புத்தகங்கள்


ஒரு புதிய சாக்கடையில்
சுகிர்தா பதிப்பகம், பாளையங்கோட்டை (1997)
ஊரில் சாக்கடை இருக்கலாம்,  ஊரே சாக்கடை ஆகிவிட்டால்……. கழிவுகளுக்கு என்று ஒதுக்கிடங்கள் இருக்கலாம், கழிவுகளுக்கே சிம்மாசனங்கள் தரப்பட்டால்…….. அழகான சமுதாயத்தைக் கனவு காணும் கவிஞன் எரிமலையைப் போலத்தான் பேசுவான். சாதி, வர்க்கம், ஆணாதிக்கம், பெண்ணுரிமை, தேசியம், சமுக நீதி, திருச்சபை, அரசியல் போன்றவற்றின் விமர்சன நிழல் பிம்பங்கள் ஒரு புதிய சாக்கடையில் எரிமலைக் குழம்பாக ஓடுகிறது.
கவிக்கோ அப்துல் ரகுமான்
———————————————————————————
கொடுமை முறியும்
கலகம் வெளியீடு, சென்னை (2004)
எழுத்துக்களாய் பதிவு செய்யப்படும் எதுவும்  வரலாறாய் உயிர் பெற்றுவிடும். வரலாற்றுப் பதிவுகளுக்கு வளரும் தலைமுறையை இயக்கும் உயிராற்றல் உண்டு. பதிவு செய்யப்படாதவை எவ்வளவு உயிர்ப்புடையதாய் இருந்தாலும் காலத்தால் திரிந்தும். சிதைந்தும். அழிந்தும் போய்விடும். கலை இலக்கியத் தளங்களானாலும். இன்ன பிற தளங்களானாலும் எங்குமே ஒடுக்கப்பட்ட மக்களைப்பற்றிய பதிவுகள் இல்லை, இத்தகைய வெறுமையான ஒரு சூழலில் தான் ஒடுக்கப்பட்ட  மக்களின் சிதைக்கப்பட்ட வாழ்வை வரலாற்றுச் சுவடுகாளய் பதிவு செய்யும் அரும் பெரும் பணியில் முனைப்புடன் செயலாற்றி வருகிறார் அன்புசெல்வம், பாப்பாபட்டி-கீரிப்பட்டி தேர்தல் அரசியல், ஜல்லிக்கட்டு விளையாடத்தடை, தமிழீழ விடுதலை, திண்ணியத்தில் மலம் திண்ண வைத்தக் கொடூரம்,  கண்டதேவி தேரோட்டம், கூடங்குளம் அணு எதிர்ப்பு, பெரியார் அடையாள அரசியல், அமைப்பு சாராத உப்பளத் தொழிலாளர்கள், பணியிடங்களில் பாலியல் தொல்லை, கொத்தடிமை போன்ற கட்டுரைகள் சேரி மக்கள் சந்திக்கும் சாதிய வன்கொடுமைகளையும், சவால்களையும், எதிர் கொள்ள வேண்டிய தீர்வுகளையும் முன்மொழிகின்றன.
 தொல் திருமாவளவன்
—————————————————————————————
பரட்டை ஒரு பண்பாடு
தலித் ஆதார மய்யம் வெளியீடு, மதுரை (2005)
1980-களில் பேசத்தொடங்கிய சேரி மக்களின் இயக்க எழுச்சிக்கான பண்பாட்டு அழகியல் அடங்க மறுத்து வீறு கொண்ட போது விடுதலை உணர்வுகளால் மண் பிசையப்பட்ட தலித் விடுதலைக்கான கருத்தியல் ஒப்பனை இல்லாமல் தன் ஊடுறுவலைத் தொடங்கியது,  இச்சூழலில் தென் மாவட்ட சமவெளியில் ஆள் அரவம் இல்லாமல் தன் மீது விதிக்கப்பட்ட தீண்டாமைச் சுவர்களை உடைத்தெறிந்து சமுக. பண்பாட்டுத் தளத்தில். தானும் ஒருவனாய் ஒரு எதிர்கக்லாச்சார காந்தப் புயலை வீசி. முதன்முதலாக நாட்டுப்புறவியலின் சூத்திரங்களை சமுக மாற்றத்துக்காக செய்து காட்டிய, தஞ்சையிலும், பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மய்யத்திலும், மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையிலும் கிராமியம் என்கிற சொல்லாடலை காயடித்து விட்டு நாட்டார் என்கிற சொல்லாடலை தனக்கான அடையாளமாக  ஆதிக்கம் செய்ய முற்பட்ட மேற்படியாள்களின் தமிழ்ச்சாதி விசுவாசத்தை கடுமையாக விமர்சித்தார், எதிர்த்தார் என்கிற ஒரே காரணத்துக்காக நாட்டுப்புறவியல் வரலாற்றில் இருந்தே தூக்கி வீசப்பட்ட கிராமிய அறிஞர். டாக்டர். அருள்பணி. ஜேம்ஸ் தியோப்பிலஸ் அப்பாவு எனும் பரட்டையின் வாழ்க்கைச் சரிதை.
————————————————————————————–
விடுதலையின் வேர் காணல்
தலித் ஆதார மய்யம் வெளியீடு, மதுரை (2005)
எஸ்.டி. கல்யாணசுந்தரம், டாக்டர். கிருஷ்ணசாமி, இரா. திருமாவளவன். செ.கு, தமிழரசன், இரா. அதியமான்.  பூ.சந்திரபோசு, அரங்க. குணசேகரன், தலித் ஞானசேகரன். ஜான் பாண்டியன். பூவை. மூர்த்தி, ஆ, சக்திதாசன். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். மேலக்கால் வீரபத்திரன் என்கிற முகம்மது பிலால் ஆகிய சமகாலத்தில் வாழும் 13 தலித் தலைவர்களின் நேர் காணலை உள்ளடக்கியது.  இந்தத் தலைவர்கள் அனைவரும் தங்களின் சொந்த அனுபவம், தலித் மக்களின வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றால் உந்தப்பட்டு தலித் இயக்கச் செயல்பாட்டிற்குள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்,  தலித் அடிப்படைக் கருத்தியல் புரிதலுடன் களமிறங்கி, தொடர் ஈடுபாட்டின் காரணமாக கருத்தியல் தளத்தையும், செயல்பாட்டுக் களத்தையும் விரிவாக்கிக் கொண்டவர்கள்.
ஜான் ஜெயகரன்
————————————————————————————————————-
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கைக் குறிப்புகள்
தலித் ஆதார மய்யம் வெளியீடு, மதுரை (2005)
டாக்டர் அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறு படிக்கின்றவர்களிடம் பலவிதமான உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும் ஆற்றல் கொண்டது.  பிறந்தது முதல். இளமைக் காலம் தொட்டு இறக்கும் வரையிலும் அவருடைய வாழ்வில் நிகழ்ந்த் நிகழ்வுகளும், கல்வி, அரசியல் மற்றும் அவரது எழுத்துப் பணியின் சாதனைகளும் நம்மை மலைக்கச் செய்து, எதை செய்யத் தவறியுள்ளோம் என்பதைச் சுட்டிக்காட்டும் வழிகாட்டுதல் நுலாக அமைகின்றது.  அம்பேத்கரின் சிந்தனைகள் பரவலாக்கப்பட வேண்டும், அவரின் கருத்துக்களும். அணுகுமுறைகளும் தலித் விடுதலை நோக்கில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதன் முயற்சி இது.  அம்பேத்கர் பிறந்த‌தில் இருந்து வாழ்ந்து மறைந்த‌து வரையுள்ள அவரது வாழ்க்கைக் குறிப்புகளை ஒரு அரைமணி நேரத்தில் வாசித்து விடமுடியும் என்கிற உணர்வையூட்டுகிறது.
ஜான் ஜெயகரன்
——————————————————————————————
வரலாற்றின் வழிமறிப்பு சீகன்பால்கு
பதியம் வெளியீடு, மதுரை (2007)
எதிர்ப்பு (புராட்டஸ்டன்ட்) கிறித்துவத்தைப் பரப்பிய சீகன்பாலகுவுக்கு முன்னூறாவது ஆண்டு நினைவு விழாவைக் கொண்டாடுகிறோம் என்கிற பெயரில் தரங்கம்பாடி தலித்துகளின், தலித் கிறித்துவர்களின்  வரலாற்றை முற்றிலும் மறைத்து விட்ட, தமிழ்த் திருச்சபைக‌ளின் வரலாற்று மோசடியை, அதன் இருட்டடிப்பை அம்பலமாக்குகிறது,  தமிழக் கிறித்துவம் இதுநாள் வரையில் சாதியை வேரறுப்பதில் தோல்வியைத் தழுவி இருக்கின்றது. அதில் தலித்துகளும் தோல்வி அடைந்த‌தால் அவர்கள் கிறித்துவத்தின் மூலம் ஒரு சில‌ சாதிகள் உலக முதலாளியத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டு பயனடைவதை வெளிபடுத்துகின்றது.  மானுட விடுதலையே அடிப்ப‌டை என்பதால் பார்ப்பனியத்துக்கு எதிராக தலித்துகள் எதிர் வினையாற்றுவது போல கிறித்துவ சமுகத்தைப் பிளவுபடுத்துவதற்கு எதிர் வினையாற்றவும், தேவைப்பட்டால் அதனை விட்டு வெளியேறவும் தலித்துகள் தயாராக வேண்டும் என்கிறது.
கஜேந்திரன் அய்யாதுரை
———————————————————————————————————–
தலித் கால சாட்சியம்
பதியம் வெளியீடு, மதுரை (2008)

சமகாலச் சூழலில் எழுந்த பிரச்சனைகளை மக்கள் முன் வெளிக் கொண்டு வரும் வகையில் எழுதப்பட்டக் கட்டுரைகள் என்பதால் அவற்றை அக்காலச் சூழலுக்குள் அமர்த்தி, நிகழ்காலத்துக்குப் பொருத்தம் காண்பது அவசியம்.  நர்மதா பாதுகாப்பு இயக்கம், தலித் கலை-கலைஞர்கள், தனி வாழிடம், இட ஒதுக்கீடு, தேர்தல் அரசியல், முதுகுளத்தூர் கலவரம், தென் ஆப்பிரிக்க‌ கறுப்பின அரசியல், கையால் மலம் அள்ளுவதை எதிர்த்தல் போன்ற கட்டுரைகள் அனைத்தும் தலித்துகளின் உண்மை நிலையை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டவை.  இந்தியாவில் தலித்துகளின் உண்மை நிலையை, அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை இடைவிடாதப் போராட்டங்கள் வழியாகத்தான் தீர்க்க முடியும் என்பதை உணர்த்துகிறது.
ஜான் ஜெயகரன்
——————————————————————————————
ஆஷ் படுகொலை: மீளும் தலித் விசாரணை
புலம் வெளியீடு, சென்னை (2012)
சுதேசியம், இந்தியப் புரட்சி இயக்கம், இந்து சாதிய மனோபாவம் போன்ற கூட்டுத் தொகுப்பின் உள்ளீடுகளை காலங்காலமாக உருட்டச்சு செய்து வாஞ்சிநாதனையும், வ. உ. சிதம்பரம் பிள்ளையையும் இந்திய விடுதலையின் முன்னோடிகளாகக் காட்டும் திருநெல்வேலி சதி வழக்கு எனும் சித்தரிப்பை அம்பலப்படுத்துகிறது, உண்மையில் பத்தொன்பதாம் நுற்றாண்டின இறுதியிலும், இருபதாம் நுற்றாண்டின் தொடக்கத்திலும் திருநெல்வேலி பகுதியில் நிலிவிய சமுக சிக்கலையும், சமுக, பொருளாதார சாராம்சங்களையும் அசைபோடுகிறது. ஆஷ் கொல்லப்பட்டதை சிறையில் இருந்தே கேள்விப்பட்ட வ.உ.சி. நல்லதோர் செய்தி என்று கூறியதைப் பற்றி கூறும் ஆ. சிவசுப்ரமணியம் கடுங்குற்றவாளிகளிடமும் நட்புடன் நடந்து கொண்ட அவரே இவ்வாறு கூறினார் என்றால் எந்த அளவுக்கு ஆஷ் கொடியவனாக செயற்பட்டான் என்று நாம் யூகிக்கலாம் என்கிறார். இங்கு ஆஷ் செயற்பட்டான் என்று கூறுவதை விட கொடியவனாக அவர்களுக்குத் தெரிந்தான் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
ஸ்டாலின் ராஜாங்கம்
——————————————————————————-

தலித் இலக்கியம் விடுதலையின் திசைகள் (மொழி பெயர்ப்பு)
புத்தா வெளியீட்டகம், கோயம்புத்துர் (2008)
1996-ல் தலித் சாகித்யச்சே சவுந்தர்ய சாஸ்திரா எனும் மராத்தி மொழியில் வெளியான சரண்குமார் லிம்பாலேயின் இந்நுல் பிறகு இந்தி. குஜராத்தி. கன்னடம். ஆங்கிலம் ஆகிய பல மொழிகளிலும் வெளியாகின,  தலித் எழுத்துக்களுக்கு விளக்கம் அளிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய அழகியல் அணுகுமுறைகள் எவை? தலித் அல்லாத சாதி இந்து எழுத்தாளர்களின் எழுத்துக்களை மதிப்பீடு செய்வதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் கருத்தியல் அளவுகோலை தலித் இலக்கியத்தை மதிப்பிடுவதற்குமான அளவுகோலாக வைப்பது சரியா? முதலாவது தலித் என்பவர் யார்? இவை போன்ற நுட்பமான விவாதங்களைக் கட்டுடைத்து, தலித் அழகியல் உணர்வூட்டும் மொழி பெயர்ப்பு இது.
அலோக் முகர்ஜி
—————————————————————————————
வர்ணா (தொ)
சம்வாதா வெளியீடு, பெங்களூரு (2003)
தமிழக தலித் ஓவியர்களின் துரிகையில் கோட்பாடாகும் ஓவியங்கள் அச்சமுகத்தின் யதார்த்த வினைகளை படைப்பாகக் காட்டுகின்றன.  அழுகை, சிரிப்பு, போராட்ட வலி, உள்மன அழகியல், குறுகுறுக்கும் மவுனம், வாழ்க்கையில் வெளிப்படும் உண்மை, ஒருங்கிணையும் ஆன்மீகம் எல்லாமே ஒரு பண்பாட்டுக் கலவையாக காட்சிப்படுகிறது. ஒவ்வொன்றின் மொழிகளும், உள்ளீடும் எந்த தலையங்கத்திற்குள்ளும் புலப்படாதது.  தமிழக – கர்நாடக தலித் கலை, இலக்கியத் தளத்தின் தோழமையை உருவாக்கிய படைப்புகள் இவை.
 மார்த்தா ஜக்கிமோவிக்ஸ்
————————————————————————————
தலித்துகளும், வன்கொடுமைகளும் (தொ)
தலித் ஆதார மய்யம் வெளியீடு, மதுரை (2005)
தமிழகத்தில் உள்ள 1430 காவல் நிலையங்களில் ஆண்டுக்கு 7 லட்சம் வழக்குகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பதிவாகின்றன, இதில் தலித் மீதான வன்கொடுமை வழக்குகள் மட்டும் ஒரு விழுக்காடு என வைத்துக் கொண்டாலும் ஓராண்டுக்கு 7 ஆயிரம் வழக்குகள் பதிவாக வேண்டும், அவ்வாறு பதிவாவதில்லை என்பதை தேசிய எஸ்,சி/எஸ்.டி ஆணையம்  மாநில அரசுகளை பலமுறை கண்டித்த போதிலும், 1992 முதல் 2002 வரை தலித்துகளுக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு சில வன்கொடுமைகளின் உண்மைத் தகவல்கள் சிலவற்றை இந்நுல் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக மேலவளவு, கொடியங்குளம், காளப்பட்டி ஆகிய கலவரம் தொடர்பான கள பகுப்பாய்வுகளும் இடம் பெற்றுள்ளன.
ஜான் ஜெயகரன்
———————————————————————————
தழும்புகள் (தொ)
தலித் ஆதார மய்யம் வெளியீடு, மதுரை (2005)
தலித்துள் மீதான வன்கொடுமைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது,  அவர்கள் மீது தொடுக்கப்படுகின்ற வன்கொடுமைகள் பல உணமைகளை நம் முன் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.  இந்திய சட்டங்களும், நீதியும், ஆட்சியும், அதிகாரமும், சாதி உணர்வாளர்களின் பிடியில் சிக்கியிருக்கின்றன.  அத்தகையோரின் துணையோடுதான் வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் வன்கொடுமைப் பட்டியல்கள் அனைத்தும் தமிழகத்தில் தலித்துகள் அனுபவித்து வருகின்ற ஒட்டுமொத்த வன்கொடுமைச் சூழலையும் வெளிப்படுத்துவதாக இல்லை என்பது உண்மை. இருப்பினும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ள வன்கொடுமைப் புள்ளி விப‌ரங்கள் நம்மை சில முடிவுகளுக்கு இட்டுச் செல்கின்றன.  அதாவது தலித் மக்களுக்கும்,  தலித் இயக்கங்களுக்கும் தற்காப்பு உணர்வையும். விடுதலைக்கான செயல்திட்டத்தையும் உருவாக்குவதற்காக.
ஜான் ஜெயகரன்
Advertisements

One Response to புத்தகங்கள்

  1. J.SURESH PERRABA,M.A.,M.Phill D.M.SCHOOL, MANDHARAKUPPAM சொல்கிறார்:

    SUPPER,
    SUPPER,
    SUPPER. ? !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s