நேர்காணல் : பறைக்கலைஞர் அலங்காநல்லூர் ஆறுமுகம்


மதுரையின் மேற்கு கன்னத்தை முத்தமிடும் மலை முகடு. அதன் கழுத்தில் சறுக்கிவிழும் குட்லாடம்பட்டியின் கொடியருவி. ஒடிந்து கிடக்கும் சாரல் பசுமையில் அலங்கை பாடும் அந்த ஊர் – அலங்காநல்லுர். ஊரை ஏய்த்துக் களைப்பில் ஓய்வெடுக்கும் காரைக் கட்ட‌டங்கள், எர்ரம்பட்டிக் கலவரத்தில் எரிந்த. அடங்க மறுக்கும் சேரிகள். சேரிகளின் குறுக்குச் சந்துகளை விழுங்கிய நெரிசல் குடிசைகள். வெடித்துக் கிடக்கும் குட்டிச் சுவர்களின் ஒற்றை நிழலில் குடும்பமாக வாழும் அந்த குட்டை உருவம். பறை, பம்பை, உருமி, தவில், தமுக்கு என தோற்கருவிகளை வார்த்துக் கட்டும் தொல்முகன். பார்க்கப் பார்க்கப் பேசத் தூண்டும் மானுடவியலின் மண்முகம். அவர்தான் அலங்காநல்லுர் ஆறுமுகம்.
ஜல்லிக்கட்டில் மேட்டுப்பட்டி காளைகளை பறை முழுக்கிச் சீற வைக்கும் பறை இசைக்கலைஞன். தமிழக தலித் இயக்க அமைப்புகளுக்குப் பறையை பயிற்றுவிக்கும் பாரம்பரியப் பயிற்சியாளன். சில நேரங்களில் மக்களை மறந்து மாக்களை அசைபோடும் வாழ்வியல் அறிஞன். கலைஞனாக, பறை செய்யும் தொழிலாளியாக, எதுவுமே இல்லாத போது விவசாயக்கூலியாக. இப்படி தலித்துக்கே உரிய பன்முக அடையாளமும் கூட. சேரிகளைக் கடந்து உலகத்து வீதிகளில் பறை முழுங்க வேண்டும், பறைத் தொழில் புரிய வேண்டும் என முழுக்கமிடுகிறார் இந்த இருபத்தெட்டு வயது இளைஞர்.
பறையாட்டம் ஆடறதிலும், பறை செய்யறதிலும் உங்களுக்கு எப்படி நாட்டம் வந்திச்சு?
parai - 1நான் ரெண்டாங்கிளாசு படிக்கிறப்பவே ரொம்ப துருதுருன்னு இருப்பேன். வம்படிக்கி என்னமாச்சும் செஞ்சு பசங்கமேல கைய வெச்சிருவேன். கள்ள வூட்டு வாத்தியாரும் விட்டு வெளு வெளுன்னு வெளுத்திடுவாரு. பொறவு நானும் ரெண்டு நாளு தங்கிப் போவேன். அப்புறமேக்கு சண்டியர் மாதிரி என்னமாச்சும் செஞ்சு அங்கனயே மாட்டிக்குவேன். ஒரு நாளு வாத்தியாரு எம்மேல் சட்டய உருவிட்டு வெளுவெளுன்னு வெளுத்துட்டாரு. அப்போ எனக்கு ஆறு வயசு இருக்கும். தம்மாத்தண்டி இருப்பேன். அடி தாங்க முடியாம பொள்ளாச்சி ஓடி ஒரு கேரளாகாரு ஓட்டல்ல வேலை செஞ்சேன். ஒரு நாளைக்கு ரெண்டு ருவா சம்பளம். நாலு வருஷம் அங்கனயே வேல செஞ்சு, பொங்கலுக்கு ஊரு வர்ரயில எங்கண்ணன் மாத்திரம்தான் அலங்காநல்லூர்ல ட்ரம்மு செட்டு வச்சிருந்தாரு. நானும் திருசா முடிஞ்சி பொள்ளாச்சி போலாம்னு இருந்தப்ப, பக்கத்து ஊர்ல கேதம். சாவுக்கு ட்ரம்மு செட்டுக்கு கேட்டுவிட்ங்க. அப்ப சாவுக்குப் போவயில ஆள் கொறையவே, எங்கண்ணன் என்னிய கூப்புட்டுவுட்டாரு. மொதல்ல மொரக்கசு குலுக்கத்தான் சொல்லி கூப்புட்டாங்க. நான் சரின்டு போயிருந்தேன்.
எனக்கு தப்படிச்சியும் பழக்கமில்லை. நானும் ஒதுங்கி நின்னு சிரிக்கறத பாத்துட்டு எங்கண்ணன், வந்திருந்த அணா சுள்ளாங்கிட்ட ஒழக்கு சாராயத்த எனக்கு குடுக்கச் சொல்லி சாடை காட்டுனாரு. அப்பல்லாம் தப்படிக்கப் போனா சாப்பாடுக்கு கெடைக்காது. அவுகளும் கஞ்சி எதுவும் ஊத்த மாட்டாக. அதுக்கின்டே கேன்ல பட்ட சாராயத்த வச்சிக்கிறது. நானும் அடிக்கிற அடிக்கி மொதல்ல ஆட்டம் போட ஆரம்பிச்சேன். அதே சூட்ல ஒரு தப்ப வாங்கி கண்டமேனிக்கி அடிச்சேன். அன்னைக்கி அடிக்க ஆரம்பித்தவன் தான், இப்போ இருவத்தெட்டு வயசு எனக்கு. ரொம்ப வருசமா நானே பழகி கத்துக்கிட்டிருக்கேன். ஒரு முப்பது அடவுக்கு என்னலா இப்ப ஆட முடியும்னா பாத்துக்குவேன். இப்ப நானும் செட்டு வச்சிருக்கேன்.
எங்கூட வேலு, குமாருன்னு பத்துபேரு இருக்கோக‌. அவுகளும் செட்டு வச்சிருக்காங்க. எடையில மத்த‌ரம் ரெண்டு வருசம் விட்டிருச்சி. ஏன்னா, அப்பவே பதினாலு வயசு வர்ரயில எங்கூறு மேப்படி மூப்பனாரு பொண்ண கூட்டி கல்யாணம் முடிச்சேன். ரெண்டு புள்ளைங்க எனக்கு. சின்னவன் இப்பவே தப்பத்தான் தலைக்கு வச்சுக்குவான். அவனுக்கும் சிறுசிலே இதுகள நாட்டம் வந்திருக்சி. தப்பு கட்டறதிலும் எங்கூட என் சம்சாரி நல்லா கத்துக்கிடுச்சு. பத்து வருஷத்துக்கு முன்ன கூடி தப்பு கட்ற தொழிலையும் எங்கண்ணந்தான் பழக்கிக் குடுத்தாரு.
மதுரையில தலித்து கலை விழா பொறந்ததும் எங்க செட்ட மேடை ஏத்தி ஆட விட்டாங்க. மொதமொதல்ல காசு பணம் கூட குடுத்து ஒரு மதிப்பா ஆடுனதும் தலித்து கலைவிழாதான் அப்புறம் தெக்க நாகர்கோயிலு, மதுர, மெட்ராசு அங்க இங்கன்னு இயக்கத்துக்காரங்களுக்குப் பயிற்சி குடுத்துட்டு வர்ரயில பல பேரும் பயிற்சிக்கு கேட்டாங்க். தப்பு வேணும்னு ஆடரும் குடுப்பாங்க. ஒன்னு ரெண்டுன்னு செய்வேன். அப்ப முன்னூத்தம்பது ருவா வித்துச்சி. மாசத்துக்கு இத்தனன்னு இல்லன்னாலும் அதுக்குத் தக்கன பத்தஞ்சின்னு வரும். அதுக்கேத்தாப்புல நானும் என் சம்சாரியும் இத‌ தொழிலா செஞ்சிட்டிருக்கோம்.
இன்னைக்கு யாரு வேணும்னாலும் பறை செய்ய முடியுமா? நீங்க எப்படி பறை செய்றீங்க?
தப்பு – பறை எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். இத எல்லோரும் செய்ய முடியும். செய்யணும். அதுக்குத்தான் நாம‌ இருக்கோம். மொதல்ல செய்யும்போது கொஞ்சம் தோதுபடாதுதான். கத்துக்கிட்டா வந்துரும். மொதல்ல கட்டைய செஞ்சு வச்சுக்கணும். இப்ப புதுசா தப்பு வேணும்னு யாராச்சும் கேட்டாங்கன்ன வாடிப்பட்டிக்குப் போயி கட்டைக்கு சொல்லிட்டு வருவேன். கட்டை ஒண்ணு நூறு நூத்தம்பதுன்னு வரும். ஆசாரி ஆளுங்கதான் செய்வாங்க. கட்டைய செய்யச் சொல்லையில வேம்போட மரத்து வேருலதான் செய்யச் சொல்வோம். அதுவும் ரோட்டுமேல நிக்கற வேம்புன்னா இன்னும் தரம் கூடும். ஏன்னா ரோட்ல போற பஸ்சு, காரு, லாரி இதுகளோட‌ சத்தம், ஆரன் சத்தம் கேட்டு, கேட்டு ரோட்டடி மரத்துல சத்தம் ஏறியிருக்கும். அதுல தப்பு செஞ்சு அடிச்சா. அடி எட்டு பட்டிக்கும் தெறிக்கும். எனக்கு பயிற்சிக்கி தப்பு இதுலதான் போட்டிருக்கேன்.
வாடிப்பட்டியில் இருந்து கட்டய கொண்டு வந்து மாட்டுச்சாணி பூசி காயப் போடுவோம். சாணத்தைப் பூசி காயப் போட்டாத்தான் கட்ட வெறைக்கும். பகல் முழுசும் காஞ்சதும் எடுத்து துணி வச்சி தொடைக்கணும். கட்டைய தொடைக்கையில சந்தனம் மேனிக்கு கட்டை மணக்கும்.
parai - 2அப்புறம் தொலிய (தோல்) தயார் பண்ணிக்கணும். தப்பு செய்யறதுக்குன்னே தொலி தனி. அதுக்கின்டே எரும கன்டு வாங்கணும். பால் மறந்த கண்ட வாங்கி கறிய வித்தாச்சும் இல்லேன்னா கருவாடு தச்சி. தொலிய மாறுகாலு மாறுகையின்னு ஆணி அரஞ்சி போட்டுருவோம். பகல்ல காஞ்சதும் தொலிய சூடு தேங்குன மேனிக்கு அப்புடியே சுருட்டி வச்சி, வெள்ளனே எடுத்து முடி இருக்குற பக்கமா காயப்போடுவோம். அப்பல்லாம் சாம்பல் போட்டு ஊர வச்சி செரட்டைய தேச்சி முடி எடுப்போம். இப்ப கத்தி வச்சயே எடுத்துருவோம். அதுன்டா வாடை வீசும். கத்தி வச்சி எடுக்கறதிலியும் கோளாறு இருக்காது. அப்புறமேக்கு காஞ்ச தொலிய விரிச்சிப் போட்டு, கட்டய வெச்சி அளவெடுத்து அறுக்கணும். அப்படி அறுத்தா கன்டுக்கு ரெண்டு முணுன்னு வரும். அறுத்த தொலிய தண்ணியில ஒரு நாலு மணி நேரத்துக்கு ஊர வைக்கணும்.
தொலி மத்தரம் தரமா இருக்கணும். எரும கன்ட வித்து பசுங்கன்டுன்னா, பெருசுன்னா அடி கனக்காது. தொலிய பொத்தி இழுக்கையில அறுந்து வந்துரும். அடியும் சலசலன்னு விழும். சொல்லு பேசாது. இல்லே கூடி காய வக்கையில தெறிச்சிடும். பால் மறந்த கன்னுன்னா தோதோ இருக்கும் அதுவும் கழுத்துப் பக்கத்து தொலிய பொத்துனா இறுக்கம் இன்னும் நிக்கும். ஏன்ன. கழுத்து மடிப்பு அசைஞ்சு மடிஞ்சதுல தொலிக்கு, இழுவைக்கு வேலை இருக்காது.
இப்ப ஏத்த மாதிரி எரும கன்டு கெடைக்காது. அப்ப எங்க ஊர் பக்கத்துல பொதும்பு, அம்மலத்தடி, குலமங்களம் இங்கன்னு ஊர்த்தோட்டி வேல பாக்குவறங்க்கிட்ட பத்து நுறுன்னு அட்வான்சு குடுத்து வச்சிருப்போம். நம்ம ஊர்ப் ப‌க்கம் ஊர்த்தோட்டி வேல பாக்குறவங்களுக்குத்தான் செத்த மாடு அதுன்டு சொந்தம். அந்த கன்டு தொலியே முன்னுறு முன்னுத்தம்பதுன்னு வாங்குவோம். டவுனு பக்கம்னா கறி போடற எடத்துல தொலி கெடைக்கும். மதுரையில மேலவாசல், ஒத்தப்பட்டி, வண்டிக்காரு மண்டகப்படி இங்கன்னு கெடைக்கும், தொலி வாங்கையில, கன்ட வாங்கையில இந்த நுணுக்கத்த பாத்துத்தான் தொலி வாங்கணும். இல்லன்னா தப்புக்கு பேரு கெட்டுரும்.
அடுத்தாப்புல பசை கிண்டணும். கட்டையும், தொலியும் தயார் பண்ணி வைக்கையில புளிய முத்த (புளியங்கொட்டை) தண்ணியில ஊரப் போடணும். நல்ல ஊரன முத்த அள்ளி, அம்மியில வச்சி அரைச்சி ச‌ன்னமா வந்த‌தும் எடுத்து தண்ணிய விட்டு அனல்ல அஞ்சு நிமிசம் வச்சிருந்து கிண்டணும். நல்ல கிண்டனதும் பச களி மாதிரி வரும், அத எடுத்து வச்சுக்கணும். பசையோட எதுவும் சேத்துக்க‌த் தேவையில்லை.
parai - 3இப்ப தப்ப மூக்கணும். இப்ப நம்மகிட்ட மாட்டு சாணத்துல காய வச்ச கட்டயும் இருக்கு. நாலு மணி நேரத்துக்கு தண்ணியில ஊர்ன தொலியும் இருக்கு. இது ரெண்டையும் வச்சிகிட்டு காய்ச்சின புளிய முத்து பசைய கட்டயில பூசணும். ஊர்ன தொலிய, கட்டைக்கு ஏத்தாப்புல வட்டமா அறுத்து, இழுத்து மூட்டுறதுக்கு தோதா கயிற மாட்டி வச்சுக்கணும். இழுவ நிக்குறதுக்கு ஏத்தாப்புல ஒரு இரும்பு வளையத்த கட்டைக்கு நடுவுல வக்கிறமாரி சிறுசா செஞ்சு வச்சிக்கணும். பச பூசன கட்டய தெலிக்கு நடுவுல வச்சி தொலிய நாலாப்பொறமும் இழுத்துக் கட்டணும். இழுக்கையில பதமா இழுக்கணும். இல்லேன்னா தொலி அந்துடும். ஒரு அரைமணி நேரஞ்சென்டு மறுவடியும் இழுக்கணும். அப்பத்தான் இழுவ பலமா நிக்கும். இப்ப கட்டுன தப்ப அப்புடியே வச்சிருந்து, வெள்ளென எடுத்து வெயில்ல போடணும். பகல் முழுக்கே வெயில் கனத்துச்சின்னா போதும், சாந்தரமா எடுத்து கயிற அறுத்து வளையத்த வெளிய எடுத்துடணும். தொலிய்யும் கட்டைக்கு ஒட்டுன மேனிக்கு அறுத்தெடுக்கணும். இப்ப சரியான தப்பு ரெடி. இத மதிப்பா ஒரு பை தச்சு அதுலதான் தப்ப குடுக்கணும். நெர‌மா வித்தா அஞ்சு நுறுக்கு குடுக்கலாம். இப்புடித்தான் நான் செஞசிட்டு வர்ரேன். மூலனுரு, தஞ்சாவூரு, திருவண்ணாமலை அப்படின்னு அங்கிங்க பல பேரு பலமாரி செய்யறாங்க. அதுல ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல. அங்கித்திய மொற வேற மாறியும் இருக்கும்.
இப்பத்தான் பிளாஸ்டிக் தோலு வந்திருச்சே. கட்டையில வளையத்த மாட்டி போல்ட் போட்டு டைட் பண்ணிக்கலாமே. நீங்க இன்னும் ஆதி காலத்து கதைய சொல்லிக்கிட்டிருக்கீங்க?
ஏங்க, என்னங்க பேசுறீங்க. நான் என் விசயத்த பேசிக்கிட்ருக்கேன், இது இருக்குறதுங்க. இது என்னா சபரிமலை அய்யப்பனுக்கு சிங்கு செஞ்சி தட்றதா. நெசமாத்தான் சொல்றேன். இந்த வருசம் ஜல்லிக்கட்டுக்கு அலங்காநல்லுருக்கு வாங்க. எந்தப்ப காச்சி அடிச்சா மேட்டுப்பட்டி காளையும், சும்மா நிக்குற சொன்டி காளையும் சீறிப்பாய்றத கண்ணால பார்க்கலாம்.ஏந்தெரியுமா? நான் அடிக்கிற தப்பு தொலி எரும கன்டுது. காளைக்கு ஆகாது. கோவம் அப்புடியே பொத்துக்கிட்டு வரும். கொம்ப சொழட்டும். முழிய அப்புடி இப்புடின்னு பிதுக்கும். வால‌ விசுறும். தொடய உருட்டும். இம்புட்டு வேலய என் தப்பு செய்ய வைக்கும்ம். எங்க உன் பெளாஸ்டிக்கு தப்பு, இந்த வித்தய செய்யச் சொல்லு பாப்பம். என் ஒத்த காத அறுத்துக்கிறன். ஏங்க, பெளாஸ்டிக்கு வந்தா அதயல்லாம் உள் விடக்கூடாதுங்க. நாங்களே அத எதுப்போம். ஒடைப்போம்.
ஆனா, என் அடி கேட்டு எரு மாடுக வரும். அது ஒன்னும் செய்யாது. கையில இருக்கற தப்ப பாக்கையில அதோட புள்ளன்னு நெனச்சுக்கும். மோந்து பாக்கும். அப்படியே புடிச்சு ஒரு முத்தி விடுவேன்.
அப்படின்னா வேலயில்லாத நம்ம சனங்க, இளவட்டங்க பறை செய்யத ஒரு தொழிலா செய்ய முடியுமா?
 செய்ய முடியுங்க. அதுக்குத்தான் இம்புட்டு நேரம் பேசிக்கிட்டிருக்கேன். எங்கூர்ல இப்புட்டு சுள்ளான்ல இருந்து தப்பு செய்யத் தெரியும். இன்னைக்கி இயக்கத்தில, பெரிய பெரிய நிறுவனங்கள்ல காலேஜ்கள்ல நெறய‌ பேரு கத்துக்க வர்ராங்க. அன்னைக்கி இத தொட்டா, பாத்தா தீட்டுன்னு ஒதுங்கின‌வங்களும் இத கத்துக்குறாங்க. அப்ப தப்புக்கு இன்னைக்கி ஏத்தம் இருக்குன்னு தெரியுது. தப்புக்கு ஏத்தம் இருக்குன்னா, அத செய்யறவங்களுக்கும் ஒரு மவுசு கூடும்தானே. அத நாம புரிஞ்சிக்கணும். இப்ப நாலா பொறமும் தலித்து கலைவிழா வந்துகிட்டிருக்கு. தெனந்தெனம் நிகழ்ச்சி வருது, அதுக்கேத்தாப்புல தப்பு செஞ்சாத்த்தான் இம்புட்டு வேலயும் செய்ய முடியும், நாலா மூலைக்கும் செய்யச் சொல்லணும். படிச்சிட்டு சும்மா திரிற நம்ம இளவட்டத்துங்களுக்கும் கத்துக் குடுக்கணும். இதுக்குத்தான் நம்ம நிறுவனங்க ஒதவணும். ஒதவணும்ணா பணம் காசு கேக்குறதில்லீங்க. அய்யய்யே, தப்பா நெனச்சுக்காதீங்க.
 இப்ப எனக்குத் தொழில் தெரியும். நானும் இத ஒரு மில்லுன்னு வச்சி, பத்து பேரு வேல பாத்து, தெனந்தெனம் தப்பு செஞ்சு, நாலா பக்கத்துக்கும் குடுக்கணும்னுதான் இருக்கேன். இதுக்கு பேங்குல லோனு தேவப்படுது. கடங்கேட்டா குடுக்க மாட்டேங்கறாங்க. இந்த நேரத்துலதான் நம்ம நிறுவனங்க ஒதவி செய்யுணும். பேங்குல எப்புடி லோனு வாங்குறது? யாருகிட்ட கேக்குறது? நம்ம சனத்துக்கு மானியம் இருக்குன்னு சொல்றாங்க. அது கெடக்குமா? இப்புடிங்கிற நெசத்த வெசாரிச்சு, அதுக்கு வேண்டியத செஞ்சு குடுக்கணும்னு கேட்டுக்குறன்.       நான் செஞ்ச தப்பு, ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா இங்ககூட போயிருக்கு. அந்தளவுக்கு பேரு இருக்கு. ஆனா உள்ளுர்ல லோனு குடுக்க மாட்டேங்கிறான். அப்ப எங்களுக்கு ஒதவனுமா இல்லயா?
 உங்களுக்கு வேண்டிய நல்லத, கெட்டத செய்யறதுக்குன்னு சங்கம் எதுவும் இல்லயா?
 parai - 4இருக்கே. தப்பாட்ட கலைஞர் சங்கம்னு இருக்கோம். மதுர மாவட்டத்துல பன்னெண்டு ஒன்றியத்துல இருக்கு. நம்ம தமிழ் நாட்டுக்கே மொதமொல்ல தப்பு அடிக்கறிவங்களா சேர்ந்து சங்கம் வச்சது நாங்கதான். எங்களுக்குன்னு கார்டு இருக்கு. மொத மாதிரியெல்லாம் இப்ப எங்கள பார்க்க முடியாது. நெறய மாறிட்டம். சாவுக்கு கண்டதுக்குன்னு போறதில்லை. ஆட்டம் நடக்கையில யாரும் போதையில இருக்க மாட்டோம், சம்பளமும் கூட்டித்தான் வச்சிருக்கோம். அங்கங்க தப்படிக்க போனாலும் ஒரு நிகழ்ச்சிக்குன்னு அம்பது ரூவா மேனிக்கு சங்கத்துல போட்டுருவோம். மொதல்லாம் தப்பு எடுத்துகிட்டு பஸ்ல போவ முடியாது. ஏத்த மாட்டாங்க. தொனைக்கின்னே பெரிய ட்ரம்ம எடுத்துட்டுப் போணும். அப்பத்தான் பஸ்ல ஏத்துவாங்க. இப்ப சங்கத்துக் கார்ட காட்டி ஏறிடுவோம். இல்லேன்ன கரைச்சல் பண்ணுவோம். எங்க சங்கமும் இப்பத்தான் கொஞ்ச கொஞ்சமா முன்னேறி வருது.
எடுக்கிற இந்த முயற்சி வலுவா நிக்கணும்னா, இப்ப எந்த மாதிரி நடவடிக்கையில ஈடுபடணும்?
 சரியா கேட்டீங்க. இப்ப எங்களுக்கு தோலுக்குப் பஞ்சம் வந்துகிட்டிருக்கு. மொதய்ய மாதிரி கெடைக்க மாட்டேங்குது. நம்ம ஊரு எரும கன்டுகள கேரளாவுக்கு கொண்டு போறாங்க. நான் கேரளாகாரு ஓட்டல்ல வேல பாத்த‌தால சொல்றன். எருமகண்டு தலையப் பாத்தாத்தான் அவேன் கறிய வாஙகுவான். அதுக்கின்டே இங்கனயேயிருந்து எரும மாடுக அடிமாடா தெனந்தெனம் லாரியில் கொண்டு போறான். மொதல்ல இத தடுக்கணும். உள்ளுர்ல வித்துகிட்டுதான் கொண்டு போனும்னு ஒரு பேச்சு வச்சுக்கணும். இல்லேன்னா இங்காரு கேரளா போயி தொலி வாங்குறது.
 அப்புறமேக்கு தப்பு செய்றத நூறு ருவாய்க்கும், எரநூறு ருவாய்க்கும் செய்யச் சொல்லுவாங்க. அதுக்கு ஒத்துகக்கூடாது. இப்ப நான் ஒரு தப்ப அஞ்சு நூறுக்கு குடுக்குறேன். தப்பு ஒன்னும் தவுலுக்கு கொறைஞ்சதில்ல. அப்படியே வெலய கொறச்சி செஞ்சா தப்பு சத்தம் நல்லாயிருக்காது தப்பு மேல உள்ள நாட்ட‌ம் போயிடும். இயக்கத்துக்காரங்க அதுக்கு இதுக்குன்னு கூப்புட்டு, ஆட விட்டுட்டு பணம் கொடுக்க மாட்டேங்கிறாங்க. இந்த மாதிரி செஞ்சா மனசுக்கு ரொம் சங்கடமாக இருக்கு. அவேனும் அதத்தான் செய்யறான். அதனால் அதல்லாம் இல்லாம பாத்துக்கணும்.
 இப்ப சிப்காட்டு சிறு தொழில் மாதிரியே எங்களுக்கும் லோனு குடுத்து ஒரு தொழிலா ஏத்துக்க்ணும். இத யாரெல்லாம் தொழிலா செய்யறாங்களோ அவுங்கள உசுப்பி விடணும். அதுக்கு நம்ம இயக்கங்க, அமைப்புங்க, நிறுவனங்கன்னு உதவி செய்யணும். எங்களுக்குன்னு சங்கம் இருக்கச்சே நல்லத கெட்டத பேசித் தீத்துக்கிறோம். இந்து கோயிலுக்குன்னு, ஊர்வலத்துக்குன்னு (ஆர்.எஸ்எஸ்.,இந்து முன்னணி) நிகழ்ச்சிக்கி கூப்பிட்டா போறதில்லைன்னு முடிவெடுத்துருக்கோம். அந்த மாதிரி நாலாபொறமும் சங்கம் வரணும். இப்ப எங்க சங்கத்தையும் அரசாங்கத்தோட வாரியத்துல பதிவு பண்றதுக்கு வேண்டிய நடவடிக்கையை செஞ்சு வர்ரோம். இதுல நமக்கு வேண்டியது கெடைக்கும்னு சொல்றாங்க. அதையும் பாப்பன்னு இருக்கோம்.
 நான் சிறுசா இருக்கைய எதச் செஞ்சாலும் தப்பா செய்யறேன்னு வைவாக. இப்ப வெறும் தப்பாத்தான் செஞ்சுகிட்டிருக்கேன். இதான் சரிங்கறாங்க. காது குடுத்து கேக்க எதமா இருக்கு. அதனால பூரா பேரும் தப்பு செய்யணும்னு கேட்டுக்கிறேன்.
நன்றி : தலித் முரசு 2003 அக்டோபர் இதழுக்காக பறைக்கலைஞர் அலங்காநல்லூர் ஆறுமுகத்துடன் ஒர் நேர்காணல்
Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

One Response to நேர்காணல் : பறைக்கலைஞர் அலங்காநல்லூர் ஆறுமுகம்

  1. Pingback: எம்எஸ்எஸ் அவர்களுக்கே க்றீச்சிடும்படி, ‘இரண்டாம் பிடில்’ வாசிப்பது எப்படி? | ஒத்திசைவு...

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s