள்ள‌னும் தான் சேர்ந்துக்குறான். இராஜபாளையத்துல 1985 -களில் மிகப்பெரிய அளவில் சாதிக்கொடுமைகள் நடந்தது. பல இடங்களில் வேலை செய்து பறையர்கள் அப்போது நிலம் வாங்கினார்கள். அது பல சாதிகாரப் பயலுகளுக்கு பொருக்கல. இதனால பல இடங்கள்ல சாதிக்கலவரம் நடந்திச்சு. 1992 -ல் தமிழ்நாடு பறையர் பேரவையை தொடங்கியதற்கு காரணமே சாதிக்கொடுமை தான்.
பறையர் பேரவையின் எழுச்சிக்கு சாதிக் கொடுமை காரணமா? அல்லது அம்பேத்கரின் நூற்றாண்டு காரணமா?
சொல்லப்போனா ரெண்டுமே இல்ல. அறிவு தான் காரணம். அறிவில் சிறந்த பறையன் ரெட்டமலை சீனிவாசன் காரணம். ஒன்னு தெரிஞ்சிக்கோங்க. அம்பேத்கருக்கு முன்பே திருவள்ளுவப் பறையன், கந்தசாமிப் பறையன், காத்தவராயப்பறையன், எம்..சி. ராஜா பறையன்னு பலர் முன்னோடியாக இருந்தாங்க என்பத மறந்திட்டு அம்பேத்கர்னு நுனிப்புல் மேயாதீங்க. அவர் மகாராஷ்டிராவுல பறையர் மாதிரி இருந்த ஒரு மஹார் சமூகத்தின் வெளிச்சமாக வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே பறையன் அறிவாளி. அதனால தான் ரெட்டமலை சீனிவாசப் பறையர் “பறையன்” என்கிற பேர்ல ஒரு பத்திரிக்கை நடத்துனாரு. அதன் தொடர்ச்சியா பறையர் பேரவை சார்பில் “பறையர் குரல்” என்கிற பத்திரிக்கையையும் தொடங்கி நடத்தி வருகிறோம். (ஒங்களுக்கு அறிஞர் குணாவை தெரியுமா? என்று என்னிடம் கேட்டார். நான் தெரியும் என்றேன். அவருடைய நூல்களை கொஞ்சம் வாசிச்சிட்டு வாங்க என்றார். சரி என்றேன்).
தலித் மக்களுக்கு வேறு என்ன பணிகளை செய்து வருகிறீர்கள்?
பறையர் பேரவை பறையர்களுக்கான இயக்கம் மட்டுமல்ல. சாதி ரீதியாக ஒடுக்கப்படுகிற எல்லா மக்களுக்கும் உரியது. குறிப்பாக மலம் அள்ள‌க்கூடிய, பிணம் எரிக்கக் கூடிய பறையர், சக்கிலியர் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம். ஒரு சமூகத்த இழிவா பார்ர்க்குறதுக்கு இந்த மாதிரியான தொழிலை நிரந்தரமா திணித்து வருவதற்கு எதிராக இந்த போராட்டம். எல்லாத்தையும் விட ஒரு சமூகத்த அறிவார்ந்த சமூகமா வளர்த்தெடுக்கனும். அதற்கு தான் ரெட்டமலை சீனிவாசன், அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர் போன்றவர்களின் அறிவாயுதங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லனும். அதுக்காக பேரவை சார்பில் பல பயிற்சிகள், கருத்தரங்குகள் நடத்தி வருகிறோம்.
ஒரு முக்கியமான விஷ‌யத்த உங்களுக்கு சொல்லனும். ஒங்க மய்யத்துல தலித்துன்னு ஒரு கலை விழா நடத்துறீங்களே. அதுக்கு முன்னாடியே 80 -கள்ல எங்கூர்ல பறையர் விழா நடத்தியிருக்கிறோம். இன்னைக்கி அதத்தான் பறையர் கலை விழா என்று பறையர் பண்பாட்டு மீட்டுருவாக்கத்துக்காகவும், அறிவு நிரூபணத்துக்காகவும், மறை துலங்கலுக்காகவும் நடத்தி வருகிறோம். அத நீங்க வெளிநாட்டுக்கு காசாக்கிட்டீங்க.
வளர்ந்து வரும் இன்றைய தலைமுறையினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அவுங்களுக்கு சொல்றது இருக்கட்டும். மொதல்ல எங்கள தலித்து தலித்துன்னு சொல்லி எங்க மூளைய காயடிக்கிறத நீங்க நிப்பாட்டுங்க. இருக்குற பறையனுங்க எல்லாரையும் திரட்டி தலித்துன்னு புராஜக்டு போடறத நிப்பாட்டி இருந்தீங்கன்னா தமிழ்நாட்டுல பறையர் இனம் ஒரு மாபெரும் வளர்ச்சிய கண்டிருக்கும். அந்த வளர்ச்சிய தடை பண்ணதுமில்லாம பறையனுங்கள புராஜக்டுக்கு காயடிச்சீட்டிங்க. இந்த வேலைய நீங்க மொதல்ல நிப்பாட்டுங்க. அமுங்கி போகக்கூடிய தெருப்புழுதிய எல்லாம் தலைவன்னு வளர்த்து விடாதீங்க. ஒங்க மய்யத்த பறையர் ஆதார மய்யம்னு பேர் மாத்துங்க. எல்லாம் அதுபாட்டுக்கு நடக்கும்.
Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s