ஆசிரியர் பணியிடங்களில் தலித் இடஒதுக்கீட்டை மறைக்கும் “வெயிட்டேஜ்” அரசியல்


reservation - 1ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் பொருளாதார அரசியல் வரலாற்றில் இட ஒதுக்கீட்டுக்கு சிறப்பான பின்னணியம் உண்டு. அவர்களுக்கான வாய்ப்பு என்ற நோக்கத்திலேயே இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இதனை முன்மொழிந்து, பத்தாண்டுக்கு ஒருமுறை நீட்டித்தும் வருகிறது. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளைக் கடந்து விட்ட போதிலும் நடப்பு சமூக – அரசியல் போக்கின் திசை மாற்றங்களைக் கணக்கில் கொண்டால், தலித்துகள் உள்ளிட்ட எவருடடைய ஒதுக்கீட்டின் சாதக – பாதக அம்சங்களும் இது வரை மறு ஆய்வு செய்யப்படாதது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த இட ஒதுக்கீட்டு முறை நீடிக்க வேண்டுமா என்கிற கேள்வியும் தலித் சிந்தனையாளர் மத்தியில் தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது. காரணம் இட ஒதுக்கீடு உண்மையிலேயே பாதிக்கப்படுகின்ற தலித் மக்கள் மீதான சமகால ஒடுக்குமுறைகளை கவனத்தில் கொள்ளாமல், எண்ணிக்கைப் பெரும்பாண்மைவாதம் மற்றும் அதிகாரம் சார்ந்த அனைத்து சாதிகளுக்கும் என்கிற நடைமுறையில் தீவிரமாகி, அதிகாரம‌ற்றவர்களுக்கு அதிகாரம், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதி என்று அரசியல் அமைப்புச் சட்டம் வழிகாட்டிய இட ஒதுக்கீட்டுத் தத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக காலாவதியாகி வருகிறது.
Reservation - 2குறிப்பாக, தமிழ்நாட்டில் பிராமணர்களை எதிராக வைத்து பிராமணர் அல்லாதவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய திராவிட இயக்கங்களும் அது கொண்டு வந்த வகுப்புவாரி ஒதுக்கீடுகளும், சாதிவாரி கணக்கெடுப்பு முழக்கங்களும் தான் காரணம் என்பது கடந்த காலங்களில் மக்கள் மனங்களில் எளிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, தலித்துகள் மீது நேரடியாக நிகழ்த்தும் ஒடுக்குமுறைகளை முற்றிலும் மறைத்து, அதிகாரம‌ற்ற – வாய்ப்பு மறுக்கப்பட்ட தலித்துகளைப் போலவே சமூக, பொருளாதார அதிகாரங்களில் வளர்ச்சியடைந்த தலித் அல்லாத சாதிகளுக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்தியது. ஏற்கனவே பெற்றிருக்கும் சாதிய அதிகாரங்களோடு அரசியல் கட்சிகளின் வழியாக இன்றைய நவீன அரசு ஈட்டித்தரும் இட ஒதுக்கீட்டு அதிகாரங்களும் சேர்ந்து தொகுப்புச் சாதி அதிகாரம் கொண்ட பெரும்பாண்மைவாத சமுதாயத்தை மெல்லக் கட்டியெழுப்ப சாதகமாகியும் வருகிறது. 2012 -ல் “சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பை” முறையை தீவிரப்படுத்த யாரெல்லாம் முயன்றார்களோ அவர்களின் முயற்சியை கவனத்தில் கொண்டால் இந்த உண்மையின் பின்புலம் ஆழப்புலப்படும்.
 எனவே தான் அம்பேத்கர் இட ஒதுக்கீட்டுத் தத்துவத்தில் “பிராமணர் – பிராமணர் அல்லாதோர்” என்கிற எதிர்வைக் கையாளாமல் “தீண்டப்படுவோர் – தீண்டப்படாதோர்” என்கிற கருத்து அணுகுமுறையைக் கையாள்கிறார். அது இன்றைக்கு நடைமுறையில் கொஞ்சமாவது பின்பற்றப்படுகிறதா என்பது தான் இப்போதைய ஆசிரியர் தகுதித் தேர்வு முறையின் விவாதம்.
 சட்ட‌த்தின் ஆட்சி என்கிற வகையில் தீண்டப்படாதோருக்கு ஆங்காங்கே இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தாலும், வளர்ந்து வரும் இன்றைய நவீன அரசின் இட ஒதுக்கீட்டு அணுகுமுறைகளப் பார்க்கும்போது எண்ணிக்கையில் அதிகம் கொண்ட பெரும்பாண்மை சாதிகளுக்கே இட ஒதுக்கீடு சாதகமாகி வருகிறதோ என்கிற ஐயம் நடப்பு ஆசிரியர் தகுதி தேர்வு முறையில் தென்படுகிறது. ஒரு வகையில் வெயிட்டேஜ் என சொல்லப்படும் தகுதி காண் மதிப்பெண் முறைகளை மட்டுமே முன்னிறுத்தி ஆசிரியர்களுடன், இன்றைய‌ திராவிடக் கட்சிகளும் சேர்ந்து தனது அரசியல் ஆதாயத்துக்காக குரல் எழுப்பியதன் விளைவாக‌ உயர்நீதி மன்றம் ஓர் இடைக்காலத் தடையை வழங்கியிருக்கிறது. ஆனால் நிரந்தரமாகவே ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை தடை செய்து அதனை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை தங்களது கோரிக்கைகளில் அக்கட்சிகள் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டன.
 Reservation - 3இது வரையிலும் ‘அறிவிக்கை’ (Notification) எதுவும் வெளியிடாமல் இரண்டு முறை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முறைகளை எதிர்த்து நீதிமன்றங்களை அணுகிய பிறகு இப்போது மூன்றாவது முறையாக நடத்தப்படும் தகுதித் தேர்வுக்கு 2014 -ல்’அறிவிக்கை’ வெளியிடப்பட்ட பின்னரே இந்த விவாதம் இப்போது மேலோங்கி வருகிறது. பொதுவாக ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க 69 % இட ஒதுக்கீடு சாதிகளுக்கு ஏற்றார்போல நியமிக்கப்படுவதோடு ஒதுக்கீடு முடிந்து விடுவதாக அனைவராலும் நம்பப்படுகிறது. ஆனால் மீதம் உள்ள பொதுப் பிரிவில் 31% எந்த அடிப்படையில் ஒதுக்கீடுகள் பின்பற்றப்படுகின்றன அல்லது பின்பற்றப்பட வேண்டும் என்பது தான் கேள்வி.
 பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
பட்டதாரி ஆசிரியர் மொத்தம் 10,900 பொதுப்பிரிவு 3000
பொதுப்பிரிவில் பி.வ – 1866 – (62.2%) – மி.பி.வ – 753 – (25.10%) – பி.வ. இஸ்லாமியர் – 9 – (0.3%) – இதர. வ. 97 – (3. 23%) – எஸ்.சி – 254 – (8.47%) எஸ்.சி அருந்ததியர் – 21 – (0.7%) எஸ்.டி – 1 – (0.03%)
 இடைநிலை ஆசிரியர் மொத்தம் 830 பொதுப்பிரிவு 257
பொதுப்பிரிவில் பி.வ – 169 – (66%) – மி.பி.வ – 81 – (31%) – பி.வ. இஸ்லாமியர் – (0%) – இதர. வ. 7 – (3%) – எஸ்.சி – (0%) எஸ்.சி அருந்ததியர் – (0%) எஸ்.டி – (0%)
 இட ஒதுக்கீட்டில் பொதுப்பிரிவு என்பது இதர சாதிகளுக்கு என வரையறை செய்யப்பட்டது. தகுதித் தேர்வில் வெறும் 3 % தேர்ச்சியடைந்த உயர் சாதியினர் தான் இதர சாதிகள். ஆனால் வேலை வாய்ப்பு பட்டியலில் அவர்கள் யார் என்றால் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தேர்வுப்பட்டியல் கூறுகிறது. அதாவது ஆசிரியர் தகுதி தேர்வு -2 -ன் படி 10,900 மொத்த பட்டதாரி ஆசிரியர்களில் 3000 பேர் பொதுப் பிரிவில் வருகின்றனர். இதில் எஸ்.சி 8.47 %, எஸ்.சி அருந்ததியர் 0.7 % தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள‌னர். அதே போல 830 இடைநிலை ஆசிரியர்களில் 257 பேர் பொதுப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள‌னர். இதர சாதிகளுக்கு என சொல்லப்படும் 31 % பொதுப்பிரிவில் வெறும் 3 % தான் உயர் சாதியினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 66 % பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 81 % மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கூட எஸ். சி / எஸ். சி அருந்ததியர் இல்லை. அதே சமயம் இதர சாதிகள் என சொல்லப்படும் உயர் சாதியினர் கூட எவரும் இல்லை. அப்படியானால் பொதுப்பிரிவு என்கிற ஒதுக்கீடு உண்மையிலே யாருக்கு பயனளிக்கிறது?
 இதற்கு சொல்லப்படும் பிரதானக் காரணம் பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு எஸ்.சி யாரும் மெரிட்டில் வருவதில்லை என்கின்ற‌னர். மெரிட்டில் 18 % எஸ். சி வர முடிவதில்லை என்பது கொஞ்சமும் நம்பும்படியாக இல்லை. ஏனெனில் மெரிட்டில் தேர்ச்சி பெற்ற‌ ஆயிரத்துக்கும் மேற்பட்ட எஸ்.சி மாணவர்களை பின்னடைவு காலிப்பணியிடங்களில் (Backlog Vacancies) கொண்டு போய் நிரப்பி விடுகின்றனர். பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு பின்பற்றும் சிறப்புச் சேர்க்கை (Special Drive) நடைமுறையையோ அல்லது மாநில வேலை வாய்ப்பின் பதிவு மூப்பு முறையையோ (Seniority) பின்பற்றியிருந்தால் மெரிட்டில் ஆசிரியர் தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ். சி யை கொண்டு போய் அங்கு நிரப்ப வேண்டிய அவசியமில்லை. தனியாகவே தேர்ந்தெடுக்க வழி வகைகள் இருக்கின்றன. தேவைப்படும் மொத்த ஆசிரியர் வேலை வாய்ப்புகளோடு ஒப்பிடும்போது 23 % எஸ். சி -க்கள் பதிவு செய்து மூப்பு அடிப்படையில் வேலைக்காக காத்திருக்கின்றனர். அதே சமயம் கடந்த 2012 -ல் மட்டும் ஆசிரியர் பணிக்கு 47 % பின்னடைவு காலிப்பணியிடம் எஸ்.சி -க்கு நிலுவையில் இருக்கிறது. பழங்குடியினர் அதிகம் உள்ள மலைப்பகுதிகளில் இன்னமும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
இவற்றுக்கும் அப்பால் தலித் மற்றும் பழங்குடி ஆசிரிய மாணவர்களை முற்றிலும் வடிகட்ட வெயிட்டேஜ் (Weightage) மதிப்பெண் முறைகளும், எல்லோருக்கும் சமமாக வழங்கப்படும் 5 % மதிப்பெண் தளர்வும் (relaxation) தலித் இட ஒதுக்கீட்டு தத்துவத்தின் நடைமுறைகளுக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கிற‌து. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணிக்கென்றே படித்துக் காத்திருக்கும் ஒரு தலைமுறையையே பணிக்கு வர‌ விடாமல் செய்து விடுகிறது. ஏன் இந்த இட ஒதுக்கீட்டு ஏற்றத்தாழ்வு நிலை எஸ்.சி – எஸ்.டி -க்கு மட்டும் காலம் காலமாக நீடிக்கிறது? இத்தகைய‌ சூழலில் இப்படியொரு ஆசிரியர் தேர்வு முறையை திடீரென யார் உள்ளே புகுத்தியது? இந்த முறை இனி தமிழ்நாடு பொதுப்பணித் தேர்விலோ அல்லது தமிழ்நாடு வேலைவாய்ப்பு முறையிலோ புகுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும் என மூன்று வாரங்களாகப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப்போராட்டத்தில் போராடிக் கொண்டிருக்கின்றவர்களில் 60 % தலித் பட்டதாரிகள். நீதிமன்ற விவாதங்களைப்பார்த்தால் அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட 5% மதிப்பெண் தளர்வும் நீக்கலாம் என்கிற வகையில் அரசு வழக்கறிஞர் வாதிடுகிறார்.

1. முதலாவது ஒருவர் ஆசிரியராக வேண்டும் என்கிற பணிக்காக +2 முதல்  DTEd, BEd, என ஒவ்வொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு TET சொல்லப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை தேவையா? என்பதை சிந்திக்க வேண்டும். மருத்துவம், ஆட்சிப்பணி படித்த ஒருவருக்கு இது போன்ற தேர்வு முறையை புகுத்தி அதற்கு நீ தகுதியானவர்தானா என கண்டறிதல் இல்லாதபோது ஏன் ஆசிரியர் பணிக்கு மட்டும் அதற்காக படித்த ஒருவரை நீ தகுதியானவர்தானா என சோதித்தறிய வேண்டும்?

2. சரி அப்படியே சோதித்தறிவது ஒருவகை எண்ணிக்கை வடிகட்டல் என்று வைத்துக் கொண்டாலும் அதில் ஏன் அரசியல் அமைப்புச்சட்டங்கள் துறைவாரியாக வழிவகுக்கும் அறிவிக்கைகள், வழிகாட்டுதல்கள், இடஒதுக்கீடுகள் பின்பற்றப்படுவதில்லை. பின்பற்றத்தேவை இல்லை என விதிகள் ஏதாவது உள்ள‌னவா?

3. சூழல் சார்ந்து ஒரு வகை வடிகட்டல் முறையை ஆசிரியர் தேர்வு வாரியமே முடிவெடுக்குமானால் மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர், எஸ்.சி/எஸ்.டி, எஸ்.சி அருந்ததியர், இஸ்லாமியர், மொழிச்சிறுபாண்மையினர் என்பவரை இந்த வடிகட்டல் முறை புறக்கணிக்கிறதா? புறக்கணிக்கவில்லை என்றால் ஒவ்வொருவரையும் தகுதிப்படுத்த சிறப்புத்தன்மை சார்ந்த இடஒதுக்கீட்டு முறைகள் விண்ணப்பம் கோரல், பணம் செலுத்துதல், கட்டணமுறை, மதிப்பெண் அளவீடு போன்றவற்றில்  இருக்கும்போது, ஆசிரியர் தேர்வுமுறைக்கு மட்டும் எப்படி அனைவருக்கும் பொதுவான – சமமான அளவுகோலை (5%) நிர்ப்பந்திக்க முடியும்? அப்படியானால் யாரை வடிகட்டுவது தேர்வு வாரியத்தின் நோக்கம்?

4. ஒருவரை அரசு பணிக்குத் தேர்வு செய்வதற்காக அரசால் கொண்டு வரப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பதிவு மூப்பு மற்றும் பணி மூப்பு முறையைப் பின்பற்றி காத்திருப்பவரை என்ன செய்வது? அல்லது ஆசிரியர்களை தேர்வு செய்வதில் இனி வேலைவாய்ப்பு அலுவலகங்களின் வேலை என்ன?

5. பொதுப்பிரிவு முறையில் ஆசிரியரைத் தேர்வு செய்ய என்ன வழிவகைகள் பின்பற்றப்படுகின்றன. பொதுப்பிரிவு என்பது இட ஒதுக்கீட்டில் பொருந்துமா? திடீரென ஒரு குறிப்பிட்ட சாதியினர், சமூகத்தினர் அதில் பெரும் எண்ணிக்கையில் எப்படி இடம்பெற முடியும்? இந்த தேர்வுமுறையில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் எப்படி எண்ணிக்கையில் அதிகமாக தேர்ச்சிபெற முடியும்?  

இந்த கேள்விகளை “கல்வியை இலவசமாக்கு” என நூறாண்டுக்கு முன்பே பண்டிதர் அயோத்திதாஸரால் முழங்கப்பட்டுவிட்ட ஒரு கருத்தை வெற்று முழக்கத்துக்காக கையில் எடுத்து, வெறும் மாநாடுகளாக வாய்ப்பந்தல் போடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கல்விஉரிமை மாநாட்டில் பேசியிருக்க வேண்டும். வெயிட்டேஜுக்காக நாடகமாடும் திராவிடக்கட்சிகளை நிர்ப்பந்தித்திருக்க வேண்டும். அப்படி ஒன்று நிகழாது என்பது தலித்துகள் அறிந்த ஒன்றுதான்.

Ambed தலித் அர‌சியலில் இருந்து தடம் புரண்டு விட்ட தலித் கட்சிகளும், அதன் இயக்கங்களும் இப்படியான தலித் மாணவர்களின் – ஆசிரியர்களின் – கல்வி உரிமைகளின் அடிப்படை பிரச்சனைகளை கூட கையிலெடுத்துப் போராட முடியாத திராவிட பொதுப் பக்திப் பரவசத்தில் மூழ்கித் திளைப்பது அருவறுப்பான அரசியலாக இருந்தாலும், அரசாணை 44 -ஐ நடைமுறைப்படுத்த வேண்டும், இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற மறுக்கின்ற துறைகளுக்குரிய நிதியை நிறுத்த வேண்டும், இட ஒதுக்கீடு தொடர்பான வெள்ளை அறிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும், தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வேண்டும் என போராடி வரும் தலித்துக‌ளின் போராட்டங்கள் ஒரு புறம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும் இத்தகைய நடைமுறை நவீன அரசு நடைமுறைப்படுத்தும் ஒரு வகையான தீண்டாமையின் சமூகப்பாகுபாடு, அதனை கடைப்பிடிக்கும் மனப்போக்கு என்பதைத் தவிர வேறென்ன?
 கடந்த ஆட்சிக்காலங்களோடு ஒப்பிடுகையில் தலித்துகளுக்கு வழங்கப்படும் சிறப்பு உட்கூறுத் திட்டத்திலும், தலித் மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித் தொகையிலும் கூடுதலாக நிதி வழங்கி சிறப்புச் சேர்க்கும் தற்போதைய ஆட்சி முறையில் பிற்படுத்தப்பட்ட‌ சிலரால் புகுத்தப்படும் இத்தகைய ஏற்றத்தாழ்வான இட ஒதுக்கீட்டு அணுகுமுறை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் அதிகாரம‌ற்ற – வாய்ப்பு மறுக்கப்பட்ட தலித்துகளுக்கு இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கிய இடஒதுக்கீட்டின் தத்துவம் கேள்விக்குறியாகி, சமத்துவ சமுதாயம் உருவாக தடைகள் ஏற்படும். – அன்புசெல்வம். anbuselvam6@gmail.com
Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s